search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அய்யப்பன் உருவ தத்துவம்!
    X

    அய்யப்பன் உருவ தத்துவம்!

    • அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும்
    • அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    அய்யப்ப உருவ தத்துவம்

    அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசன முறையாகும்.

    இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை.

    இந்நிலையில் உடல் வில் போல் ஆடும் தன்மையுடையது.

    குதி கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.

    இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மரந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும்.

    அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுரபைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.

    ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்த சின் முத்திரையை "அறிவடையாளம்" என்பர்.

    இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல்,

    பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.

    மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம் பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.

    அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

    அய்யப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும்.

    Next Story
    ×