search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு"

    • 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
    • இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.

    இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. 


    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18,171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடகா கோரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே வறட்சி, நிவாரண பணிக்காக கர்நாடகாவுக்கு மத்திய அரசு 3, 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக் குறைவாகும்.

    இந்நிலையில், வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக கூறி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டிகே சிவக்குமார், மந்திரிகள் ஆகியோர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்ட அனைவரும் கையில் சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
    • கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.

    ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.3498.82 கோடி அளித்திருக்கிறது.

    அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்
    • ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • வெள்ள நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 38,000 கோடி
    • உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வருபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி.

    இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

    நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி.

    ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

    தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது.

    எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.

    தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க.

    அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
    • நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    எடப்பாடி:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.

    தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.

    இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.

    மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • 2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
    • மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    சென்னை

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு நிவாரணம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

    2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.

    வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள்.

    மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்று கூறினார்.

    • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.

    மதுரை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

    பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.


    • வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிப்பு.
    • ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவு.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பிரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

    மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது
    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது வினாத்தாள்களை எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம்

    ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.

    இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
    • தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்று வேண்டுகோள்.

    ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டாளர்கள் இரண்டு பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் இருப்பதாக தடை விதித்துள்ளது.

    இதை அடுத்து, நாட்டில் உள்ள எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகளின் அனைத்து உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதில்,"நாட்டின் அனைத்து உணவு ஆணையர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மசாலாப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு நாட்களில், நாட்டின் அனைத்து மசாலா உற்பத்தி ஆலைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்படும்.

    எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் மட்டுமின்றி, அனைத்து மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் மாதிரிகள் எடுக்கப்படும். இன்னும் 20 நாட்களில் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    தடை குறித்து ஹாங்காங், சிங்கப்பூர் கூறுவது என்ன ?

    ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டாளர்கள், "அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அளவுகளில்" எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறப்படும் இந்த இரண்டு மசாலா பிராண்டுகளின் நான்கு பொருட்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மக்களை எச்சரித்துள்ளனர். எத்திலீன் ஆக்சைடு புற்றுநோய்க்கான சர்வதேச அமைப்பால் 'குரூப் 1 கார்சினோஜென்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    எம்டிஎச்-ன் மூன்று மசாலா பொருட்கள் -- மெட்ராஸ் கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), சாம்பார் மசாலா (கலவை மசாலா தூள்), மற்றும் கறி பொடி (கலவை மசாலா தூள்) -- எவரெஸ்டின் மீன் கறி மசாலாவுடன் "ஒரு பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு" உள்ளது.

    எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மசாலா வாரியத்திடம், தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ×