search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

    www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.

    இதனால் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது.

    காலையில் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்று தங்கம் சவரன் 720 ரூபாய் அதிகரித்து ரூ.53,640-க்கும் கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
    • தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 57). அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.

    நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். அங்கு நேற்று மதியம் 2.10 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இதில் ஆலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தன. 8 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின. வெடி விபத்து நடந்ததும் அறைகளில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓடினர். அவர்களில் சிலர் வெடிவிபத்தில் சிக்கினர். பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டனர்.

    இந்த பயங்கர வெடி விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இதில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் சிலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில் ஆலை ஒப்பந்ததாரார் முத்து கிருஷ்ணனை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
    • அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.

    இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி 11-ந்தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.

    இந்தநிலையில் அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 88 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

    ஈரோடு 106.52, நாமக்கல் 103.1, மதுரை விமானநிலையம் 102.92, திருச்சிராப்பள்ளி 102.74, சேலம் 101.84, மதுரைநகரம் - 101.48, பாளையங்கோட்டை 101.12, திருப்பத்தூர் 100.76, திருத்தணி 100.04 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    வால்பாறை 66.2, கொடைக்கானல் 71.06, குன்னூர் 72.5, உதகமண்டலம் 75.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு.

    தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது.

    இதையடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. 

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு,
    • காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

    உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் நெல்லையில் இருந்தும் சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    இந்நிலையில், இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக புறப்படும் என்று தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு பயணம் மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

    • ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உள்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
    • இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    சென்னையில் ஐந்து வயது சிறுமியை ராட்வீலர்ஸ் வகையைச் சேர்ந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் தமிழக அரசு 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் "ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உள்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. கலப்பினங்கள் இறக்குமதி, இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்படுகிறது. இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்கள். இது பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

    இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

    சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை யால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும். வாய் மூடியிருக்கும் வகையில் 'மசூல்' என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் முகத்தில் அணிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தொடர்பாக பொது மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி.
    • விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.

    ஆலந்தூர்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், என்ஜினீயர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானங்களை இயக்குவதில் சிக்கல் உருவாகி நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அந்த விமான நிறுவன ஊழியர்களின் போராட்ம் நீடித்து வருகிறது. ஊழியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக பல்வேறு நகரங்களில் அந்த நிறுவனத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து உள்ளதால் மொத்தம் 8 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளனர்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்விமானம், அதைப்போல் நள்ளிரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் விமானம், இன்று மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம்,இதேபோல் இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து ஆகி உள்ளன.

    இதேபோல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் விமானம், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலையில் புறப்பட்டு செல்லும்விமானம், இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் விமானம், இன்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தயாராக இருந்தது. அதில் 362 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைவரும் சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.

    விமானம் புறப்பட தயாராக இருந்த போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வரை இதனை சரிசெய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்த அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    • அதிக இடங்களில் வெற்றி பெற பாஜ.க. இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் முதல் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    4-வது கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் 93 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்தது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்த லுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 நாட்களாக பிரசாரம் தீவிரமானது.

    தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய உள்ளது.

    பிரசாரத்துக்கு 2 நாட்களே அவகாசம் இருப்பதால் 96 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆனால் நவீன் பட்நாயக்கிடம் இருந்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த மாநி லங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜ.க. இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்கு 4-வது கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாஜ.க. கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் முக்கியமாக கருதி, பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    ×