search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது.
    • வட்டித்தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
    • இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 20651 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 10593 மாணவர்கள், 10058 மாணவிகள் என மொத்தம் 18679 மாணவர்கள் 94 மையங்களில் தேர்வு எழுதினர்.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 10,598 மாணவர்களில் 9270 பேரும், 10058 மாணவிகளில் 9409 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 18679 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கமுதி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 12,716 மாணவர்கள் 12,425 மாணவிகள் என மொத்தம் 25,141 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 12716 மாணவர்களில் 11345 பேரும், 12425 மாணவிகளில் 11642 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 22987 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 6.07 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபாய சங்கிலியை இழுத்தும் ரெயில் நிற்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
    • விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ரெயில்வே துறை அறிவித்து இருந்தது.

    சென்னை:

    கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து கொல்லம் ரெயிலில் கர்ப்பிணி பெண் கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். விருத்தாசலம் அருகே ரெயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்தும் நிற்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    பக்கத்து பெட்டியில் இருந்த அபாய சங்கலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ரெயில்வே துறை அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,

    ரெயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை என்றும் ரெயில்வே விசாரணையில் அபாய சங்கிலி சரியாக இயங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

    கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாக தெரிவித்துள்ளது.

    • கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக போலீசார் கூடுதல் தடயங்களை தேடுவதற்காக அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

    கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
    • பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன.

    சென்னை:

    அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    தங்க நகை வாங்க முடியாதவர்கள் கையில் இருக்கும் சேமிப்பை வைத்து ஏதாவது சிறிய தங்க நாணயத்தையாவது வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் அட்சய திரிதியைக்கு நகைக்கடைகளில் தங்கம் அமோகமாக விற்பனையாகிறது.

    இந்த ஆண்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திரிதியை தினம் ஆகும். அட்சய திரிதியை இன்று காலை 6.33 மணிக்கு தொடங்கி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் விற்பனை அமோகமாக நடந்தது.

    சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    மேலும் நகைக்கடைகளில் இன்று கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் கடந்த 15 நாட்களாகவே நகைக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த நகைகளை தேர்வு செய்து 25 சதவீத பணம் செலுத்தி முன்பதிவு செய்து வைத்திருந்தனர். அவர்கள் அட்சய திரிதியையான இன்று நகைக்கடைகளுக்கு சென்று மீதமுள்ள பணத்தை செலுத்தி தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை வாங்கினார்கள்.

    அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் கூடியது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த அன்று இருந்த குறைந்த விலைக்கே தங்கத்தை வாங்கி மகிழ்ந்தனர். முன்பதிவு செய்யாதவர்கள் இன்றைய விலைக்கு தங்கத்தை வாங்கினார்கள்.

    மேலும் பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன. சில கடைகளில் தங்க நகைகள் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி, வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டன. சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டன. பழைய தங்கத்தை இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக்கொள்ளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. இந்த சலுகைகளை பெற்று வாடிக்கையாளர்கள் நகை வாங்கினார்கள்.

    தங்க நாணயம் வாங்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடைகளில் தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் வரிசையில் சென்று தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர். அட்சய திரிதியை விற்பனைக்காக சென்னையில் உள்ள பெரிய நகைக்கடைகள் எல்லாமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைக்கடைகள் எல்லாமே விளக்கொளியில் ஜொலித்தன.


    தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. அனைத்து நகைக்கடைகளிலுமே இன்று தங்கம் விற்பனை மிகவும் அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. தி.நகர் உள்ளிட்ட சென்னையில் உள்ள முக்கியமான வணிக பகுதிகள் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இதனால் நகைக்கடைகள் அதிகம் உள்ள இடங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    நகைக்கடைக்காரர்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக அட்சய திரிதியை சலுகைகளை இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு வழங்குகிறார்கள். இதனால் இந்த 3 நாட்களும் தங்கம் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்சய திரிதியைக்காக நகை வாங்க விரும்புபவர்கள் இன்று இரவு வரை நகை வாங்க வருவார்கள் என்பதால் இன்று நள்ளிரவு வரை நகைக்கடைகளை திறந்து வைத்து நகைகளை விற்பனை செய்யவும் நகைக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் சென்னையில் சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தங்க நகைகள் வாங்க விரும்புபவர்களுக்கு வீடுகளுக்கு வாகன வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

    அட்சய திரிதியை விற்பனை குறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    அட்சய திரிதியையொட்டி இன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். இன்று காலையில் இருந்தே நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    வாடிக்கையாளர்கள் பொறுமையாக நகை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.


    வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து இன்று நள்ளிரவு வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடிவு செய்து உள்ளோம். இந்த ஆண்டு அட்சய திரிதியைக்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. வைர நகைகளும் புதிய டிசைன்களில் அதிக அளவில் உள்ளன.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அப்போது நகை விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை நகருக்குள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல தடை இல்லை என்பதால் தேர்தல் நேரத்தில் நகை வாங்குவதை தவிர்த்தவர்கள் இப்போது நகை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்க நகை விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரவு நேரத்தில் நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விட வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளில் கூடுதலாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையானது. இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

    கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

    சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்கள் தொண்டர்களையும் பாதுகாப்புக்கு அனுப்பி உள்ளனர். சுமார் 10 முதல் 20 பேர் தினமும் சுழற்சி முறையில் விடிய விடிய காவல் இருக்கிறார்கள்.

    எந்த நேரத்தில் கேமராக்கள் பழுது பட்டாலும் உடனடியாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தங்கள் கட்சி தலைமைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிக் கிறார்கள்.

    ஒரே கொட்டகையில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து இருப்பதால் ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து பேசி கொள்கிறார்கள். உணவுகளையும் பரிமாறி கொள்கிறார்கள்.

    இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். இது தவிர மூன்று வேளையும் உணவும், நொறுக்கு தீனிகளும் வழங்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஓட்டு எண்ணும் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை தொடரும் என்று கூறினார்கள்.

    • சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    பெருந்துறை:

    பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கை உடைக்கப்பட்ட நிலையில் கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை மத்திய சிறையில் உள்ள தனது மகன் சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை சவுக்கு சங்கரை கோவை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சவுக்கு சங்கர் தன்னுடைய கை வலிப்பதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்து க்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் அங்கிருந்து நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 9.45 மணி அளவில் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சவுக்கு சங்கரை பார்த்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரை பேசவிடாமல் போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதனை ஒரு காவலர் கையில் தூக்கி பிடித்த படி சென்று கொண்டிருந்தார்.

    • சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.
    • தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன்.

    ரெட்டியார்சத்திரம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மண்டவாடி புதூர் கிராமத்தை சேர்ந்த காவ்யாஸ்ரியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியில் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளியில் படித்த மாணவியான இவரது தந்தை கருப்புச்சாமி விவசாயி. தாய் ரஞ்சிதம் குடும்பத்தலைவியாக உள்ளார்.

    மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். தனது வெற்றி குறித்து மாணவி கூறுகையில்,

    சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். குறிப்பாக 10-ம் வகுப்பு வந்தவுடன் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமுடன் படித்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

    தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன். இதனால் எந்த சிறப்பு வகுப்பிற்கும் நான் செல்லவில்லை. எனது படிப்பிற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் தாளாளர் மலர்விழி செல்வி, ஆசிரியர்கள் ஆகியோர் ஊக்கமளித்து என்னை சிறந்த மாணவியாக உருவாக்கி உள்ளனர்.

    எதிர்கால லட்சியம் என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டர் ஆகவேண்டும் என்பதே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதை தொடர்ந்து பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு பாடங்களை கொண்ட 3-வது குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவக்கூடும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

    • 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
    • மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இத்தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    அதே போல் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்வில் பெற்று பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.

    அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    விரைவில் நாம் சந்திப்போம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×