search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10-ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம்- சாதனை மாணவியின் கலெக்டர் கனவு
    X

    சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    10-ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம்- சாதனை மாணவியின் "கலெக்டர்" கனவு

    • சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.
    • தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன்.

    ரெட்டியார்சத்திரம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மண்டவாடி புதூர் கிராமத்தை சேர்ந்த காவ்யாஸ்ரியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியில் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளியில் படித்த மாணவியான இவரது தந்தை கருப்புச்சாமி விவசாயி. தாய் ரஞ்சிதம் குடும்பத்தலைவியாக உள்ளார்.

    மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். தனது வெற்றி குறித்து மாணவி கூறுகையில்,

    சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். குறிப்பாக 10-ம் வகுப்பு வந்தவுடன் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமுடன் படித்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

    தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன். இதனால் எந்த சிறப்பு வகுப்பிற்கும் நான் செல்லவில்லை. எனது படிப்பிற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் தாளாளர் மலர்விழி செல்வி, ஆசிரியர்கள் ஆகியோர் ஊக்கமளித்து என்னை சிறந்த மாணவியாக உருவாக்கி உள்ளனர்.

    எதிர்கால லட்சியம் என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டர் ஆகவேண்டும் என்பதே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×