search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சாந்தி பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் மற்றும் ஆயந்தூர் ஆகிய இரு கிராமங்களுக்கு ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரவு உணவை அருகில் உள்ள உணவகத்தில் இருந்து வி.ஏ.ஓ. சாந்தி வாங்கி வந்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் அதே கடையில் உணவு வாங்கினார். அப்போது ராஜீவ் காந்திக்கு கட்டி வைத்த உணவை கிராம நிர்வாக அலுவலர் சாந்தி எடுத்துக் கொண்டு வந்தாக கூறி, வாக்கு சாவடி மையத்திற்கு சென்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியினை சரமாரியாக தாக்கினார். இதைக்கண்ட சக ஊழியர்கள், தி.மு.க. கவுன்சிலரை தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காணை போலீஸ் நிலையத்தில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தி, தன்னை அவதூறாக பேசி தாக்கி, மானபங்கம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார். ராஜீவ்காந்தியை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகாரளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது.
    • 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிகளவில் விமானங்கள் வருவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உடமைகள், பாஸ்போர்ட் போன்றவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

    பரபரப்பாக காணப்படும் விமான நிலையத்தில் நேற்றிரவு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது. அதனை எடுத்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி யாரோ ஒருவர் பரிசோதனையின் போது சிக்கி கொள்வோம் என பயந்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவினை ஆய்வு செய்தனர். அதில் முகம் தெளிவாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து மற்ற கோணங்களில் பதிவான கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி (வயது 38). இந்தநிலையில் தான் பணியாற்றிய கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் சிலரை மூளைச்சலவை செய்துள்ளார்.

    மாணவிகளின் குடும்ப வறுமை மற்றும் ஏழ்மை நிலையை தெரிந்துகொண்டு அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு வழிநடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவி, அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் 10.15 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வரவில்லை. இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக முடியாத நிலை இருப்பதாக அவரது வக்கீல் சார்பில் மனு வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்படுவதாக இருந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

    • சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
    • வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 ஆகவே இருந்தது. தற்போது ரூ.80 -ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இடங்களுக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரோட்டோர இளநீர் வியாபாரிகளுக்கு வாரத்துக்கு 200 இளநீர் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது. அதே நேரத்தில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது.

    இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம் என்று இளநீர் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சிறிய ரக இளநீர் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் விலை முன்பு ரூ.35 ஆக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இளநீரின் திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதனை வாங்கி குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.
    • மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, தற்போதைய கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டை விட இப்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு காணப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

    கோடைக்காலத்தில் மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாரலாம், கைப்பம்புகளை அமைக்கலாம், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்யலாம், நீர்த்தொட்டிகளை அமைக்கலாம், குடிநீர் குழாய்களைப் பராமரிக்கலாம் இப்படி தண்ணீர் கிடைப்பதற்கு உரிய பணிகளை உடனடியாக மேற்கொண்டால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

    தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு விவசாயிகளின் ஆலோசனையை, கோரிக்கையை கேட்கலாம். எனவே தமிழக அரசு, இந்த கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சென்னை பெருநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பிடித்து எரிவதையோ, சிறு தீப்பொறி மூலம் விபத்து ஏற்படுவதையோ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வரை குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் பாலமுரளி தெரிவித்தார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இந்த இரண்டு கிடங்குகளிலும் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    பெருங்குடியில் 225.16 ஏக்கர் குப்பை கிடங்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் 2021-ம் ஆண்டு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே கட்டுப்படுத்தப்பட்டது. தனியாரிடம் இருந்து 3 டேங்கர்கள் வாடகைக்கு எடுத்து குப்பை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் 2 கிடங்கிலும் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குப்பை குவியல்களுக்கு இடையே 3 மீட்டர் அகலமுள்ள வழித்தடங்களும் தீ பரவாமல் தடுக்க அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அல்லது அதற்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

    இது தவிர தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பீடி, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குப்பை கிடங்கில் புகை ஏற்பட்டால் உடனடியாக அதனை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலம் முடியும் வரை குப்பை கிடங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

    • மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை பூ சீசன் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து அதிகரித்துள்ளது.
    • பிச்சிப்பூ, கனகாம்பரம் ஒரு கிலோ-400 ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ-250 ரூபாய்க்கும் செவ்வந்தி-180 ரூபாய் க்கும், சம்மங்கி-150 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ்-180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழ் வருடப்பிறப்பு,சித்திரை திருவிழா முன்னிட்டு மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் தற்போது பூக்கள் வரத்து அதிகரிப்பால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து உள்ளது.

    கடந்த வாரங்களில் மதுரை மல்லிகைப்பூ கிலோ 600 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பாதியாக குறைந்து இன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதே போல் பிச்சிப்பூ, கனகாம்பரம் ஒரு கிலோ-400 ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ-250 ரூபாய்க்கும் செவ்வந்தி-180 ரூபாய் க்கும், சம்மங்கி-150 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ்-180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை பூ சீசன் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை பாதிக்கு பாதியாக குறைந்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
    • அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருவதாக கூறிக் கொண்டு 'சூட்டோ பெட்ரின்' போதைப் பொருளை கடத்திய ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த 5 பேரை தவிர போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டது.

    இது தொடர்பாக அவரோடு தொடர்பில் இருந்தவர்களை அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2-வது முக்கிய புள்ளிக்கும் அமலாக்கத்துறையினர் குறி வைத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த மேலும் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அடுத்த கட்ட விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    அமீரை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் நபர் அரசியல் பிரமுகர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக்குக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படும் அந்த அரசியல் பிரமுகரிடம் அமலாக்கத்துறையினர் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகரிடம் முறைப்படி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர். அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இருக்கும் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

    தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.

    இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
    • காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    கவுண்டம்பாளையம்:

    கோவையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. சில நாட்களாக கோவையில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

    கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகள், வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள டிரம்களில் உள்ள தண்ணீரையும், அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வருகிறது.

    வனவிலங்குகளின் தாகத்தை போக்குவதற்காக வனத்துறை சார்பில் வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் தாகத்திற்காக தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளனர்.

    அந்த தொட்டிகளில் எப்போதும் தண்ணீரை ஊர் பொதுமக்கள் நிரப்பி வைத்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அந்த தொட்டியில் தண்ணீரை குடித்து விட்டு சென்று வருகின்றன.

    நேற்று மாலை குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    அந்த யானைகள் ஊர் எல்லையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஆனந்தத்துடன் அதனை நோக்கி ஓடி வந்தன. பின்னர் யானைகள் தண்ணீரை குடித்ததுடன், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்து கொண்டது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார்.
    • தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கி அ.தி.மு.க. தேர்தலை சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் தனித்தன்மையை காப்பாற்றவும், தனது தனித்துவத்தை நிலை நாட்டவும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில் 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார். கட்சியினர் புத்துணர்ச்சியுடன் செயல்படும் வகையில் அ.தி.மு.க.வில் உள்ள 2½ கோடி தொண்டர்களுக்கும் விரைவில் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்குவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது புகைப்படம், பெயர், கையெழுத்து ஆகியவற்றுடன் உறுப்பினர் அட்டைகளை தயாரிக்க அவர் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த பணிகள் நிறைவு பெற்று அட்டைகள் தயாராக உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

     

    அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அட்டைகளை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், தங்களது பகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய அட்டைகளை வழங்க உள்ளனர்.

    ×