என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர்.
    • இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

    சென்னை:

    அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8 ஆயிரம் நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் கைது செய்யப்பட்ட நர்சுகளை வெளியேற்றி ஊரப்பாக்கத் தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    நேற்று இரவு மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நர்சுகள் நடந்தே மீண்டும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அடைந்து அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.

    அதையடுத்து கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர். இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

    இது குறித்து சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறும்போது, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு எங்களை மிரட்டுகிறது. பணி நிரந்தரம் செய்ய பணமில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

    • தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன்.
    • தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும்.

    சென்னை:

    சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாக அரங்கில் "தமிழ் கற்கலாம்" என்ற தலைப்பில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி பட்டறை தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ பயிற்சி தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகும் நிலையில் பலரும் அதை பயன்படுத்திக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

    பூ, மரம் என இருப்பது போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல நாம் அனைவரும் ஒன்று தான். யாரும் தனிப்பட்டவர்கள் கிடையாது.

    நீர், மரம், பூமி என அனைத்தையும் வணங்க வேண்டும் என ரிஷிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் நம் ஒற்றுமையை பறித்து விட்டார்கள். உடலில் கை, கால் என அனைத்தும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றானவர்கள்.

    வடமாநிலத்தவர்கள் தென் மாநிலத்தவர்கள் பற்றி குறைவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தினோம். அது போல் இதுவும் ஒரு புது முன்னெடுப்பு தான்.

    தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன். தொடர்ந்து தமிழில் பேசுவதை கேட்டேன், செய்தித்தாள்கள் படித்தேன், இப்போது முடிந்தவரை தமிழில் பேச முயல்கிறேன். நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதன் மூலம் கற்றுக்கொள்வது சுலபமாகி விட்டது.

    மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்கும். கலாச்சாரங்களை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் தொடர்ந்து தமிழ் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லுங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமோ படிக்க வைக்க உதவுகிறேன். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன அவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
    • தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

    சென்னை:

    சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பட்டியலை பொறுத்தளவில் அதிலுள்ள சிறு பிரச்சனைகளை களைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நின்றார். அதாவது, வாக்களிக்கின்ற உரிமை இருக்கின்ற எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக் கூடாது, வாக்களிக்க தகுதி இல்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாகும்.

    இந்த தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் பாகம் வாரியாக முகவர்களை நியமித்த ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். எங்கள் முகவர்கள் களத்திற்கு சென்று வாக்களிக்கின்ற உரிமையுள்ள எவரையும் விடுபடாமல் பாதுகாப்போம். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி தலைவர், வார்த்தைகளை கொட்டுகின்ற போது அந்த வார்த்தைகளை தகுதியான கருத்துக்களை கூறுகின்றதா என்று ஆராய வேண்டும்.

    அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் தி.மு.க. பக்கம் இருந்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தான் திருடி பிறரை நம்பாள் என்ற பழமொழி இந்த கூற்றுக்கு உகந்ததாக இருக்கும்.

    திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதோடு, 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி காட்டி தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும். இது அனைத்தையும் முருகப் பெருமான் உணர்ந்து எங்கள் முதலமைச்சரோடு கை கோர்த்து கொண்டிருக்கிறார். எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.

    இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களை இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் எந்த பிரிவினைவாதத்திற்கும் இடம் தர மாட்டார் என்பது சீமானுக்கு தெரியும். தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்றார். 

    • விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
    • திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது.

    தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஐயோ பாவம் தவிர விஜய்க்கு வேறு என்ன சொல்ல முடியும்.

    விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் (செங்கோட்டையன்) ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார்.

    அவர் சேர்ந்ததனால், ஏதோ அம்மா உடன் இருப்பதுபோல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார்.

    செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.

    திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது.

    கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.
    • கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.

    அங்கு மாலை 6 மணிக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் படத்திறப்பு நிகழ்ச்சி கலைஞர் கோட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண அரங்கில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் நடைபயிற்சி சென்றார். பின்னர் நாகை துறைமுகத்துக்கு சென்று அங்கு பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து அவர் நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் நாகை இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போன்று நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    நாகூர் ஹனீபா, அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றவர். கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது. ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே இறைவன் என வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. வைக்கம் நூற்றாண்டு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா என பல்வேறு நூற்றாண்டு விழாக்களை தி.மு.க. அரசு கொண்டாடி உள்ளது.

    இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த பேராட்டம் தான் கருணாநிதியையும், நாகூர் ஹனீபாவையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து அன்று போராடினோம். அதேபோல் தற்போது வேறு வழியில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என உறுதியாக கூறுகிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விநிதி என்கிறது மத்திய அரசு. இப்படி பல்வேறு வழிகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.

    தனது குரல் வளத்தால் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் நாகூர் ஹனீபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு முதலமைச்சர் நாகூர் ஹனீபா தெரு என பெயரிட்டார். நாகூர் ஹனீபா மறைந்தபோது கலைஞர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் நாட்டை மதநல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக வைத்திருக்க வேண்டும். தி.மு.க. அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. நாகூர் ஹனீபாவின் பாடல்களை மதுரை ஆதீனம் சிறப்பாக பாடி காட்டுவார். தமிழகம் என்றென்றும் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காமராஜர் மக்கள் கட்சி என்ற கட்சியை தமிழருவி மணியன் தொடங்கினார்.
    • காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் இருந்தார்.

    காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இதனிடையே, தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.

    ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழருவி மணியன் முக்கிய நிர்வாகிகளுடன் காமகவை தமாகாவில் இணைத்தார். அப்போது பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலம்" என்று தெரிவித்தார்.

    தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.

    • முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
    • மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவில் ரெட்டியார்பட்டி யில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மின்னும் விளக்கொளியில் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கிருந்தபடி ரூ.72.10 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.5.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் ரூ.3½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம், பாளையங்கோட்டையில் ரூ.1.69 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு பகுப்பாய்வு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மேலும் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் ரூ.1.70 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.182.74 கோடியில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டிடம் உள்பட ரூ.357 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    50 புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 45 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு ரூ.101.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறாக நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 22-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ் செல்வி, நிஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை தமிழ் செல்வியை பள்ளிக்கு அனுப்புவதற்கு தாய் ஐஸ்வர்யா, தனது 4 இரண்டாவது மகள் நிஷாவையும் கூடவே அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது பள்ளி பஸ் வந்த உடன் தமிழ் செல்வியை ஏற்றி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் 2 வயது நிஷா சிக்கி உயிரிழந்தார்.

    மகள் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்ததை கண்டு தாய் பதறி போய் கதறினார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும்.
    • வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    அப்போது மாவட்டக்கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1847 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.

    ×