என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
- தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.
மதுரையில் 'தமிழ்நாடு வளர்ச்சி' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
* ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவசரம் என உணர்ந்தோம்.
* உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தேன்.
* தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியம்.
* பரவலான வளர்ச்சி என்பதை எங்களது செயல்கள் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறோம்.
* முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கினோம்.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீத முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
* மாநிலத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வர்.
* மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் கூறவேண்டும்.
* கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை.
* இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுத வேண்டும்.
* தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.
* தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
* விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் 1 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை.
* தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக மதுரை மாறி வருகிறது என்றார்.
- வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார்.
இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன் இல்லத் திருமண நிகழ்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.
இதன் மூலம் 56 ஆயிரத்து 766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இவற்றைத் தொடர்ந்து, இன்று மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், ரூ. 3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றி உள்ளார்.
மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுதவிர மதுரையில் 2.4 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.216 கோடி மதிப்பீட்டில் கட்டி 15.7.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு உலகப் புகழ்ப்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் 5 தளங்களுடன் கூடிய மாபெரும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி 24. 1. 2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்குப்பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.
- ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- மேம்பாலத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய மேம்பாலம் சிவகங்கை மாவட்டத்தையும், மதுரை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.

முன்னதாக, மதுரை கருப்பாயூரணி பகுதியில், மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான முருகவேல் ராஜன் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
- மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
- திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06108), நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06107), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
- மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன
உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர்.
இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன.
இந்நிலையில், இன்றும் இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்படுவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.
- பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது.
மண்ணடி:
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து கூறுகையில்,
வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த செயல் நடைபெறலாம், தமிழ்நாட்டில் நடக்காது.
சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.
சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது.
பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது என்றார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
- வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.
பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் நேற்று 06.12.2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது.
- த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
- விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்அரங்கத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதன்பின் எந்தவொரு சந்திப்பும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே, வருகிற 16-ந்தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு ஆட்சியரை சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்தார்.
ஈரோட்டில் வருகிற 16-ந்தேதி விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,
* த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
* விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.
* தனியார் இடம் தேர்வு செய்திருக்கிறோம், ரோடு ஷோ தவிர்த்திருக்கிறோம் என்றார்.
- வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
- தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம்..!
தங்கத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களை கேட்கவே வேண்டாம். புதுப்புது டிசைன்களில் தங்கம் வாங்கி அணியனும்னு என்று ஆர்வம் கொள்வார்கள். இளம்வயது பெண்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து நகை எடுப்பார்கள். திருமணம் ஆன பெண்களோ தனக்கோ அல்லது தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு என நகை வாங்குவார்கள்.
இப்படி சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை, திருமணம் போன்றவற்றிற்கு தங்கம் பயன்படும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு 20 சவரன், 50 சவரன் என வசதிக்கேற்ப பெற்றோர்கள் நகை அணிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.

இப்படிப்பட்ட தங்கம் இரு விதமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 22 கிராட், 24 கிராட் என்று... (இதனை சாதாரண நகை என்றும் 916 நகை என்றும் சொல்வர்). அரசாங்கம் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதியில் இனி சாதாரண நகை என்று சொல்லப்படும் 22 கிராட் நகை விற்கக்கூடாது. 24 கிராட் முத்திரையிடப்பட்ட நகை தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று. இதனால் ஏழை மக்கள் சிரமம் அடைந்தனர்.

சரி அதுபோகட்டும் என்று பார்த்தால், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையானது. ஆண்டின் தொடக்கத்தில் சற்று தான் உயர்ந்தது என்று பரவாயில்லை என்று தோன்றியது அன்று...

ஆனால் இன்று அதன் தொடக்கமாக தங்கம் விலை உச்சத்தில் விற்பனையாகிறது. அதாவது வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாத இறுதியில் விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:-
| மாதம் | கிராம் | சவரன் | கிராம் | பார் வெள்ளி |
| ஜனவரி | ரூ.7,730 | ரூ.61,840 | ரூ.107 | ரூ.1,07,000 |
| பிப்ரவரி | ரூ.7,960 | ரூ.63,680 | ரூ.105 | ரூ.1,05,000 |
| மார்ச் | ரூ.8,425 | ரூ.67,600 | ரூ.113 | ரூ.1,13,000 |
| ஏப்ரல் | ரூ.8,980 | ரூ.71,840 | ரூ.111 | ரூ.1,11,000 |
| மே | ரூ.8,920 | ரூ.71,360 | ரூ.111 | ரூ.1,11,000 |
| ஜூன் | ரூ.8,915 | ரூ.71,320 | ரூ.119 | ரூ.1,19,000 |
| ஜூலை | ரூ.9,170 | ரூ.73,360 | ரூ.125 | ரூ.1,25,000 |
| ஆகஸ்ட் | ரூ.9,620 | ரூ.76,960 | ரூ.134 | ரூ.1,34,000 |
| செப்டம்பர் | ரூ.10,860 | ரூ.86,880 | ரூ.161 | ரூ.1,61,000 |
| அக்டோபர் | ரூ.11,300 | ரூ.90,400 | ரூ.165 | ரூ.1,65,000 |
| நவம்பர் | ரூ.11,800 | ரூ.94,400 | ரூ.192 | ரூ.1,92,000 |
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு ஏற்ற, இறக்கங்கள் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து இன்று (06-12-2025) முறையே ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும் ஒரு கிராம் ரூ.12,040-க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனி விலை குறையுமா? என்றால் அது சாத்தியமே இல்லை தான் என்கிறார்கள். மேலும் இனி பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்ற தகவலை சொல்லும் போது இடி இறங்கியது போல் இருந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்தே செயல்படுவதே நல்லது.
- ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
- தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
அவரை தொடர்ந்து, அவரது மனைவி டாக்டர் சவுமியா அன்புமணி, 'தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைக்காமல் இருக்கும் 10 முக்கிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ்நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்திடுவதற்கும் விழிப்புணர்வு பிரசார பயணமாக சவுமியா அன்புமணியின் சுற்றுப்பயணம் இருக்கும் என பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சவுமியா அன்புமணி தலைமை தாங்கி காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அங்கு மேடையில்சவுமியா அன்புமணி பேசியதாவது:-
அழகு பெண்களே.. சிங்கப் பெண்களே.. உங்கள் அனைவருக்கும் வணக்கம். காஞ்சிபுரம் மண்ணில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி இருக்கிறோம்.
காஞ்சிபுரத்திற்கு நான் எத்தனை முறை வந்திருப்பேன் என்கிற கணக்கே இல்லை. காஞ்சி காமாச்சி அம்மனை எத்தனை முறை தரிசித்திருக்கிறேன். அத்திவரதர் வைபவம்.
இப்படிப்பட்ட பெருமைகளையும், அருமைகளையும் கொண்ட காஞ்சி மாநகரத்தில் "சிங்கப்பெண்ணே.. எழுந்து வா.." என்று மகளிர் உரிமை மட்டு பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.
நிம்மதியான, கடன் சுமையின்றி வாழும் வாழ்க்கை தான் நம்முடைய உரிமை. அது கொடுப்பது அரசின் கடமை.
பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இலவசம், மருத்துவம் இலவசம், விவசாயிகளுக்கு அனைத்தும் இலவசமாக தருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.
பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும்.
இங்கு மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சிறைச் சென்றவர்கள்.
உங்களுக்கு ஒரு பிச்சனை என்றால் இவர்கள் தான் கொடி பிடித்து நிற்பார்கள். இவர்கள் தான் உங்களுடைய ரியல் ஹீரோ. திரையில் தேடாதீர்கள். அவர்கள் உங்களுக்காக ஓடோடி வரமாட்டார்கள். அவர்களுக்குதான் உங்களுடைய ஆதரவுகளை மனதார தரவேண்டும்.
பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் சரியாகிவிடுமா? யாருடைய பணம் அது. டாஸ்மாக்கில் கொடுத்த பணம் தான் பெண்களுக்கு வந்து சேருகிறது. அது மீண்டும் எங்கு செல்லும் டாஸ்மாகிற்கு தான் செல்லும். 1000 ரூ கொடுத்தவுடன் மனசுமாறி ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.
பெண்களாகிய நீங்கள் ஒரு நாளுக்கு 1000 ரூ சம்பாதிக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
யாராவது ரூ.500, ரூ.1000 என பிச்சைப்போட்டால் வாங்கிக்கொள்வதா ? அது அசிங்கம் இல்லையா? ஓட்டு வாங்க உல்களை ஏமாற்றக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
- இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளரான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 08-12-2025 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்ச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தொகுதி பார்வையாளர்கள்-தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்டக் கழக செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.






