search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரஸ் நோய்"

    • வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.
    • வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய் பரவி வருகிறது. பெலைன் பார்வோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் பூனைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. சென்னையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பூனைகள் அதிகரித்து வருகின்றன.

    சிறிய பூனைகள் மட்டுமின்றி அனைத்து வயது கொண்ட பூனைகளும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த வைரஸ் தாக்கிய பூனைகளுக்கு காய்ச்சல், ஆழ்ந்த மனச்சோர்வு மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் ஏற்படுகிறது. பல பூனைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சில பூனைகளுக்கு ரத்தக்கசிவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-

    பூனைகளை தாக்கும் பெலைன் பான்லூகோபீனியா அல்லது பெலைன் பார்வோ வைரஸ், தொற்றக்கூடிய வைரஸ் நோயாகும். இது பூனைகளை, குறிப்பாக பூனைக்குட்டிகளை பாதிக்கிறது. இந்த வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருகிறது. வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.

    இந்த வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் சிகிச்சை அளித்தாலும் 60 சதவீத பூனைகள் மட்டுமே சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக்கின்றன. தடுப்பூசி போட்டால் தான் பூனைக்குட்டிகளை காப்பாற்ற முடியும்.

    இந்த வைரஸ் எப்போதும் இருக்கும். ஆனால் குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு முன்பும், பின்பும் அதிகமாக பரவும். கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நோய்த்தொற்று விகிதம் குறைவாக உள்ளது. அதிக அளவில் பூனைகள் இனப்பெருக்கம் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போடாதது ஆகியவையே இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.

    இந்த வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு கால்நடை கிளீனிக்குகளுக்கும் தினமும் 5 முதல் 6 பூனைகள் கொண்டு வரப்படுகின்றன.

    பூனைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றால் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகமாக இருக்கும். தாமதமாக கொண்டு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு 3 முதல் 5 மாதம் வயது கொண்ட பூனைகளில் அதிகம் காணப்படுகிறது. இது தொற்றுநோயாக இருப்பதால், ஆரோக்கியமான பூனைகளை, வைரஸ் தாக்கிய பூனைகளிடம் இருந்து தனியாக வைக்க வேண்டும். இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது.

    பி.சி.ஆர். ஸ்னாப் பரிசோதனை மூலம் ஒன்றிரண்டு நிமிடங்களில் இந்த நோய்த்தொற்றை உறுதிப்படுத்த முடியும். அதைத்தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

    காய்ச்சல் இருக்கும் பூனைக்குட்டிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது. பூனைகள் பாராசிட்டமால் மாத்திரையில் உள்ள நச்சுத்தன்மைக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த நச்சுகள் அவற்றின் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை கடுமையாக சேதப்படுத்தி, ஆக்சிஜன் சுழற்சியை நிறுத்துகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.
    • ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு உள்ள தக்காளி மார்க்கெட்டிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை , மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது பல தனியார் நிறுவனங்கள் தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்ததால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.

    இந்த நிலையில் பி.கொல்லஹள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, கரகூர், சோமன அள்ளி உள்ளிட்ட கிராமத்தில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்திக்கும் நிலையில் கிலோ தக்காளி ரூ.10 வரை மட்டுமே தற்போது விற்பனை ஆகிவருகிறது.

    இதனால் விரக்தி அடைந்த பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம்.
    • நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில், பப்பாளி செடியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளிபழம், வெப்பமான நிலப்பரப்பில் அதிக அளவில் வளர்கிறது. இதனால் பப்பாளி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பப்பாளியில் ரெட்லேடி, ஜிண்டா என இருவகைகள் உண்டு. ரெட்லேடி பழத்திற்காகவும், ஜிண்டா பப்பாளிப் பால் உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதி விவசாயிகள் ரெட்லேடி பப்பாளி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்து அவரப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-  கடந்த சில வருடமாக பப்பாளி விவசாயம் செய்து வருகிறோம். தண்ணீர் தேவை குறைவு, பராமரிப்பு செலவு குறைவு என்பதால், பப்பாளி விவசாயம் செய்கிறோம். 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம், நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம்.

    வாரந்தோறும் ஏக்கருக்கு சுமார் 4 டன் வரை விளைச்சல் இருக்கும். 2 ஆண்டுகள் வரை பப்பாளி பழம் அறுவடை செய்யலாம். பின்னர் பப்பாளி மரம் அதிக உயரம் வளர்ந்து விடுவதால், பறிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் 2 வருடங்களுக்கு பப்பாளி விளைச்சல் எடுத்துவிட்டு மீண்டும் அவற்றை அழித்து புதிய நாற்றுகள் நட்டு விடுவோம்.

    தற்போது பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து காய்ந்து வருகின்றன. நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால், எங்களது உழைப்பு வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த சீசனில் பப்பாளிக்கு ஓரளவு விலை கிடைக்கிறது. ஆனால் வைரஸ் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன், நோய் முற்றிய செடிகள் வறண்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வழியின்றி தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×