search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கி"

    சுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி - மிப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் `போத' படத்தின் விமர்சனம். #Bodha #Vicky
    நாயகன் விக்கி, மிப்பு மற்றும் தாத்தா என இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர். மிப்பு செல்போன் கடை வைத்திருக்கிறார். விக்கிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், விக்கியின் நண்பர் ஒருவர் குறும்படம் ஒன்றை எடுப்பதாகவும், அந்த படத்தில் விக்கியை நாயகனாக நடிக்க வைப்பதாகவும் கூறி பணம் கேட்கிறார்.

    வேலையில்லாமல் அன்றாட பிழைப்புக்கே அல்லல்படும் விக்கி, பணத்தை புரட்ட கஷ்டப்படுகிறார். இந்த நிலையில், மிப்புவும், விக்கியும் பார்ட்டி ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் விக்கியை கால் பாயாக அனுப்பி வைப்பதாக கூறி, விக்கிக்கு பணம் தருவதாக கூறுகிறார். 

    விக்கியும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், கால் பாயாக செல்ல சம்மதிக்கிறார். கால் பாயாகவும் செல்கிறார். இதுஒருபுறம் இருக்க மிப்பு தனது கடைக்கு சரிபார்க்க வரும் செல்போன்களில் இருக்கும் தகவல்களை திருடி எடுத்து வைத்துக் கொள்கிறார். அவ்வாறு அவர் திருடும் ஒரு செல்போனில் சண்முகசுந்தரம் பேசுவதை கேட்கிறார். அதில் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார். 



    இதையடுத்து சண்முகசுந்தரம் வீட்டில் இருந்து பணத்தை திருட முடிவு செய்யும் மிப்பு, அதற்காக அந்த வீட்டிற்கு செல்ல, கால் பாயான நாயகன் விக்கி அந்த வீட்டில் இருந்து வெளியே வருகிறார். 

    இதையடுத்து விக்கியிடம் பணம் குறித்த தகவல்களை மிப்பு கூறுகிறார். அந்த பணத்தை இருவரும் திருட முடிவு செய்து அந்த வீட்டிற்குள் செல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க இருவரும் செய்வதறியாது முழிக்கின்றனர். மேலும் அந்த பணமும் காணாமல் போகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பிப்பதற்காக அந்த வீட்டில் இருந்து வெளியே ஓடி வரும் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்கின்றனர்.

    கடைசியில் விக்கி - மிப்பு போலீசில் இருந்து தப்பித்தார்களா? அந்த பணத்தை கைப்பற்றினார்களா? அந்த வீட்டில் இருந்த பெண்ணை கொன்றது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    விக்கி நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. நாயகனாக அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். மிப்பு காமெடியில் கைகொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்துள்ளனர். 

    ஒரு சிறிய குழுவை வைத்து, சிறிய பட்ஜெட்டில் படம் பண்ணுவது என்பது எளிதில்லை, அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி. கால் பாய் என்பது நிஜ வாழ்க்கையில் இருந்தாலும், பணத்திற்காக நாயகன் கால் பாயாக மாறுவதாக காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் படம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக வந்திருக்கிறது. 

    சித்தார்த் விபின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். ரத்தின குமார் ஒளிப்பதிவும் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `போத' குறைவு தான். #Bodha #Vicky

    சுரேஷ்.ஜி இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் `போத' படத்தில் நாயகன் விக்கி ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bodha #Vicky
    சுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி, வினோத், மிப்பு, உதயபனுயின் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் `போத'. படத்தில் நடித்தது குறித்து நாயகன் விக்கி பேசியதாவது, 

    சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதற்கு காரணம் எனது தந்தை தான். பல வருடங்களுக்கு முன் `எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலைகாட்டிய என் தந்தை, குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை, எனது ஆசை மற்றும் லட்சியமானது.

    `வடகறி', `அச்சமில்லை அச்சமில்லை', `நிலா' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த நிலையில் தான் `போத' பட வாய்ப்பு கிடைத்து, அதில் நாயகனாக வருகிறேன்.



    இந்த படத்தில் சில காட்சிகளில் தான் ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாகவும், மற்றபடி இது பணத்தை தேடிச் செல்லும் ஒரு த்ரில்லர் கதை தான், அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றும் விக்கி கூறினார். 

    சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நாயகி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. #Bodha #Vicky

    விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் - ரோகிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிராபிக் ராமசாமி' படத்தின் விமர்சனம். #TrafficRamasamy #SAChandrasekar
    டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை விஜய் சேதுபதி படிக்க, அது திரையில் படமாக நகர்கிறது. கதையில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி ரோகிணி மற்றும் தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார் டிராபிக் ராமசாமி. 

    தனது கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் டிராபிக் ராமசாமி முதலில் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், அவர் அளிக்கும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் மதிப்பில்லாமல் போக, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடுகிறார். 



    தொடக்கத்தில் சிறிய சிறிய பிரச்சனைகளை கையில் எடுக்கும் டிராபிக் ராமசாமி அதில் வெற்றியும் காண்கிறார். இந்த நிலையில், நகர்ப் புறத்தில் மீன்பாடி வண்டிகளால் நிறைய உயிரிழப்பு ஏற்படுவதாக உணர்கிறார். மீன்பாடி வண்டிகளை ஓட்டக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி ஓட்டலாம் என்று கோபப்படும் டிராபிக் ராமசாமி, இதுகுறித்து ஒரு கணக்கெடுப்பும் நடத்துகிறார். அதில் நிறைய பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வருகிறது. 

    இந்த நிலையில், டிராபிக் ராமசாமிக்கும், ரவுடியான ஆர்.கே.சுரேஷுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொதுநலனுக்கா போராடும் டிராபிக் ராமசாமியையும் போலீசார் தாக்குவதால், அவர் மீது ஆர்.கே.சுரேஷுக்கு பரிதாபம் ஏற்படுகிறது. இதையடுத்து ராமசாமிக்கு அவர் சிறிய சிறய உதவிகளையும் செய்ய முன்வருகிறார். 

    இதில் மீன்பாடி வழக்கில் தொடர்புடையதாக சம்பந்தப்பட்ட அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்கிறார். இதேபோல் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் டிராபிக் ராமசாமி வழக்கு போடுகிறார்.



    இந்த நிலையில், டிராபிக் ராமசாமியை கொல்ல பலரும் சதி செய்கின்றனர். அவர்களிடமிருந்து டிராபிக் ராமசாமியை ஆர்.கே.சுரேஷ் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆர்கே.சுரேஷயும் கொல்ல சதி நடக்கிறது. 

    கடைசியில், டிராபிக் ராமசாமியின் வழக்குகளுக்கு நீதி கிடைத்ததா? கொலைகாரர்களிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? டிராபிக் ராமசாமியின் பயணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையில், டிராபிக் ராமசாமியையே நினைவுபடுத்துகிறார். அவரது நடையிலும், உடையிலும், ஒவ்வொரு அசைவிலும் டிராபிக் ராமசாமி தெரிகிறார். குறிப்பாக இந்த வயதிலும் சந்திரசேகர் தன்னை வருத்திக் கொண்டே நடித்திருக்கிறார். 



    டிராபிக் ராமசாமியின் மனைவியாக நடித்துள்ள ரோகிணி, காவலராக பிரகாஷ்ராஜ், ரவுடி கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ், வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் என பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். நீதிபதியாக அம்பிகா கலகலக்க வைத்திருக்கிறார். மற்றபடி இமான் அண்ணாச்சி, குஷ்பு, சீமான், மனோபாலா, மதன் பாப் என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றன. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். டிராபிக் ராமசாமியின் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தையும் ரசிக்க வைத்திருக்கிறது.

    டிராபிக் ராமசாமியின் முழு வாழ்க்கையை அப்படியே படமாக எடுக்கவில்லை. மாறாக அவரது வாழ்க்கையில் நடந்த, அவர் சந்தித்த பிரச்சனைகளில் சிலவற்றை, குடும்பம், பாசம், போராட்டம், சமூக நலன் என மாசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்கி. அதுமட்டுமில்லாமல், இந்த காலத்து இளைஞர்கள், கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டால் தான், நாடு திருந்தும், முன்னேறும் என்பதையும் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

    பாலமுரளி பாலு பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. குகன் எஸ்.பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `டிராபிக் ராமசாமி' உத்வேகம். #TrafficRamasamy #SAChandrasekar
    விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்த கதையை ரஜினியை வைத்து இயக்க நினைத்தேன் என்று கூறினார். #TrafficRamasamy #SAChandrasekar
    கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

    விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசும் போது " டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.



    எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்." என்றார். #TrafficRamasamy #SAChandrasekar

    விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்றார். #TrafficRamasamy #SAChandrasekar
    கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

    விழாவில் இயக்குநரும், கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

    " படத்தின் இயக்குநர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும், ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.  



    இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் " என்றார். 

    விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #TrafficRamasamy
    சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். 

    சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். 

    பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 



    விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் வருகின்றனர். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

    படத்தில் இருந்து ஏற்கனவே `போராளி அன்ந்தம்', `கோமாளி' என இரு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் இன்று வெளியாக இருக்கிறது. #TrafficRamasamy

    ×