search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பையில் கனமழை"

    • டெல்லியில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் ஜூன் 1-ந்தேதியும், வடமாநிலங்களில் 12-ந் தேதியும் தொடங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை இப்போது வடமாநிலங்களில் வெளுத்து வாங்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கொலாபா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்றும் மாநிலம் எங்கும் பல பகுதிகளில் விடிய, விடிய பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    மும்பை காட்கோபர் பகுதியில் 3 மாடி கட்டிடம் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இங்குள்ள அறைகளில் சிக்கி கொண்டவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.

    இதற்கிடையே மத்திய மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதையடுத்து மும்பையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்கு மாநிலமான அசாமிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் பர்பேடா, தரங்க், துப்ரி, கோல்பாரா, காம்ரூபா, லக்கிம்பூர், நல்பாரி, உதல்குரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெய்த மழையால் இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேலும் இங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதையடுத்து இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் முதல் மந்திரி ஹிமந்த் பிஸ்வா சர்மாவுடன் டெலிபோனில் ஆலோசனை நடத்தினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.

    இதுபோல இமாச்சலா பிரதேசம், அரியானாவிலும் கடந்த சிலநாட்களாக மழை பெய்து வருகிறது. அரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.

    அந்த காரை கிராம மக்கள் கயிறுகட்டி இழுத்து மீட்டனர். அதில் இருந்த பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

    தலைநகர் டெல்லியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து டெல்லியில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நைனி டால், பாகேஷ்வர், டெக்ராடூன், தெஹ்ரி, சம்பாவத் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சார்தாம் செல்லும் யாத்ரீகர்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளிடம் நிலவரங்களை கேட்டறிந்தார்.

    இதற்கிடையே ருத்திர பிரயாக் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 வயது நபர் பரிதாபமாக இறந்தார். இதுபோல உத்திரகாசி மாவட்டத்தில் நாற்றுநடும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபரும் மழைக்கு பலியானார். இதுதவிர மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ×