search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் படுகாயம்"

    • கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது.
    • நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சாகுல் (வயது 22), தவ்பீக் (15) என 2 மகன்கள் உள்ளனர். சாகுல் பழனி சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். தவ்பீக் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று அதிகாலை சாகுல் வெளியே சென்று விட்ட நிலையில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது இளைய மகன் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் மர்ம கும்பல் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த அப்துல் லத்தீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    மேலும் இதை தடுக்க வந்த தவ்பீக்கிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்துல் லத்தீப்பையும், தவ்பீக்கையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அப்துல் லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்துல் லத்தீப் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது. நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. மேலும் சிறுமலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    பெரும்பாலான கொலைகள் சொந்த பிரச்சினையில் நடந்திருந்தாலும் தொடர் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    2023ம் ஆண்டு தொடங்கிய 2-வது நாளில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிலக்கோட்டை வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். 13-ந் தேதி வடமதுரையில் வாலிபர் கேரம் விளையாட்டு தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். 20-ந் தேதி தாடிக்கொம்பு உலகம்பட்டியில் முதியவரும், அதே நாளில் மறவபட்டியில் ஐ.டி.ஊழியரும் கொல்லப்பட்டனர்.

    பிப்ரவரி மாதம் 10-ந்தேதி குஜிலியம்பாறையில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசினர். 13-ந் தேதி எரமநாயக்கன் பட்டியிலும், 17-ந் தேதி ரெட்டியபட்டியிலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. 24-ந் தேதி பட்டிவீரன்பட்டியில் மகனை தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

    மார்ச் மாதம் 2-ந் தேதி சொத்து தகராறில் விவசாயிகள் மீது முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதே நாளில் வேடப்பட்டியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 3-ந் தேதி கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் தொழிலாளியும் கொல்லப்பட்டார். 4-ந் தேதி கூலித் தொழிலாளி முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். 7-ந் தேதி குஜிலியம்பாறையில் கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொன்றனர். 14-ந் தேதி சின்னாளப்பட்டியில் தந்தையை மகன்களே வெட்டி கொன்றனர். கடந்த 11-ந் தேதி மூதாட்டியை குடிபோதையில் வாலிபர் கற்பழித்து கொன்றார். இந்த நிலையில் 18-வது சம்பவமாக இன்று வீடு புகுந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார்.

    ×