search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல் பிடுங்கிய விவகாரம்"

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
    • உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங் உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நெல்லை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுவரை 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் அவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார். தொடர்ந்து 4-வது முறையாக இந்த வழக்கு இன்று நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நேரில் ஆஜரானார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

    அப்போது எதிர்தரப்பு வக்கீல் மகாராஜன் தாங்கள் இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பல்வீர் சிங் தரப்பு வக்கீல் துரைராஜ், இந்த வழக்கை அரசு வக்கீல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி அவருக்கு உதவி புரிவதற்காக வக்கீல்கள் நியமிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலை தங்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
    • நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரம சிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 14 பேர் மீது புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.

    மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் குற்ற எண்.3 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 6 பேர் மீதும், குற்றம் எண்.4-ல் பல்வீர்சிங் உள்பட 4 பேர் மீதும், குற்ற எண்.5 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 4 பேர் மீதும், குற்ற எண்.6 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் நீதிபதி திரிவேணி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினர். இதனையொட்டி நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை தொடர்ந்து வக்கீல் மகாராஜன் மற்றும் சி.பி.சி.ஐ. போலீசாரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்த 4 வழக்குகளில் வி.கே.புரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட குற்ற வழக்கு எண்.4ல் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்ளிட்ட 4 பேருக்கு குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கு மற்ற 3 வழக்குகளில் குற்ற பத்திரிகை நகல் வழங்க, வழக்கு தொடரப்பட்டவர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மற்ற 3 வழக்குகளில் இன்று குற்றபத்திரிகை வழங்கப்படவில்லை.

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை போலீஸ் சரகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 10 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.புரம் இன்ஸ்பெக்டராக இருந்த பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி வட்ட இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோன்று மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கோமதி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து 2 கட்டங்களாக தனது விசாரணையை நடத்தினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அளித்தவர்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்களிடம் அதிகாரி அமுதா விசாரித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட பாளை கே.டி.சி.நகரை சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வி.கே.புரம் அருகே அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு, வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகசேன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே மற்றொரு விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட வேதநாராயணன், சூர்யா ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவரது உறவினர்கள், சாட்சியங்கள் ஆஜராக சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தபட்ட சரகத்தில் பணியாற்றும் சில போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் ஜீப் டிரைவர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சம்மன் அனுப்பினர். அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், முதல் மற்றும் 2-ம் நிலை காவலர்கள் என மொத்தம் 24 போலீசாரை மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், ஆபிரகாம் ஜோசப், சக்தி நடராஜன், பாலசுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஸ்வரன், ரவி, பத்மநாபன், மகாராஜன் மற்றும் காவலர்கள் கணேசன், சேர்மன் துரை, வசந்த், கலைவாணி, பார்வதி, சுடலை, ஜெயராமன், அபிராமவள்ளி, ஆரோக்கிய ஜேம்ஸ், ஸ்டீபன், சதாம் உசேன், போக பூமன், விக்னேஷ், மணிகண்டன், சந்தாணகுமார், ராஜ்குமார் ஆகிய 24 போலீசார் நெல்லை மாவட்டத்தில் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது.
    • வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இசக்கிமுத்து, சதாம் உஷேன் மற்றும் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார் நேற்று நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் இன்று நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    • நேற்று பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.
    • வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை நடத்தி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்நிலையில் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு நேற்று பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.

    தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். அதில் ஏ.எஸ்.பி. பெயரை குறிப்பிட்டு மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை நடந்த அனைத்து வித அதிகாரிகளின் விசாரணைகளிலும் பல்வீர்சிங் மற்றும் சிலர் என்று மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது புதிய திருப்பமாக மேலும் 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர் போகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக அருண்குமார் தரப்பை சேர்ந்த 7 பேர் நாளை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில் அவரது எதிர்ப்பு தரப்பான செல்லப்பா உள்பட 8 பேருக்கும் நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தில் ஏற்கனவே விசாரணை நடத்திய அறிக்கையை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன்ரகு, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. நவராஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார்.

    தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்த அதே பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே புகார் கூறிய கே.டி.சி. நகரை சேர்ந்த சுபாஷ், அவரது மனைவி சங்கீதா, அவர்களது வக்கீல் உள்பட 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள் பாளையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

    • விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பணி இடைநீக்க நடவடிக்கையும் அவர்மீது பாய்ந்தது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்டக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த உயர்மட்டக் குழுவினர் இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சிபாரிசு செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    • பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பு வழக்கறிஞர்கள் அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
    • பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து விளக்கினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீது நெல்லை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10-ந்தேதி விசாரணை நடத்தினார். நேற்று அவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார்.

    நேற்று காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16, 17 வயதுள்ள 2 சிறுவர்கள் ஆகிய 5 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் வக்கீல் மகாராஜன் தலைமையில் சிவந்திபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் செல்லப்பா, மாரியப்பன், இசக்கிமுத்து, உள்பட 11 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அவர்களிடம் அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். நள்ளிரவு 12.15 மணி வரை விசாரணை நடத்தினார். மேலும் 3 பேரும் விளக்கம் அளிக்க வந்திருந்த நிலையில் அவர்களிடம் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு 2-வது நாளாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார். அப்போது வேதநாராயணன், மாரியப்பன், சுபாஷ் ஆகிய 3 பேர் ஆஜராகினர்.

    இதற்கிடையே மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நேரில் சந்தித்து பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பு வழக்கறிஞர்கள் அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ராஜேஸ்வரி மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ள ஆவணம் வெளியாகி உள்ளது.
    • கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் 10-ந் தேதி வி.கே.புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 22) என்பவரும், 17 வயதான அவரது தம்பியும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களது பற்கள் உடைக்கப்பட்டதாக அவர்களின் தாயார் புகார் கூறியிருந்தார்.

    நேற்று அருண்குமார் பல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவரது தாயார் ராஜேஸ்வரி மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ள ஆவணம் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான உரிய விளக்கம் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்று அவரது தாயார் புகார் கூறி உள்ளார்.

    அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் 1-ன் படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 6-ந் தேதி கேட்ட நிலையில் 48 மணி நேரத்தை கடந்தும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரி எனது மகனின் மருத்துவ அறிக்கை குறித்து பதில் தர மறுக்கிறார் என அவர் புகார் கூறி உள்ளார்.

    அந்த மனுவில் கடந்த 10 -ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் முன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை ராஜேஸ்வரி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×