search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் கொள்ளை"

    • ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

    புஷ்பலதா மற்றும் அவரது மருமகள் ஆகியோர் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தங்க சங்கிலி உட்பட 10 பவுன் நகைகளையும், 5000 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தரச்சல் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் 10 பவுன் நகைகளை வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார்.
    • கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர்.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் ( வயது 47). அப்பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். ஆலையின் வளாகத்தில் உள்ள வீட்டில் மனைவி செல்வி (43), மகன்கள் தனுஷ் (20), நிதா்ஷன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

    கடந்த 30-ந்தேதி இரவு குணசேகரன் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளை கும்பல் குணசேகரன் குடும்பத்தினரை கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகை , ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையில் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை (32) சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசாா், அவா் அளித்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35), சூா்யா (27), ஆத்தூரை சோ்ந்த பிரசாந்த் (25), பெத்தநாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகன் (21), சாமிதுரை (46), ஜான் கிருபா (37), விஜயகாந்த் (31), கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த சௌந்தா் (25), செல்வம் (37) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.

    அவா்களிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், 3 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 10 பேரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

    தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் குணசேகரன் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளி மலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் சேலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கொள்ளையடிப்பதற்காக 9 பேரும் 2 கார்களில் காங்கயம் வந்துள்ளனர். குணசேகரன் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கார்களை நிறுத்தி விட்டு நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு கார்களில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காங்கயம் பகுதி சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கார்களை வைத்து ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் பயன்படுத்திய கார்கள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள, மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர்.
    • கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சாவடி பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 47). இவர் தேங்காய் பருப்பு களம் வைத்து நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே இவரது வீடு உள்ளது. நேற்றிரவு வீட்டில் குணசேகரன் அவரது மனைவி செல்வி மற்றும் மகன்கள் தனுஷ், நிதர்சன் ஆகியோருடன் இருந்தார்.

    அப்போது கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பலில் ஒருவன் குணசேகரன் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு மிரட்டினார். மற்றொருவன் தலையில் இரும்பு ராடை வைத்து கொண்டு மிரட்டினான்.

    ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள, மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருக்கும் பணம், நகையை எல்லாம் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

    இதையடுத்து வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து செல்வி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்தனர். இதனிடையே தேங்காய் பருப்பு களத்தில் வேலை செய்யும் தொழிலாளி, குணசேகரன் வீட்டில் இருந்து சத்தம் கேட்பதை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். இதையறிந்த கொள்ளை கும்பல் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    உடனே இது குறித்து குணசேகரன் காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் கொள்ளையர்களை தேடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • செல்லமுத்து, கவிதா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி ரோடு அசோக்நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 58). இவர் குண்டடத்தில் உள்ள ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா தாராபுரம் நிலவள வங்கியில் பணியாற்றி வருகிறார். மகன் சென்னையில் படித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று காலை செல்லமுத்து, கவிதா இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கிரில்கேட் மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 3லட்சம் இருக்கும்.

    செல்லமுத்து, கவிதா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குற்றப்பிரிவு அன்புசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • நள்ளிரவில் மர்மநபர் முகத்தை துணியால் மூடியபடி வங்கியை திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    கடந்த 20-ந்தேதி வங்கியில் வழக்கமான பணிகள் நடந்தது. மாலையில் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடி விட்டுச் சென்றனர்.

    நேற்று காலை வங்கி மேலாளரான சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 32) என்பவர் வங்கியை திறக்க வந்தார். அப்போது வங்கியின் பூட்டு திறந்து இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரும் திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் ரொக்கப்பணமும், 18 பவுன் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து மேலாளர் சுபாஷ்சந்திர போஸ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வங்கிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் மர்மநபர் முகத்தை துணியால் மூடியபடி வங்கியை திறந்து கொண்டு உள்ளே செல்கிறார். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளியே செல்கிறார்.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளையன் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வங்கியின் சாவி மேலாளர் மற்றும் அக்கவுண்டன்ட் ஒருவரிடம் மட்டுமே இருந்துள்ளது. கொள்ளையடித்த நபர் பூட்டை உடைக்காமல் சாவியை வைத்து பூட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனால் அந்த நபரிடம் சாவி எப்படி சென்றது, கள்ளச்சாவி போட்டு அந்த நபர் திருடிச்சென்றாரா அல்லது வேறு எதுவும் மர்மம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
    • வீட்டிற்குள் அரிவாள் மற்றும் கட்டர் கிடந்தது. அதன் மூலம் கொள்ளையர்கள் கதவை உடைத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கணேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 55). இவர் உடுமலை கடைத்தெருவில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார்.

    நேற்றிரவு மனைவியுடன் மருத்துவமனையில் தங்கிய கந்தவேல் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி.தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    போலீசார் விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீட்டிற்குள் அரிவாள் மற்றும் கட்டர் கிடந்தது. அதன் மூலம் கொள்ளையர்கள் கதவை உடைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    வீட்டின் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அப்பகுதி வழியாக மர்மநபர்கள் வந்திருக்கலாம் என தெரிகிறது. வடமாநில தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அவிநாசி பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பூபாலகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார்.
    • பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அருகே வரும்போது ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் திருமலை ராஜன். இவர் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பூபாலகிருஷ்ணன் (வயது 38). இவர் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசிபாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அவிநாசி பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அருகே வரும்போது ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அதற்காக அவர் வண்டியை நிறுத்தியபோது அங்கு மறைந்திருந்த மேலும் 2 பேர் ஓடி வந்து பூபால கிருஷ்ணனை தாக்கி அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின், 13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து பூபாலன் பல்லடம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரபு (வயது 33). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி லாவண்யா (28) மற்றும் மகன் விகான் பிரபு (3) ஆகியோருடன் அவினாசி சக்திநகரில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு அவிநாசியை அடுத்து அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற விஷ்ணுபிரபு இன்று காலை தனது வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 39 பவுன் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

    இது குறித்து விஷ்ணுபிரபு அவிநாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தாராபுரத்திற்கு பணிக்கு வந்துள்ளார்.
    • சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம். இந்நிலையில் தாராபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.பி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வருகிறார்.

    தாராபுரம்:

    நடிகர் சூர்யா நடித்த "நந்தா" படத்தில் காமெடி நடிகராக வரும் கருணாஸ் நீதிபதி வீட்டில் அவர் தான் வீட்டு பொருட்களை எடுத்து வரச்சொன்னார் என்று பக்கத்து வீட்டு பெண்ணிடம் சொல்லி டெம்போவில் பொருட்களை அள்ளிச்செல்வார். அதேபோல ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்துள்ளது.

    தாராபுரம் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வருபவர் ராமர் (வயது 52). இவர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தாராபுரத்திற்கு பணிக்கு வந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம். இந்நிலையில் தாராபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.பி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வருகிறார்.

    வார இறுதி விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று விடுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து ஊருக்கு சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்னர் இன்று காலை தாராபுரம் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த டிவி, ப்ரிஜ், பீரோ, லேப்டேப், டைனிங்டேபிள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் மர்ம நபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது நீங்கள்தான் எடுத்து வர சொன்னதாக கூறி டெம்போவில் வந்த ஒருவர் எடுத்து சென்றதாக கூறினர்.

    இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×