search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்குன் குனியா"

    • குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய அளவிலான கிளீனிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருகிறது.

    வைரஸ் தொற்று காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாகவும் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் சிக்குன் குனியா காய்ச்சலும் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களாகவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனையில் டெங்கு இல்லை என்பது உறுதியானால் அது சிக்குன் குனியாவாகவும் இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பரவியபோது ஏற்பட்டது போன்ற கடுமையான மூட்டுவலி தற்போது ஏற்படவில்லை. ஆனாலும் மூட்டுவலி 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும்.

    இந்த பருவ காலத்தில் இதுபோன்று காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். இந்த பருவத்தில் சுவாச பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்ச்சைக்கு வருகிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியும் உள்ளது.

    செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களை கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

    மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளே அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன், சுவாச பாதிப்பு, உணவு சாப்பிடுவதில் சிரமம் ஆகியவையும் உள்ளன. மேலும் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இது போன்ற பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடைகின்றன.

    ஆனாலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×