search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஆணைய கூட்டம்"

    மேகதாதுவில் அணை கட்டும் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்தது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது.

    ஆணையத்தின் தலைவர் மசூத்உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் பங்கேற்றார். இதே போல கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இது எதிரானது என்று தமிழகம் வாதிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. தற்போது 2-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. #MekedatuDam
    காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். #cauveryissue #CauveryCommission

    புதுடெல்லி:

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப் படி தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

    காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள கமி‌ஷன் தலைவர் எஸ். மசூத் உசைன் தலைமை தாங்குகிறார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள கமி‌ஷன் முதன்மை பொறியாளர் நவீன்குமார் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளான நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளனர். இதே போல் கேரளா, புதுவை மாநில பிரதிநிதிகளும் டெல்லி சென்றுள்ளனர்.

    கர்நாடகம் முதலில் காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகளை நியமிக்காமல் காலம் கடத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசே அதிரடியாக கர்நாடகத்தின் பிரதிநிதிகளை நியமித்தது. இதனால் கர்நாடகம் பணிந்தது. நாளை நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்துக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெங்களூரில் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இறுதி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித்து இருப்பதால் கர்நாடகத்தின் அறிவிப்பு எடுபடாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

    நாளைய கூட்டத்தில் இதுவரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், திறக்கப்பட்ட நீரின் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

    மேலும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நீரின் அளவு போன்றவை பற்றி முடிவு எடுக்கப்படும். தமிழகத்துக்கான ஜூலை மாத நீரின் அளவை 10 நாட்கள் இடைவெளியில் 3 தவணைகளில் திறக்க உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    மேலும் கேரளா, புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். #cauveryissue #CauveryCommission

    காவிரி ஆணைய முதல் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.



    இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி  பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் சாதக-பாதகங்கள் மற்றும் மாநில நலனுக்காக சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    ×