search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்"

    • ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • கருப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்.

    சென்னை :

    கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை கடிதம் வழங்கும். அந்த வகையில், அண்மையில், ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த மனுவை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "கோடைகாலம் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 30-ந்தேதி வரை 'கவுன்' அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் கருப்பு 'கோட்' மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்'' என்று கூறியுள்ளார்.

    • டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    • நிபந்தனைகளை திருத்தியது ஏன் என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, இதுசம்பந்தமாக டெண்டர் கோரப்பட்டது.

    இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறு வனங்கள், 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும். 5 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இதனால் டெண்டரை எதிர்த்து குவாலிட்டி பிராப் பர்ட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும்.

    3 ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என மாற்றிய மைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகள், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டு உள்ளது. இதை எதிர்க்க முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது நிபந்தனைகளை திருத்தியது ஏன் என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்கிறோம். புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மேலும் கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கும் தமிழ் தெரிந்த வரையே கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலிக்க டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.

    • இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
    • பழங்குடியின பெண்களுக்கு குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வேதனைக்குரியது.

    சென்னை :

    குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட கோர்ட்டு, இந்து வாரிசு உரிமை சட்டப்படி, குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளதாகக்கூறி சொத்தில் பங்கு கொடுக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்களான சரவணன், வெங்கடாச்சலம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.

    அப்போது மனுதாரர்கள் தரப்பில், ''இந்து வாரிசுரிமை சட்டத்தில், குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உண்டு என்று கூறப்படவில்லை. சமபங்கு பெற இந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உரிமை இல்லை. எனவே, இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கொடுக்கத் தேவையில்லை. சேலம் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

    அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. ஆகவே இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    அதேநேரம், அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் பழங்குடியின (எஸ்.டி.) பெண்களுக்கு குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வேதனைக்குரியது.

    எனவே எஸ்.டி. பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிட தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    ×