search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கமலக்கண்ணன்"

    காரைக்காலில் கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் சீர் செய்தார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாய்ந்த மரங்களால் திருநள்ளாறில் கழிவு நீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அந்த நேரத்தில் புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக கட்சியினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய அவர் தன்னுடன் காரில் வந்த காங்கிரஸ் கட்சியினருடன் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் அமைச்சர் கமலகண்ணனுடன் சேர்ந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.

    தம்முடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் கமலகண்ணன் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையில் அமைச்சர் கமலகண்ணன் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்த செயல்களை பொதுமக்கள் பாராட்டினர். #MinisterKamalaKannan

    காரைக்காலில் ஆய்வு பணிக்கு சென்ற அமைச்சர் கமலக்கண்ணன் மண்வெட்டி வாங்கி சாக்கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    மழைக்காலம் நெருங்குவதாலும், அண்டை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாலும், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் மந்தகரை முதல் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலான மெயின் சாலையில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்யவேண்டும் என அப்குதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனிடமும் மக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரனிடம் சாக்கடையை உடனே சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அப்பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இப்பணியில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், அம்பகரத்தூர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 35 பேர் ஈடுபட்டனர்.

    இப்பணியை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் கமலக்கண்ணன், திடீரென தானும் மண்வெட்டி வாங்கி சாக்கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார். சாக்கடை நீர் வேட்டியில் பட்டதால், வேட்டியை கழற்றிவிட்டு கால் சட்டையுடன் சாக்கடையில் இறங்கி நீண்ட நேரம் சுத்தம் செய்தார். இதை பார்த்த பொதுமக்களும் சாக்கடையை சுத்தம் செய்தனர். #MinisterKamalaKannan
    எதற்கு சம்பளம் பெறுகிறோம் என உணர்ந்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில் விவசாயிகள் மற்றும் விதை நெல் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வேளாண்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குநர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பஜன்கோ முதல்வர் கந்தசாமி, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் வசந்தகுமார், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரத்தினசபாபதி, கூடுதல் வேளாண் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி பேசும்போது, விதை நெல் உற்பத்திக்கு பீடர் மற்றும் ஆதார விதையினை காலத்தோடு வழங்க வேண்டும். பாகூர் மற்றும் கரியமாணியத்தில் உள்ள சான்று விதை சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்து கொடுக்க வேண்டும். 5 ஆண்டுகளாக மானிய விலையில் வழங்கப்படாமல் உள்ள சில்ப்பாலின், ஷேர்நெட், நர்சரி ட்ரே மற்றும் கோனாவீடர் உடனடியாக வழங்க வேண்டும்.

    காரைக்கால் விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுக்கும் நெல்லுக்கு காலதாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஒரு சாக்கு மூட்டை பாசிக் மூலம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சாக்கு மூட்டை தனியாரில் ரூ.35க்கு தரமாகவே கிடைக்கிறது. ஏன் அதிக விலையில் விற்கிறீர்கள்? விவசாயிகளின் கஷ்டங்களை அரசு உணர்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

    அமைச்சர் கமலக்கண்ணன் விவசாயிகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

    புதுவையில் ஆரம் பிக்கப்பட்ட பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் முதலில் விவசாயிகளுக்கு இடுபொருள் கொடுப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவ தொடங்கப்பட்டது.

    ஆனால், இதனை யாரும் செய்யவில்லை. இதற்கு முன் இருந்தவர்களும் அக்கறை செலுத்தவில்லை. இப்போது உள்ளவர்களும் அக்கறை செலுத்த போவதில்லை. வருங்காலத்திலும் அக்கறை காட்ட போவதில்லை. நிம்மதியாக இருந்த விவசாயிகளிடம் அதிகாரிகள்தான் தொழில்நுட்பத்தை கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வேளாண்துறை சம்பந்தமான உரம், பூச்சி மருந்து, நெல் எடுத்தல் ஆகியவற்றுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் அதிகாரிகளுக்கு சம்பளம் போடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கூறியுள்ளேன். விவசாயிகள் கூறும் பல வி‌ஷயங்களில் எனக்கும் ஆதங்கம் உள்ளது. இயக்குனர், அதிகாரிகளிடம் என்னுடைய பாணியில் தெரிவித்தேன். அவர்கள் என்னை விட்டுவிடுங்கள் வேறு துறைக்கு போய்விடுகிறோம் என்கிறார்கள்.

    அவர்களாக விரும்பி கடிதம் கொடுக்கும்வரை விடமுடியாது. வேளாண்துறைக்கு வந்து பணியாற்றும் அதிகாரிகள் எதற்காக சம்பளம் வாங்குகிறோம் என்பதை மனதில் வைத்து விவசாயிகளுக்கு பணியாற்ற வேண்டும்.

    விவசாயிகளின் வரி பணத்தில் இருந்துதான் அவர்களுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தாண்டு விதை நெல் தொடர்பான வி‌ஷயங்கள் சரியாக நடைபெறவில்லை என்றால், விவசாயிகள் கூறும் குறைகளை கோப்பில் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×