search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும்- அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு
    X

    விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும்- அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு

    எதற்கு சம்பளம் பெறுகிறோம் என உணர்ந்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில் விவசாயிகள் மற்றும் விதை நெல் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வேளாண்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குநர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பஜன்கோ முதல்வர் கந்தசாமி, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் வசந்தகுமார், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரத்தினசபாபதி, கூடுதல் வேளாண் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி பேசும்போது, விதை நெல் உற்பத்திக்கு பீடர் மற்றும் ஆதார விதையினை காலத்தோடு வழங்க வேண்டும். பாகூர் மற்றும் கரியமாணியத்தில் உள்ள சான்று விதை சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்து கொடுக்க வேண்டும். 5 ஆண்டுகளாக மானிய விலையில் வழங்கப்படாமல் உள்ள சில்ப்பாலின், ஷேர்நெட், நர்சரி ட்ரே மற்றும் கோனாவீடர் உடனடியாக வழங்க வேண்டும்.

    காரைக்கால் விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுக்கும் நெல்லுக்கு காலதாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஒரு சாக்கு மூட்டை பாசிக் மூலம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சாக்கு மூட்டை தனியாரில் ரூ.35க்கு தரமாகவே கிடைக்கிறது. ஏன் அதிக விலையில் விற்கிறீர்கள்? விவசாயிகளின் கஷ்டங்களை அரசு உணர்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

    அமைச்சர் கமலக்கண்ணன் விவசாயிகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

    புதுவையில் ஆரம் பிக்கப்பட்ட பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் முதலில் விவசாயிகளுக்கு இடுபொருள் கொடுப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவ தொடங்கப்பட்டது.

    ஆனால், இதனை யாரும் செய்யவில்லை. இதற்கு முன் இருந்தவர்களும் அக்கறை செலுத்தவில்லை. இப்போது உள்ளவர்களும் அக்கறை செலுத்த போவதில்லை. வருங்காலத்திலும் அக்கறை காட்ட போவதில்லை. நிம்மதியாக இருந்த விவசாயிகளிடம் அதிகாரிகள்தான் தொழில்நுட்பத்தை கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வேளாண்துறை சம்பந்தமான உரம், பூச்சி மருந்து, நெல் எடுத்தல் ஆகியவற்றுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் அதிகாரிகளுக்கு சம்பளம் போடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கூறியுள்ளேன். விவசாயிகள் கூறும் பல வி‌ஷயங்களில் எனக்கும் ஆதங்கம் உள்ளது. இயக்குனர், அதிகாரிகளிடம் என்னுடைய பாணியில் தெரிவித்தேன். அவர்கள் என்னை விட்டுவிடுங்கள் வேறு துறைக்கு போய்விடுகிறோம் என்கிறார்கள்.

    அவர்களாக விரும்பி கடிதம் கொடுக்கும்வரை விடமுடியாது. வேளாண்துறைக்கு வந்து பணியாற்றும் அதிகாரிகள் எதற்காக சம்பளம் வாங்குகிறோம் என்பதை மனதில் வைத்து விவசாயிகளுக்கு பணியாற்ற வேண்டும்.

    விவசாயிகளின் வரி பணத்தில் இருந்துதான் அவர்களுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தாண்டு விதை நெல் தொடர்பான வி‌ஷயங்கள் சரியாக நடைபெறவில்லை என்றால், விவசாயிகள் கூறும் குறைகளை கோப்பில் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×