search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicehrry Minister"

    காரைக்காலில் கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் சீர் செய்தார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாய்ந்த மரங்களால் திருநள்ளாறில் கழிவு நீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அந்த நேரத்தில் புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக கட்சியினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய அவர் தன்னுடன் காரில் வந்த காங்கிரஸ் கட்சியினருடன் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் அமைச்சர் கமலகண்ணனுடன் சேர்ந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.

    தம்முடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் கமலகண்ணன் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையில் அமைச்சர் கமலகண்ணன் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்த செயல்களை பொதுமக்கள் பாராட்டினர். #MinisterKamalaKannan

    ×