என் மலர்
நீங்கள் தேடியது "Thyroid Problems"
- மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி.
- ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்.
மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி. இது தைராக்ஸின் ஹார்மோனை தேவையான அளவு சுரக்காததைத் தான் குறை தைராய்டு நோய் என்கின்றோம். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை:
சப் கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். ஹாசிமோட்டோஸ் குறை தைராய்டு நோய்.

பரிசோதனைகள்
தைராய்டு நோய்களைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைகள் வருமாறு:
1) ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்
2) தைரோபெராக்சிடோஸ் ஆன்டிபாடி (டி.பி.ஓ), தைரோகுளோபுலின் ஆன்டிபாடி (டி.ஜி.ஹெச்)
3) நுண் ஊசி உறிஞ்சல் திசு பரிசோதனை (எப்.என்.ஏ.சி)
4)அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (தைராய்டு சுரப்பியில் உள்ள புற்றுநோய் சதை முடிச்சுகள், காய்டர், நீர்க்கட்டிகள், தைராய்டு சுரப்பியின் அழற்சி வீக்கம் இவைகளை கண்டறிய உதவுகிறது.)
தைராய்டு நோய்களுக்குரிய உணவுப் பழக்க வழக்கங்கள்
1) இரும்புச் சத்து குறைபாட்டிற்கும், தைராய்டு குறைபாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. தைராய்டு ஹார்மோன் டி4 லிருந்து டி3-க்கு மாறுவதற்கு இரும்புச் சத்து தேவை. ரத்தத்தில் 'பெரிட்டின்' அளவு சரியாக இருக்க வேண்டும். இரும்புச்சத்து உடலில் சேர்வதற்கு போலிக் அமிலம், வைட்டமின்கள் பி12 மற்றும் சி தேவை.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
முருங்கைக்கீரை, கறிவேப்பிலைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பேரீட்சை, சிவப்புக் கொண்டைக் கடலை, வேர்க்கடலை, சோயா பீன்ஸ், பீன்ஸ், அவரைக்காய், இறைச்சி வகைகள், பூசணி விதை, கோதுமை, தீட்டாத சிவப்பரிசி, அத்திப்பழம், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
2) வைட்டமின் டி குறைவால் தைராய்டு சுரப்பியில் உள்ள தைரோ பெராக்சிடோஸ், தைரோகுளோபுலின் போன்றவை பாதிக்கப்படுகிறது. ஆகவே, விட்டமின் டி சத்துக் குறையாமல் பார்க்க வேண்டும்.
நமது தோலில் எந்த அளவுக்கு சூரிய ஒளிபடுகிறதோ, அந்த அளவிற்கு வைட்டமின் டி உடலில் உருவாகும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள்கரு, மத்திச்சாளை மீன், சூரை, கானாங்கெளுத்தி, இந்தியன் சால்மன் போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருட்கள், பாதாம், பிஸ்தா, இறைச்சி வகைகள் இவற்றிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கும்.
3) அயோடின்: தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு அயோடின் மிக முக்கியமானது. கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது.
4) செலினியம்: தைராய்டு சுரப்பியின் டி3, டி4 ஹார்மோன்கள் சுரப்பதற்கு செலினியம் ஒரு முக்கியமான பொருள். உணவுப் பொருட்களில், பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன், இறைச்சி இவைகளில் செலினியம் அதிகமாகக் கிடைக்கிறது.
5) மெக்னீசியம்: தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. டி4 தேவையான அளவு சுரந்தால் தான் உடலுக்குத் தேவைப்படும் டி3 ஹார்மோனாக மாற்றப்படும். ஆகவே, உணவில் மெக்னீசியம் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பில் கால்சியம் வலிமையாக சேர்வதற்கும் மெக்னீசியம் இன்றியமையாதது. இது உணவுகளில், பாதாம், வாழைப்பழம், பூசணி விதை, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகளில் உள்ளது.
6) துத்த நாகம்: மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் தைரோடிரோபின் ரிலீசிங் ஹார்மோன் சரியான அளவு சுரக்க துத்தநாகம் தேவை. கடல் சிப்பி, முந்திரிப்பருப்பு, பாதாம், வேர்க்கடலை, கொண்டக்கடலை, பூசணி விதை, கருப்பு சாக்லேட், இறைச்சி வகைகள், மீன் வகைகள், தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளை பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் இவைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.
7) தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ராக்கோலி, டர்னிப் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம்.
இன்னும் சில ஆண்களும், பெண்களும் எனக்கு சமீபத்தில் குரல் மாறிவிட்டது. பேச்சு சரியாக வரவில்லை. படுத்தால் மூச்சு திணறுகிறது. முன் கழுத்தில் கட்டி உள்ளது. அது வளர்ந்து வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பல பெண்கள் எனக்கு அடிக்கடி வியர்க்கிறது. நெஞ்சு துடிப்பு அதிகமாக உள்ளது. அடிக்கடி கோபப்படுகிறேன். கோபத்தை அடக்க முடியவில்லை. வயிற்றுப்போக்கு போகிறது, உடல் எடை குறைந்துவிட்டது இதற்கு தீர்வு என்ன? என்று கவலையுடன் கூறினர்.
இந்தக் குரல் உலகின் எல்லா நாடுகளிலும் சாதி, மத, இனம் கடந்து பல நூறு ஆண்டுகளாக ஒலித்து வந்தது. மருத்துவ உலகம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற பல்வேறு விதமான நோய்கள் இருக்கின்றன என கண்டறிந்து கூறியது. தைராய்டு சுரப்பி நோய்களால் உலகளவில் 150 மில்லியன் மக்களும் இந்திய அளவில் 13 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவரை அணுகுவதில் அதிகமான கால தாமதம் ஏற்பட்டு நோய் பாதிப்பும் கடுமையாக உள்ளது என தெரிவித்தது.
மேலும் பிறவியிலேயே தைராய்டு செயல்பாடு குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் மூளை பாதிக்கப்படும் என தெரிவித்தது. தைராய்டு சுரப்பி நாளமில்லா சுரப்பிகள் வகையைச் சேர்ந்தது பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி கணையத்தில் உள்ள வீட்டா லாங்கர்ஹன் சுரப்பி முதலியவை இந்த வகைகளை சேர்ந்தவை. இவற்றின் சுரப்புகள் ஒரு நாளத்தின் துணையில்லாமல் நேரடியாக ரத்தத்தில் கலந்து தங்கள் பணியைச் செய்வதால் இவற்றிக்கு நாளமில்லா சுரப்பிகள் என பெயர் வந்தது.
பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பி சரியாக இயங்குகிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் தாயின் முகம் பார்க்க வேண்டும். 5 முதல் 6-வது மாதத்தில் தலை ஆட்டம் நிற்க வேண்டும். 8-வது மாதத்தில் தவழ்ந்து, 1 வயதில் நடை பயில தொடங்கி, சின்ன சின்ன வார்த்தைகள் பேசத் தொடங்கினால் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்கிறது எனலாம். இதில் காலதாமதம் ஏற்பட்டால் தைராய்டு சுரப்பியில் கோளாறு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
தைராய்டு சுரப்பி கழுத்தின் முன் கீழ்ப்பகுதியில் சிறகு விரித்த வண்ணத்துப் பூச்சி வடிவில் உள்ளது. இதில் சுரக்கும் தைராக்ஸின் என்னும் ஹார்மோன் உணவில் உள்ள சத்துகளை சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரித்து நாம் வேலை செய்ய தேவையான சக்தியை வழங்குகிறது. இந்த தைராக்ஸின் ஹார்மோன் தயாரிக்க அயோடின் சத்து மிக மிக அவசியமானது. இது நாம் வசிக்கும் மண்ணிலிருந்து நாம் உண்ணும் உணவு, காய்கறிகள், பால், மீன், தண்ணீர் மூலம் அயோடின் உப்பாக உடம்பிற்கு கிடைக்கிறது.

தைராய்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் பெரும்பாலும் 5 வகைப்படும். அவை, தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தல் முன்கழுத்து கழலை தைராய்டைட்டிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் வியாதி தைராய்டு கேன்சர்.
இதில் முன் கழுத்து கழலை அதிகமாக பூப்பெய்தும் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளைப் பாதிக்கிறது. காரணம் அந்த வயதில் அதிகமாக தேவைப்படும் அளவு அயோடின் சத்து உடலுக்கு கிடைக்காமல் போவதாகும். தைராய்டு நோய்களில் இது தான் அதிகமானவர்களை பாதிக்கிறது. தைராய்டைட்டிஸ் நோய் தைராய்டு திசுக்களுக்கு எதிராக நமது உடம்பில் சில சுரப்புகள் சுரந்து அவற்றை அழிப்பதால் ஏற்படுகிறது.
தைராய்டு வேலைத்திறன் குறைவு நோய் அயோடின் சத்து குறைவு மற்றும் தைராக்ஸினுக்கு எதிரான ஆன்டிபாடிஸ் நம் ரத்தத்தில் இருப்பதால் ஏற்படுகிறது. பிறவியிலேயே அயோடின் சத்து குறைவான தாயாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இவை தவிர தைராய்டு சுரப்பியில் புற்று நோய்களும் ஏற்படுகின்றன. அது மனிதனுக்கு ஏற்படும் மொத்த புற்றுநோய்களில் 1 சதவீதம் அளவில் உள்ளது.
இவை அனைத்திலும் முன் கழுத்து கழலை நோயின் தாக்கம் தான் இந்தியாவில் அதிகம். எனவே அதை தடுக்கும் நோக்கில் இந்திய அரசு சமையல் உணவில் அயோடின் உப்புகளை குறிப்பிட்ட அளவில் கலந்து மக்களுக்கு வழங்க சட்டமியற்றியுள்ளது. இதனால் இந்தியாவில் முன் கழுத்து கழலை அதிகமாக இருந்த உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன் கழுத்து கழலை 1,000 பேருக்கு 100 பேர் என்கின்ற நிலை மாறி ஆயிரத்திற்கு 18 பேர் என்ற நிலையை அடைந்துள்ளது.
மழை மறைவு பிரதேசம் மற்றும் மலை அடிவாரங்களில் வாழும் மக்களுக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் அயோடின் கலந்த உப்பு மிக மிக அவசியம். தைராய்டு வியாதியை தடுக்க உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் வாரம் மூன்று முறை உணவில் கடல் மீன்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அயோடின் சத்து மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் திரவ வடிவில் இருக்கும் அயோடின் உப்பை மருத்துவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் தைராய்டு நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.
அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம். எனவே பொதுமக்களிடம் தைராய்டு நோய்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என கருதி அமெரிக்க தைராய்டு சங்கம் மற்றும் ஐரோப்பிய தைராய்டு அசோசியேஷன் இரண்டும் இணைந்து 2008-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி முதல் ஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் எல்லா நாடுகளிலும் விழிப்புணர்வு நாளாக கொண்டாட அறிவுறுத்தியது. நமது நாட்டிலும் உலக தைராய்டு தினம் மே 25-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் தைராய்டு நோய்கள் தடுப்பு முறைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி நோயற்ற வாழ்வு வாழ விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது தலையாய கடமை.
டாக்டர் வி.எஸ்.சுரேந்திரன்,
உதவி தலைவர்,
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.






