search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac shop money robbery"

    திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடியனூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட யாகப்பன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 4 நாட்களாக பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை களைகட்டியது. நேற்று இரவு வியாபாரம் முடிந்து விற்பனையாளர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    அப்போது விற்பனை தொகை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை தரை தளத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிச் சென்றனர். டாஸ்மாக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் மற்றும் 2 மது பாட்டில் பெட்டிகளை தூக்கிச் சென்றனர். இன்று காலை விற்பனை மேற்பார்வையாளர் வெங்கிடு சுப்பிரமணி மற்றும் பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்த போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர். துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது டாஸ்மாக் கடை வியாபாரம் அமோகமாக நடக்கும். இது போன்ற நாட்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
    செஞ்சி அருகே டாஸ்மாக் அதிகாரியை தாக்கி ரூ.76 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவர் செஞ்சி அருகே கடலாடிகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வேலை முடித்து விட்டு விற்பனையான பணம் ரூ.76 ஆயிரத்தை எடுத்து தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக அதே மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு புறப்பட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏழுமலையை பின்தொடர்ந்து வந்தனர். செஞ்சி காப்புகாடு பகுதியில் பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் ஏழுமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலைதடுமாறிய ஏழுமலை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது மர்ம மனிதர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மிளகாய் பொடியை ஏழுமலையின் கண்ணில் தூவினர். அவர் கண்எரிச்சலில் துடித்தார். பின்னர் அவர்கள் ஏழுமலையை தாக்கினர்.

    ஏழுமலை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.76 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை இயக்க முடியாததால் அதனை அங்கேயே நிறுத்தினர். ஏழுமலையின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ×