search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளை
    X

    திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளை

    திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடியனூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட யாகப்பன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 4 நாட்களாக பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை களைகட்டியது. நேற்று இரவு வியாபாரம் முடிந்து விற்பனையாளர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    அப்போது விற்பனை தொகை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை தரை தளத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிச் சென்றனர். டாஸ்மாக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் மற்றும் 2 மது பாட்டில் பெட்டிகளை தூக்கிச் சென்றனர். இன்று காலை விற்பனை மேற்பார்வையாளர் வெங்கிடு சுப்பிரமணி மற்றும் பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்த போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர். துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது டாஸ்மாக் கடை வியாபாரம் அமோகமாக நடக்கும். இது போன்ற நாட்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×