search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "takes oath"

    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCabinet
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

    இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.

    பின்னர் முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேலிடப் பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.



    இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்காத நிலையில், 7 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#KarnatakaCabinet
    இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 6 உறுப்பினர்களை கொண்ட புதிய மந்திரிசபை பதவி ஏற்றது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் 25-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் நியமிக்கப்பட்டார். இவர் 1-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 6 உறுப்பினர்களை கொண்ட புதிய மந்திரிசபை பதவி ஏற்றது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மந்திரிசபையில் இடம் பிடித்தவர்கள், பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் முன்னாள் கவர்னர் சாம்ஷெத் அக்தர், ரோஷன் குர்ஷித், பாரிஸ்டர் அலி ஜப்பார், முன்னாள் ஐ.நா. தூதர் அப்துல்லா உசேன் ஆரூண், அசம்கான், முகமது யூசுப் ஷேக் ஆவார்கள்.

    இவர்கள் அனைவரும் நாட்டு நிர்வாகத்தில் இடைக்கால பிரதமர் நசிருல் முல்குக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
    பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நசிருல் முல்க் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மந்திரிகளுக்கான இலாகா விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. 
    பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் கோலாகல விழாவில், கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கிறார். துணை முதல்-மந்திரியாக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதவி ஏற்கிறார். #Kumaraswamy #KarnatakaChiefMinister
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, மந்திரி பதவி பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி உள்பட 12 மந்திரி பதவியும் மற்றும் துணை சபாநாயகர் பதவியும், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 22 மந்திரி பதவியும் மற்றும் சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி ஏற்பார்.

    இந்த தகவலை கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. இதற்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விதான சவுதா மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு கட்டிடத்திற்கு மத்தியில் உள்ள சாலையில் சுமார் 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அமர்ந்து பதவி ஏற்பு விழாவை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு இன்று முக்கியமான அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூரு வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

    நாடு தழுவிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் நோக்கத்தில், குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வதன் மூலம் பா.ஜனதாவுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில் ஒரு பலமான அணி அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனால் குமாரசாமி பதவி ஏற்பு விழா, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 
    ×