search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள் கோவை நியூஸ் கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் நியூஸ்"

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அன்னூரை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மயில்கல்லை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அப்புகுட்டி (வயது 33). டிரைவர். 
     
    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அன்னூரை சேர்ந்த பிரியங்கா (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 7 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர். இந்தநிலையில் அப்புக்குட்டி, அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவை கொடுமைப்படுத்தி வந்தனர். 
     
    சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்த பிரியங்காவை தாக்கினர். இதில் அவரது வலது கை உடைந்தது. பின்னர் அறைக்குள் தள்ளி பூட்டினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரியங்கா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். 
     
    பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் குனி யமுத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விசாரணை நடத்தினர். 

    அவர் அளித்த புகாரின் போலீசார் வரதட்சணை கேட்டு மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி, அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அப்புக் குட்டி யை போலீசார் கைது செய்தனர்.அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதி, துரைராஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
    கொப்பரை கொள்முதல் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
     
    இதுகுறித்து குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைதிட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொப்பரை கொள்முதல் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள 2 வேளாண் விற்பனை கூடங்களிலும் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

    பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை, கிணத்துக்கடவு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலைதிட்டத்தின் கீழ் அரவை கொப்பரை ரூ.105.90க்கும், பந்து கொப்பரை ரூ.110க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஜூலை மாதம் இறுதி வரை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    கொப்பரை கொள்முதல் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை போனில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பள்ளி விடுமுறை என்பதால் அனைவரும் அவர்களது சொந்த ஊரான சென்னைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டனர்.
    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டை பகுதியில் வசித்து வருபவர் சங்கர் மூர்த்தி (49). 
     
    சென்னையை சேர்ந்த இவர் கடந்த 4  வருடங்களாக கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள வேட்டைக்காரன் குட்டை பகுதியில்  வாடகை வீட்டில் தனியார்  சைசிங்கில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். 

    இவரது மனைவி  மற்றும் மகள் ஆகியோர் பள்ளி விடுமுறை என்பதால் அவரது சொந்த ஊரான சென்னைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டனர். சங்கர்மூர்த்தியும் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். 

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  போலீசார் விசாரணை நடத்தினர்.  
      
    அப்போது  வீட்டினுள் இருந்த பிரோவில் வெள்ளி பொருட்கள் சுமார் 1¼ கிலோ, தங்கம் 3 கிராம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து சங்கரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
     
    கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஜன்னல், கதவு செய்ய ஒர்க் ஷாப் முன்பு போடப்பட்டிருக்கும் இரும்பு பொருள்கள் மற்றும் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடுவது,  செல்போன் பறிப்பு மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணனுக்கு கோவை வடவள்ளி அருகே உள்ள நாகராஜபுரத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சத்யா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் காளம்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). டாக்சி டிரைவர். 
     
    இவருக்கு திருமணமாகி அமுதகனி என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கிருஷ்ணனுக்கு கோவை வடவள்ளி அருகே உள்ள நாகராஜபுரத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சத்யா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த 23-ந் தேதி கிருஷ்ணன் தனது காரில் நாகராஜபுரத்தில் உள்ள கள்ளக்காதலி வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கே தங்கி இருந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் கள்ளக்காதலி சத்யா கிருஷ்ணனின் மனைவியை  செல்போனில் தொடர்பு கொண்டார். 

    அப்போது உனது கணவர் எனது வீட்டில் உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். எனவே வந்து அழைத்து செல்லும்படி கூறினார். பின்னர் அவரே தனியார் ஆம்புலன்சில் கிருஷ்ணனை கொண்டு சென்று அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அமுதகனி தனது கணவரை பார்த்த போது அவர் இறந்து இருந்தார்.

     இது குறித்து அவர் சத்யாவிடம் கேட்ட போது நான் உணவு சமைத்துக்கொண்டு இருந்தேன். அப்போது கிருஷ்ணன் விளையாட்டாக நான் தூக்கு போட்டு தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறினார். நான் விளையாட்டாக தானே கூறுகிறார் என்று நினைத்தேன். 

    ஆனால் அவர் உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் உடல் நிலை சரியில்லை என்று கூறி ஆம்புலன்சில் எடுத்து வந்தேன் என கூறினார்.

    இதனையடுத்து அமுதகனி இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    பெற்றோரை பிரிந்து 5 திருநங்கைகளுடன் வசித்து வந்தார். அனைவரும் சமையல் வேலை செய்து வந்தனர்.
    கோவை:

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள வாஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் அபர்னா என்ற விக்னேஷ் (வயது 26). திருநங்கை.

    இவர் தனது பெற்றோரை பிரிந்து 5 திருநங்கைகளுடன் வசித்து வந்தார். அனைவரும் சமையல் வேலை செய்து வந்தனர். 

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அபர்னா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும் வயிற்று வலி, உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அபர்னா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக திருநங்கைகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட திருநங்கை அபர்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    
    ஆத்திரம் அடைந்த அமிர்தராஜ் தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போதுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் அமிர்த ராஜ் (வயது 33). எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர் பிரசவத்துக்காக தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார். 

    சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அமிர்தராஜ் தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போதுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா தனது கணவரின் நண்பரான கணேசபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். 

    அவர் உடனடியாக அமிர்தராஜின் வீட்டிற்கு விரைந்து சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அமிர்தராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட அமிர்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
    மக்களுக்காக தங்களது வரிவருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரிவருவாயை குறைத்து கொள்வதில் எந்த தவறுமில்லை
    கோவை:

    கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்  கூறியதாவது:- 

    மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரிவருவாயையும் குறைத்துள்ளது. அதுபோன்று, மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல்  விலையை குறைத்து வரிவருவாயை குறைத்து கொள்ள வேண்டும்.

    மக்களுக்காக தங்களது வரிவருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரிவருவாயை குறைத்து கொள்வதில் எந்த தவறுமில்லை.
     
    தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாதம் பிடித்து வருகிறார்.மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாயமும் இல்லை .

    அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 

    ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டாச்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது.தனிப்பட்ட ஆதாயத்திற்காக மோடி அரசை அவர் எதிர்க்கிறார்.

    கொரோனாவால் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கு தேவையான நிதியை, மத்திய அரசு வழங்கி வருகிறது.

    மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பா.ஜனதா பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது என்பது தமிழகத்தின்  சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுகிறது. அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருகிறது. 

    தி.மு.க.வின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும். தற்போது மக்கள் ஏன் தி.மு.க விற்கு வாக்களித்தோம் என்று  நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    24 மணி நேர குடிநீர் திட்டம், வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூரில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    கோவை:

    தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேற்று கோவைக்கு வந்தனர். 

    அவர்கள்  தலைவர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., தலைமயில்  ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, காய்கறி கழிவு மூலம் உரம் தயாரிக்கும் பணிகள், விதை பரிசோதனை நிலையம், ஜான் பாஸ்கோ சர்ச்சில் இருந்து ஜி.என். மில் சந்திப்பு வெள்ளக்கிணறு பிரிவு மேம்பாலம் கட்டும் பணி, பெரிய நாயக்கன் பாளையம் சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    இதனை தொடர்ந்து கொடிசியாவில் நடந்த அனைத்து துறை அலுவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

    சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் இன்று 2-வது நாளாக குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவினர் காலை 9 மணிக்கு உக்கடம் வாலாங்குளத்தை ஆய்வு செய்தனர். 

    அதனை தொடர்ந்து ஜெய்ராம் நகரில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டம், வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூரில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
     
    இந்த ஆய்வின் மதிப்பீட்டு குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அன்பழகன், ஈஸ்வரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், எழிலரசன்,  பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், அம்மன் அர்ச்சுணன்,  சதன் திருமலைகுமார், சிவக்குமார் என்கிற தாயகம் கவி , மாவட்ட கலெக்டர் சமீரன், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச் செல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் பலர் உடன் இருந்தனர். 
    போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    சரவணம்பட்டி:

    கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையம் ராமன் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி சாவித்ரி (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு  வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். 

    அப்போது சாவித்ரியை மோட்டார் சைக்கிளில்  2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் சாவித்ரி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் பிரஸ் காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
     
    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த,  ஒருவர் துர்நாற்றம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தார்.

    அப்போது அங்கு அவர் கண்ட காட்சி அவரை நடுநடுங்க வைத்தது. வாலிபர் ஒருவரின் உடல் தலையில்லாமல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்ததும் பதறி போன அவர் உடனடியாக சம்பவம் குறித்து, பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
     
    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர். அப்போது வாலிபரின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. 

    மேலும் அவரது உடலில் தலை மட்டும் தனியாக கிடந்தது. இறந்து கிடந்தவருக்கு 45 முதல் 50 வயது வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்கலாம் என்றும், இதனால் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர் யார் என்பதை அறிய உடல் அருகே ஏதாவது தடயங்கள் கிடக்கிறதா என தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் இதுவரை தெரியவில்லை.

    இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது யாராவது மது அருந்த அழைத்து வந்து அடித்து கொன்று விட்டு உடலை அப்படியே இங்கு போய்விட்டனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    இதுகுறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடையில் காப்பர் கம்பி திருடு போனது. இதுகுறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். 

    விசாரணையில் அவர்,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த காளியப்பன் என்பதும், திருட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    மேலும் இவர் யாரும் தன்னை கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல கையில் சாக்கு, தாடி, மீசையுடன் சுற்றியதும் கண்டுபிடிக்கப்பட்து. இவர் மீது ஏற்கனவே காட்டூர், ரத்தினபுரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தேர் திருவிழாவுக்கு முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கோவில்களிலும் நாளை கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தொடர்ந்து  விழா நாட்களில்  தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று காலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     நாளை (26-ந் தேதி) தொடங்கி 27 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  நாளை  தேரோட்டம் தொடங்குவதால்  தேரில் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராக உள்ளது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறு கிறது.  

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கோவில்களிலும் நாளை கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

    பெண்கள் கிராமங்களில் மடிப்பிச்சை எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்தி க்கடன் செலுத்தினார்கள். மேலும் செஞ்சேரி மலையைச் சேர்ந்த ஆண் பக்தர் 30 அடி நீள அலகு குத்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி னார். 

    இதேபோல மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிேஷக பூஜையில் 18 கிராம பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 

    பின்னர் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த சூலக்கல் மாரியம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்த ர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    ×