search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subbulakshmi Jagadeesan"

    • நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் தி.மு.க. தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன்.
    • எந்தக் காலத்திலும் உங்கள் மகன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க.வில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு,

    சிறு வயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். உங்களை 'அம்மா' என்று அழைப்பதில் பேருவகைக் கொள்கிறேன்.

    விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் உங்களை 'சுப்பக்கா' என்று பாசத்தோடு அழைத்த அந்தக் காலகட்டத்தில் உங்களின் அருமை எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போதுதான் நீங்கள் எப்பேர்ப்பட்ட கொள்கை உறுதிகொண்ட பெண்மகள் என்பதையும், எவ்வளவு போற்றுதலுக்குரியவர் என்பதையும் உணர்கிறேன். உங்களை இழந்ததற்கு தி.மு.க. தான் வருந்தி, திருந்த வேண்டும்.

    நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் தி.மு.க. தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். இந்த வேலைத்திட்டத்தால் நம் தமிழினமே பெரும் அழிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளதை நன்றாக உணர்கிறேன். எனவே எந்தக் காலத்திலும் உங்கள் மகன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க.வை விட்டு வெளியேறிவிட்டதால், தனியொரு பெண்மகள் என்று தயங்காமல் உங்கள் கருத்துக்களைத் துணிவுடன் எடுத்துக் கூறுங்கள். பா.ஜ.க.வை விமர்சிக்க தி.மு.க.வில் இருப்பது தடை உள்ளது. அதனால் நான் விலகி சுதந்திரமாக தனித்து நின்று விமர்சிப்பேன் என்ற உங்களது கொள்கை உறுதியை கண்டு வியக்கிறேன். உங்களைப் போன்ற தாய்மார்கள் இன்னும் இந்த மண்ணில் இருப்பதினால்தான் இன உணர்வும், மான உணர்வும் மங்காது மலர்கிறது.

    இயக்கத்தில் இருந்தபோதும் தனித்த பேராற்றல் நீங்கள். தனித்து இருந்தாலும் மாபெரும் இயக்கம் நீங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களைக் கொண்டாடக்காத்து உள்ளார்கள்.

    உங்களுடைய மகன் என்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். உங்களுடைய தன்மான உணர்வுக்கும், தமிழ் உணர்வுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
    • சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.

    சென்னை:

    தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இதே பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமி அரசியல் ரீதியாக தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். அது வேறு. இது வேறு. இரண்டையும் ஒப்பிடக்கூடாது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகினாலும் தி.மு.க. உணர்வுடன்தான் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணைகிறேன் என்று சொல்லவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.

    ஆனாலும் அவரது கணவர் ஜெகதீசன் சமூக வலைதளங்களில் தி.மு.க.வை பற்றி விமர்சித்து வருகிறார். அவரது பதிவுகளை நீக்கக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவர் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    ஈரோடு:

    தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் இளைஞர்களுக்கு வழி விடுவதாகவும் அறிவித்தார்.

    இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஏராளமான தி.மு.க.வினர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அவர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சித்தலைமை மூலம் ஷீட் வாங்க கடுமையாக போராடினர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக சுப்புஜெகதீசன் அறிவிக்கப்பட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகிகளையும் சந்திக்காமல் இந்தார். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஷீட் கொடுத்ததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தேர்தலின் போது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 2 ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. இதே போல் கட்சி நிர்வாகிகளும் தங்களை அரவணைத்து தேர்தல் பணியாற்றவில்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் மீதும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

    தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜனதா வேட்பாளர் சரஸ்வதியிடம் 206 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்காததால் தோல்வியை தழுவியதாக மீண்டும் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து 2 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒரு முக்கிய நிர்வாகி மீது கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தார். கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் தனக்கு கட்சியில் எந்த அங்கீகாரமும் இல்லை என்று முடிவு செய்து தலைமைக்கு ராஜினமா கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளம் மூலம் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே சுப்புலட்சுமி விவகாரத்தில் என்ன நடந்தது என்று அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பு போன்றவற்றில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் ஓட்டு எண்ணிக்கையில் சுப்புலட்சுமி ஜெகதீசனே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் தபால் ஓட்டில் தி.மு.க.வுக்கு விழுந்த ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் குறைந்த ஓட்டில் சுப்புலட்சுமி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அப்போது தி.மு.க.வுக்கு விழுந்த தபால் ஓட்டுகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததற்கு சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஆதரவாக நிர்வாகிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. அப்போதே அவர் மனம் உடைந்து விட்டார். தேர்தல் தோல்விக்கு பின்பும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு கட்சி நிகழ்ச்சிகளுக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசனை அழைப்பதில்லை. தொடர்ந்து அவரை புறக்கணித்து வந்தனர். ஆனாலும் கடந்த மாதம் முதல்-அமைச்சர் கலந்து கொண்ட 2 நிகழ்ச்சிகளிலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார்.

    தன் தேர்தல் தோல்விக்கு காரணமான 2 ஒன்றியச் செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாலும், தனது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார். மாநில நிர்வாகியான சுப்புலட்சுமி ஜெகதீசனை கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளர்களாக இருந்த நிர்வாகி கூறியதாவது:-

    சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளராக இருந்து வந்த நான் அவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு பணியாற்றினேன். இந்த நிலையில் கட்சி தலைமை மீது அவரது கணவர் ஜெகதீசன் முகநூலில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தார்.

    கட்சி பொறுப்பில் இருந்து கொண்டு கட்சியை விமர்சிக்கும் அவரது கணவருக்கு சுப்புலட்சுமி எதிர்பு தெரிவிக்கவில்லை. இதனால் நான் உள்பட ஏராளமான ஆதரவாளர்கள் சுப்புலட்சுமியிடம் இருந்து விலகி வந்து விட்டோம். பேசி தீர்க்க வேண்டிய உட்கட்சி பிரச்சனையை தேர்தல் தோல்வியை மையமாக வைத்து அவரது கணவர் முகநூலில் விமர்சித்ததால் அவரது ஆதரவாளர்களே எதிர்பாளர்களாக மாறி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது.
    • நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன்.

    ஈரோடு:

    தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

    அதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன்.

    நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்து வருகிறார்.
    • தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.

    ஈரோடு:

    முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் அவர் இருந்து வருகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரை எதிர்த்து பா.ஜ.க.வை சேர்ந்த சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 ஓட்டு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை.

    மேலும் தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமீபகாலமாக கட்சி தலைமைக்கு எதிராக அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

    கடந்த 15-ந்தேதி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உறுதி செய்ய முயன்றபோது சுப்புலட்சுமி ஜெகதீசனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் இன்று காலை முதல் பத்திரிகையாளர்களின் முயற்சிக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அவரது ஆதரவாளர்கள் மட்டும் சந்தித்து பேசி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரம் பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது.

    சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    ×