என் மலர்
நீங்கள் தேடியது "வடிவேலு காமெடி"
- தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
- தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவோடு கூட்டணி வைத்தற்குக் காரணம் பழனிசாமியின் குடும்பம்தானே!
தமிழக அரசியலில் ஒரு சம்பவத்தை சாதாரண காலத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், அதற்கு ஆளும் கட்சிகள் பதில் அளிப்பதும் தொடர்கதை தான். ஆனால் தேர்தல் களம் நெருங்க நெருங்க இரு தரப்பில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்திற்கு மாறிமாறி குற்றம்சாட்டுவதும் அதற்கு சமூக வலைத்தளங்களில் காமெடி கலந்த வகையில் மீம்ஸ்கள் பரப்பப்படுவதும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தற்போது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் தரப்பில் விமர்சிக்கப்படும் விஷயம் தான் நிதி ஆயோக். கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதும் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்து இருந்தார். அவர் கூறியதாவது:- "மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...
இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி...
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா...
எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என்று பதில் அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு, முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.
உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? மு.க.ஸ்டாலின் அவர்களே-
அது கண்ணாடி! …
உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்
காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக
வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எது ஸ்டாலினின் கை? என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி பதில் கூறியிருந்தார்.
இதனிடையே, தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவோடு கூட்டணி வைத்தற்குக் காரணம் பழனிசாமியின் குடும்பம்தானே! "படுத்தே விட்டாரய்யா..." என்ற சொல்லுக்கு மொத்த உருவமே கூவத்தூர் பழனிசாமி. முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார். அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு என விமர்சித்தது.

இதனை தொடர்ந்து சென்னை மத்திய பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் எக்ஸ் தள பக்கத்தில் வடிவேலு பட காட்சியை பகிர்ந்து, 'மருதமலை' திரைப்படத்தில் கைதியை தப்பவிட்ட வடிவேலுவை பார்த்து அர்ஜுன், ''என்னென்னமோ பேசுவியே இப்ப பேசுடா... எதாவது பேசுடா'' என்ற காமெடிதான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லி வரும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா? ED, தன் வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா?
"அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்'' எனக் கடந்த 17-ம் தேதி வீராவேசமாகக் கேட்ட சூராதி சூரர் யார்? அந்த சூனா பானாவை கண்டா வரச் சொல்லுங்க… கையோடு கூட்டி வாருங்க.
பொய்களையும் அவதூறுகளையும் வைத்தே அரசியல் செய்யும் 'பச்சைப் பொய்' பழனிசாமி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டு, வெட்கி தலைகுனிய வேண்டும்! பாஜகவின் அடிமையாக வாழ்ந்து, அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி, கீழ்த்தரமான அரசியல் செய்து வரும் பழனிசாமியின் அருவருக்கத்தக்கப் பித்தலாட்ட அரசியல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது.
பழனிசாமி பதில் சொல்லுவாரா... பம்மி கிடப்பாரா? என்று விமர்சித்து உள்ளார்.
இப்படி ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் விமர்சிக்கும் போது காமெடிக்கு புகழ்பெற்ற வடிவேலு படங்களில் வரும் காமெடி வசனங்களை வைத்தே விமர்சிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். கிணறு வெட்டுவதற்காக வங்கிக்கடன் வாங்கிய வடிவேலு, கிணறு வெட்டாமல் காலம் கடத்துவார். ஆனால் கிணறு வெட்டியதாக ரசீதை பெற்றுக்கொண்டு தனது கிணற்றை காணோம் என அவரே போலீசில் புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.
அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை காட்சியை போல, வீட்டை காணோம் என புகார் கொடுக்கப்பட்ட ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் அட்பார் கிராமத்தை சேர்ந்த பல்ஜரியா பாய் பாரியா என்ற பெண்ணுக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு ஒதுக்கப்பட்டது.
நீண்ட நாட்களாகியும் அவருக்கு வீட்டையோ அல்லது பணத்தையோ பஞ்சாயத்து அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று விவரம் கேட்டார். அப்போது அவரது பெயரில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், வீடு ஒன்றின் படத்தையும் பல்ஜரியாவிடம் காட்டினர். மேலும் இதற்காக பணம் வழங்கப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பல்ஜரியா, தனது வீட்டை காணவில்லை என பெண்ட்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்து நிர்வாகிகளின் ஆவணத்தில் மட்டுமே வீடு இருப்பதாகவும், உண்மையில் அப்படி ஒரு வீடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.
வீட்டை காணோம் என அளிக்கப்பட்ட இந்த புகாரை படித்த போலீசாருக்கு முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. எனினும் பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்தது.
பல்ஜரியாவுக்கு வரவேண்டிய ரூ.80 ஆயிரத்தை பஞ்சாயத்து ஊழியரான அவாஸ் மித்ரா திரவுபதி கைவர்ட் என்ற பெண் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு பயனாளியின் வீட்டின் படத்தை அளித்து 2 முறையாக இந்த பணத்தை வங்கியில் இருந்து அவர் எடுத்து இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவாஸ் மித்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேல் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
வீட்டை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMAY #StolenHouse #WomanComplain #Police






