search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMAY"

    • அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதை பெற்றுக்கொண்டார்.
    • சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    காந்திநகர்:

    பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் வழங்கப்பட்டன.

    இதில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். இந்த விருதை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டு வசதி மாநாட்டில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

    'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3-வது இடத்தையும், சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தையும், சிறந்த பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    கட்டிய வீட்டை காணோம் என போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்த ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMAY #StolenHouse #WomanComplain #Police
    பிலாஸ்பூர்:

    தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். கிணறு வெட்டுவதற்காக வங்கிக்கடன் வாங்கிய வடிவேலு, கிணறு வெட்டாமல் காலம் கடத்துவார். ஆனால் கிணறு வெட்டியதாக ரசீதை பெற்றுக்கொண்டு தனது கிணற்றை காணோம் என அவரே போலீசில் புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.

    அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை காட்சியை போல, வீட்டை காணோம் என புகார் கொடுக்கப்பட்ட ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் அட்பார் கிராமத்தை சேர்ந்த பல்ஜரியா பாய் பாரியா என்ற பெண்ணுக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு ஒதுக்கப்பட்டது.

    நீண்ட நாட்களாகியும் அவருக்கு வீட்டையோ அல்லது பணத்தையோ பஞ்சாயத்து அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று விவரம் கேட்டார். அப்போது அவரது பெயரில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், வீடு ஒன்றின் படத்தையும் பல்ஜரியாவிடம் காட்டினர். மேலும் இதற்காக பணம் வழங்கப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பல்ஜரியா, தனது வீட்டை காணவில்லை என பெண்ட்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்து நிர்வாகிகளின் ஆவணத்தில் மட்டுமே வீடு இருப்பதாகவும், உண்மையில் அப்படி ஒரு வீடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

    வீட்டை காணோம் என அளிக்கப்பட்ட இந்த புகாரை படித்த போலீசாருக்கு முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. எனினும் பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்தது.

    பல்ஜரியாவுக்கு வரவேண்டிய ரூ.80 ஆயிரத்தை பஞ்சாயத்து ஊழியரான அவாஸ் மித்ரா திரவுபதி கைவர்ட் என்ற பெண் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு பயனாளியின் வீட்டின் படத்தை அளித்து 2 முறையாக இந்த பணத்தை வங்கியில் இருந்து அவர் எடுத்து இருக்கிறார்.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவாஸ் மித்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேல் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMAY #StolenHouse #WomanComplain #Police
    நடுத்தர வருவாய் பிரிவினர் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வீட்டின் பரப்பளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. #PMAY
    புதுடெல்லி:

    ஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதமர் வீடு கட்டும் திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-1 என்றும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-2 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சம் 20 ஆண்டு காலத்துக்கு ரூ.9 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் முதல் பிரிவினர் 4 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும், ரூ.12 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் 2-ம் பிரிவினர் 3 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும் தகுதி படைத்தவர்கள் ஆவர். அதாவது, அவர்களுக்கான வட்டியில் மேற்கண்ட சதவீதத்துக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த வட்டி மானியம் பெற தகுதி பெறுவதற்கு வீட்டின் பரப்பளவிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வாங்கும் வீட்டின் சுவர்களுக்கு உள்ளடங்கிய உட்புற பரப்பளவு (கார்பெட் ஏரியா) 120 சதுர மீட்டராகவும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வாங்கும் வீட்டின் உட்புற பரப்பளவு 150 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த உச்சவரம்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வீட்டின் பரப்பளவு 160 சதுர மீட்டர்வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வீட்டின் பரப்பளவு 200 சதுர மீட்டர்வரையும் இருக்கலாம்.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் அதிகமானோர் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சலுகையால், மெட்ரோ நகரங்களை ஒட்டிய புறநகர்கள் மற்றும் சிறு நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று கட்டுமான தொழில் நிறுவன அதிபர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறைவான வருமானத்துடன் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமானோருக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் பிறக்கும் என்றும், கட்டுமான தொழில் வளரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 
    ×