என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் கடத்தல்"
அம்பத்தூர்:
பாடி வடக்கு மாடவீதியை சேர்ந்தவர் கோபிநாத் (71). இவர் நேற்று காலை அதே பகுதியில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் கோபிநாத்தை கத்தி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர். பின்னர் அவரிடம் இருந்த 6 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிட்டு இருவரும் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபிநாத் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் கோபிநாத்தை கடத்தியது திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான மகேஷ், அவனது கூட்டாளி விஜய் என்பது தெரிந்தது.
இதையடுத்து திருநின்றவூரில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இருவரும் இதே போல் பல்வேறு இடங்களில் முதியவர்களையும், தனியாக நடந்து செல்பவர்களையும் ஆட்டோவில் கடத்திச் சென்று கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.
மதுரை:
மதுரை செல்லூர் போஸ் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர் சம்பவத்தன்று நரிமேடு பஸ்நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 3 பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும். எனவே போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் எனக்கூறி அவர்கள் சுப்பிர மணியத்தை அழைத்துச் சென்றனர். அப்போது அந்த கும்பல் சுப்பிரமணியத்தை தாக்கியது.
சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுப்பிரமணியத்தை அடைத்த அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
பின்னர் சுப்பிரமணியத்தின் நண்பர் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகேந்திர பாண்டியன் என்பவரை தொடர்பு கொண்டு ரூ. 2 லட்சம் பணம் வேண்டும். இல்லை யென்றால் சுப்பிரமணியத்தை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நாகேந்திர பாண்டியன், மர்ம கும்பல் சொன்ன இடத்தில் வைத்து ரூ.2 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த கும்பல் சுப்பிரமணியத்தை விடுவித்தது.
இது குறித்து சுப்பிரமணியன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதில், சிவசுப்பிரமணியன் என்பவர் உள்பட 3 பேர் போலீஸ் போல் நடித்து கடத்திச் சென்று பணம் பறித்ததாக தெரிவித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.






