search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shrimant Taktushet Halwai Ganapati"

    • வருகிற 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களை பற்றி பார்க்கலாம்.

    மும்பை சித்தி விநாயகர்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான கணபதி கோவில்களில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை காண்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவார்கள். குழந்தை வரம் அருளும் விநாயகராக இவர் வணங்கப்படுகிறார். இந்த பழமையான கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து வழிபட்டுச் செல்வதைக் காண முடியும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள `சித்தி விநாயக் கணபதி மந்திர்' இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். அப்போது கோவில் வளாகம் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    புனே விநாயகர்

    மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்குப் பிறகு, மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புனேவில் உள்ள `ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி' கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில், ஆலயத்தின் உள்ளார்ந்த வடிவமைப்புகள் மற்றும் தங்க சிலைக்கு பிரசித்திப் பெற்றது. பிளேக் நோயால் தன் மகனை இழந்த ஒரு தொழிலதிபர் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கணேஷ் உற்சவத்தின் போது இந்த ஆலயம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.

    மகாராஷ்டிரா கணபதி

    ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கோவிலில், மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார் விநாயகப்பெருமான். இந்தக் கோவிலின் விநாயகர் சிலை யாராலும் வைக்கப்படவில்லை என்றும், சுயமாக உருவானது என்றும் தல வரலாறு சொல்கிறது. ஒருமுறை உள்ளூர் மாடு பிடிப்பவரின் பசு, பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய பால் முழுவதையும் சுரந்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்ததால், அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே விநாயகரின் சுயம்பு வடிவம் இருப்பதைக் கண்டார். அன்று முதல் இங்கு வழிபாடு நடைபெறுவதாக தல வரலாறு கூறுகிறது. பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தல விநாயகர் மீது, சூரிய ஒளி நேரடியாக விழுவதை கண்டு ரசிக்கலாம்.

    ×