search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presentation to 63 Nayanmars"

    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
    • பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சிகள், பூதவாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், புஷ்ப விமானம் கைலாச வாகன காட்சிகள் நடந்தன.

    நேற்று இரவு 10 மணியளவில் பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

    அப்போது வானவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகண பூத வாத்திய இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்கு வீதி கிழக்கு ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமி திரு வீதி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 9 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தொலைவு சென்றவுடன் நிறுத்தப்படுகிறது.

    22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 24-ந் தேதி அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும், 25-ந் தேதிதெப்ப தேர் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந் தேதி மகா தரிசனம், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×