என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Mubarak"

    • அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்தியுள்ள கொடூரமான மற்றும் ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் உலக அமைதிக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும்.
    • இந்தியா உடனடியாக இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், ஒரு நாட்டின் தலைவரை இலக்கு வைத்த தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்

    அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா சையது அலி கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது இந்த மறைவிற்கு இந்திய சமூக ஜனநாயகக் கட்சி நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்தியுள்ள கொடூரமான மற்றும் ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் உலக அமைதிக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த நவீன ஈரானின் அரசியல் மற்றும் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஈரான் நாட்டின் உயர் தலைவரான ஆயத்துல்லா சையது அலி கொமேனி அவர்களின் மறைவை நினைவுகூரும் இவ்வேளையில், ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஒரு குடியரசு நாட்டின் உயர் தலைவரை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய கொலை முயற்சிகள் சர்வதேச அரசியலில் எக்காலத்திலும் ஏற்புடையதல்ல. எந்த வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மேற்கு ஆசியாவின் பிராந்திய அமைதியைக் குலைப்பதோடு, ஒரு நாட்டின் இறையாண்மை, எல்லை மரியாதை மற்றும் சர்வதேச சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் ஆபத்தான செயலாகும். இவை மனிதாபிமானத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

    குறிப்பாக, இத்தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் – குறிப்பாக பிஞ்சுப் பள்ளிச் சிறுமிகள் உட்பட குழந்தைகள் – மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளின் உயிரிழப்பு போர் மற்றும் மோதல்களின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்தும் மிகப் பெரிய சாட்சியாகும். இத்தகைய மனித உரிமை மீறல்கள் மனிதகுலத்திற்கே அவமானம்.

    பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ள ஈரான் நாட்டு மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் பொறுப்புடன் தலையிட்டு, போர் வன்முறையைத் தடுத்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை, அப்பாவி உயிர்களைப் பாதுகாத்தல் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா உடனடியாக இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், ஒரு நாட்டின் தலைவரை இலக்கு வைத்த தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

    • ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக பேசுவது சட்டவிரோதமானது.
    • ஆளுநரை பதவியில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நெல்லை ராதாபுரம் தாலுகாவில் உள்ள இருக்கன்துறையில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் உள்ள நிலையில் புதிதாக 3 புதிய கல்குவாரிகளை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. கூடன்குளம் அணுஉலை கட்டுமானப் பணிகளின் தேவைக்காக இந்த குவாரிகளை அமைக்க இருப்பதாகவும், எஞ்சியவற்றை அருகில் உள்ள நுகர்வோர்களுக்கு வழங்குவதாகவும் கூறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளை அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

    இந்த குவாரிகள் அமையவிருக்கும் இடம் அணு உலையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளும், சுமார் 190 அடி ஆழத்திற்கும் அமைய உள்ளதால் அதனால் ஏற்படும் அதிர்வுகளால் அணு உலைகளுக்கு ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.

    ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் ஆளுநர் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு. ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி, அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, சிலவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார்.

    ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக பேசுவது சட்டவிரோதமானது.

    ஆகவே ஆளுநரை பதவியில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக 15 நாட்களை கடந்த பின்னரும் ஒருவரும் கைது செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கின்றது. காவல்துறை விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், மாநில மனித உரிமை ஆணையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் போன்றவையும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளன. தேங்கி நிற்கும் நீரால் டெங்கு பரப்பும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன.

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, டைபாய்டு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×