என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"ஈரானுக்கு எதிரான தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும்" - நெல்லை முபாரக்
- அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்தியுள்ள கொடூரமான மற்றும் ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் உலக அமைதிக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும்.
- இந்தியா உடனடியாக இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், ஒரு நாட்டின் தலைவரை இலக்கு வைத்த தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்
அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா சையது அலி கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது இந்த மறைவிற்கு இந்திய சமூக ஜனநாயகக் கட்சி நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்தியுள்ள கொடூரமான மற்றும் ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் உலக அமைதிக்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த நவீன ஈரானின் அரசியல் மற்றும் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஈரான் நாட்டின் உயர் தலைவரான ஆயத்துல்லா சையது அலி கொமேனி அவர்களின் மறைவை நினைவுகூரும் இவ்வேளையில், ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு குடியரசு நாட்டின் உயர் தலைவரை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய கொலை முயற்சிகள் சர்வதேச அரசியலில் எக்காலத்திலும் ஏற்புடையதல்ல. எந்த வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மேற்கு ஆசியாவின் பிராந்திய அமைதியைக் குலைப்பதோடு, ஒரு நாட்டின் இறையாண்மை, எல்லை மரியாதை மற்றும் சர்வதேச சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் ஆபத்தான செயலாகும். இவை மனிதாபிமானத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
குறிப்பாக, இத்தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் – குறிப்பாக பிஞ்சுப் பள்ளிச் சிறுமிகள் உட்பட குழந்தைகள் – மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளின் உயிரிழப்பு போர் மற்றும் மோதல்களின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்தும் மிகப் பெரிய சாட்சியாகும். இத்தகைய மனித உரிமை மீறல்கள் மனிதகுலத்திற்கே அவமானம்.
பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ள ஈரான் நாட்டு மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் பொறுப்புடன் தலையிட்டு, போர் வன்முறையைத் தடுத்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை, அப்பாவி உயிர்களைப் பாதுகாத்தல் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா உடனடியாக இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், ஒரு நாட்டின் தலைவரை இலக்கு வைத்த தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.






