search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayansamy"

    அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை கவர்னர் கிரண்பேடி சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், படைப்பாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அமைப்புகள் உள்ளிட்ட 21 கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    இதில் புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட தலைவர்கள் எங்கள் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்து புதுவைக்கு குந்தகம் விளைவித்து வரும் கவர்னர் கிரண்பேடியை உடனடியே வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடும் பனியை மீறி புதுவையை சேர்ந்த 700 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதச்சார்பற்ற அணிகள் இணைந்து டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது புதுவையில் இதுவே முதல்முறை. இந்த ஆர்ப்பாட்டம் புதுவை மாநில பிரச்சனைகளை நாடு முழுவதும் படம் பிடித்து காட்டியுள்ளது.

    புதுவை மாநில மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என நானும், அமைச்சர் கந்தசாமியும் கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால் கவர்னர் இதற்கு அனுமதி வழங்காமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு கோப்பை திருப்பி அனுப்பினார். கவர்னருக்கும், அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விதிமுறை 50-ன்படி கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும். இதை கவர்னர் ஏற்காவிட்டால் உள்துறைக்கு அனுப்ப வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்து மாற்ற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.

    இந்த விதிகளை சுட்டிக்காட்டி, அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டு அனுமதி தரும்படி கவர்னருக்கு மீண்டும் கோப்பு அனுப்பினோம். இதனிடையில் ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கவர்னர் அந்த கோப்பையும் திருப்பி அனுப்பி விட்டார்.

    தமிழகத்தில் பொங்கல் பொருட்கள் வழங்க ஐகோர்ட் தடை விதிக்கவில்லை. ரொக்கம் வழங்க மட்டுமே தடை விதித்தனர். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்பின் சர்க்கரை பெறும் அனைவருக்கும் பொங்கல் பொருட்கள், ரொக்கம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    புதுவையில் அனைத்து ரே‌ஷன்கார்டுகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. எனவே புதுவையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டி கவர்னருக்கு மீண்டும் கோப்பு அனுப்பியுள்ளோம். ஐகோர்ட்டு தீர்ப்பை கவர்னர் மதிப்பதாக இருந்தால், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு கொடுக்க உடனடியாக கோப்பில் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் புதுவை மாநில மக்களின் விரோதி கவர்னர் கிரண்பேடி என மக்கள் முடிவு செய்துவிடுவார்கள்.


    கவர்னருக்கு என தனி அதிகாரம் கிடையாது. அவர் அரசு நிர்வாகத்தில் தலையிட முடியாது, அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்யவும், அதிகாரிகளை மிரட்டவும் அதிகாரம் இல்லை என பலமுறை நான் சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை.

    புதுவை மாநில மக்களின் வளர்ச்சி, திட்டங்களை முடக்கும் வேலையில் அவர் இறங்கியுள்ளார். திட்டத்தை முடக்குவதால் ஒதுக்கப்பட்ட தொகை கூடுதலாகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    கிரண்பேடி அதிகாரிகளை பகிரங்கமாக ஊழியர்கள் மத்தியில் மிரட்டுகிறார், தவறாக பேசுகிறார். இதை வாட்ஸ்-அப், யூ-டியூப்பில் போட்டு அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார். கவர்னராக இருக்க கிரண்பேடி தகுதியில்லாதவர். நிர்வாக திறமையில்லை. திட்டங்களை முடக்குவதில்தான் அவர் குறியாக உள்ளார். அதற்கு சில அதிகாரிகள் துணை செல்கின்றனர்.

    ஏற்கனவே புதுவையில் 5 கவர்னர்கள் செயல்படுகிறார்கள் என நான் குற்றம்சாட்டியிருந்தேன். அதை நிரூபிக்கும் வகையில் கவர்னரோடு 5 அதிகாரிகள் பேட்டி தருகின்றனர். இது வெட்கப்படும் செயல். பதவி ஓய்வு பெற்ற அதிகாரி கவர்னரோடு அமர்ந்து எப்படி பேட்டி அளிக்கலாம்? இது கவர்னரின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம். அதிகாரிகளை வசைபாடுவதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தரம் தாழ்ந்த முறையில் பதவிக்கு தகுதியில்லாதவர் என்ற முறையில் கவர்னர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.

    மக்களால் தேர்வு செய்த அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அதை நிறைவேற்ற கோப்பு அனுப்பினோம். ஆனால் ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார். ரோடியர் மில்லை எவ்வாறு மேம்படுத்துவது என அமைச்சரவை முடிவு செய்யும். மக்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது.

    கிரண்பேடி இன்று இருப்பார், நாளை போய்விடுவார். மக்களின் உரிமையை பெற்றுத்தருவது எங்கள் கடமை. நாங்கள் கவர்னரோடு போராடி வருகிறோம். கவர்னர் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    அதேபோல ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலைகள், கூட்டுறவு நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

    துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடி கவர்னரின் செயல்பாடுகளை கண்டிக்காமல், அரசு அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இது மாநில மக்கள் பாதிக்கப்படும் வி‌ஷயம். கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுகாலம் இல்லை.

    புதுவை மக்கள் கொதித்தெழுந்தால் கிரண்பேடி காணாமல் போய்விடுவார். பல போராட்டங்களை புதுவை பார்த்துள்ளது. புதுவை மக்களை கவர்னர் கிரண்பேடி தவறாக எடை போட வேண்டாம். கிடைக்க வேண்டிய உரிமையை தடுத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #Kiranbedi
    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.

    ‘கஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையில் 14-ந்தேதி கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுவையில் 12 முதல் 15-ந்தேதிவரை பலத்த காற்றும், கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையிலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக தமிழகம், புதுவையில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் நானும், அமைச்சர் ஷாஜகானும் அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினோம்.

    அப்போது புதுவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பொதுமக்கள் புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டோம். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், செயலாளர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வருவாய், மீன், கல்வி, மருத்துவம், மின்சாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவையில் தாழ்வான பகுதிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை மழைக்காலத்தில் அங்கிருந்து அகற்றி சமுதாய கூடம், பள்ளிக்கூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை உடனே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்வர். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிகளில், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல்துறை மூலம் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    அமைச்சர் ஷாஜகான் இன்றும், நாளையும் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளார்.

    புதுவை அரசு ஏற்கனவே கால்வாய்களை தூர்வாரியுள்ளது. நகர பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்ளை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் தண்ணீர் தேங்கும் இடங்களான கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், நெல்லித்தோப்பு, சுப்பையா சிலை ஆகிய பகுதியில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக புதுவை அரசு கஜா புயலை சமாளிக்கவும், பேரிடர் வராமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இருப்பினும் அதிக வெள்ளம் ஏற்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை அணுகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    கேரளாவில் பலத்த மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். அனைத்து உதவிகளும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாக கேரள முதல்-மந்திரியுடன் நாராயணசாமி டெலிபோனில் பேசியுள்ளார். #keralaheavyrain #narayanasamy

    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலத்த மழையினால் ஏராளமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுடன் டெலிபோனில் பேசினார்.

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்தில் புதுவையும் பங்கேற்பதாகவும், மேலும் வெள்ள சேதங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். #keralaheavyrain #narayanasamy

    ×