search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Atishi"

    • டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
    • மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

    இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

    யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.

    டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×