search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Study"

    ‘5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் இடத்தையே இருப்பிடமாக கருத முடியும்’ என்று கூறி மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கக்கோரிய கேரளாவில் வசித்து வரும் தமிழக மாணவரின் கோரிக்கையை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வரும் மாணவர் கவுதம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நான், கடந்த 2000-ம் ஆண்டு கரூரில் பிறந்தேன். கோட்டயத்தில் உள்ள பள்ளியில் படிப்பை முடித்தேன். நீட் தேர்வில் 424 மதிப்பெண் பெற்றுள்ளேன். நான் தமிழகத்தில் பிறந்ததால் எனக்கு தமிழக அளவிலான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் கவுதம், கரூரில் பிறந்தாலும் தனது பெற்றோருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். பிளஸ்-2 வரை கேரள மாநிலத்தில் படித்துள்ளார். ‘நீட்’ தேர்வையும் கேரளாவில் தான் எழுதி உள்ளார். படிப்புக்காக அவர் கேரளாவுக்கு செல்லவில்லை. மாறாக அங்கேயே வசித்து வந்துள்ளார்.

    அவர் தாக்கல் செய்துள்ள இருப்பிடச் சான்றிதழை கோட்டயம் கிராம நிர்வாக அதிகாரி வழங்கி உள்ளார். அதில், மனுதாரரின் பெற்றோர் தற்காலிகமாக 20 ஆண்டுகள் கேரளாவில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஒரு இடத்தில் 20 ஆண்டுகள் வாழ்வது தற்காலிகம் என்று கூறியிருப்பதே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்திருந்தால் அவர், அந்த இடத்தைச் சேர்ந்தவராகவே கருதப்பட வேண்டும் என்று குடிமக்கள் தொடர்பான சாசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே மனுதாரர், தமிழக ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கை கோர முடியாது. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற உள்ளது. #NeetExam
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடுகிறது. 85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது. படிப்பில் சேர விண்ணப்பங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த தகவலை மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். #NeetExam
    தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இந்த தீர்ப்பின் காரணமாக மருத்துவக் கல்விக்கட்டணம் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும். ஆனால், உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலக் கல்விக் கட்டணமே மிகவும் அதிகம் என்பது தான் பெரும்பான்மையான கல்வியாளர்களின் கருத்து ஆகும்.

    தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் எந்தவிதமான கட்டமைப்பு சார்ந்த வித்தியாசங்கள் இல்லை. ஒரு காலத்தில் தனியார் கல்லூரிகளாக இருந்தவை தான், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறின. இவை எப்படி, எதற்காக, யார் மூலம் இந்த தகுதியை பெற்றன என்பது மிக நீண்ட பின்னணியாகும்.

    ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கும், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.2.85 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

    நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ரூ.12.50 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 65 சதவீதம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சராசரிக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.6.22 லட்சம் முதல் ரூ.6.97 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. இது ஓரளவு நியாயமானதாகும்.

    அதேநேரத்தில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் குறைந்தது ரூ.18 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ.22.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படும் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.6 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதவிர ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    நீட் தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டதால் நன்கொடை வசூலிப்பதை நிறுத்திவிட்ட நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், அதை ஈடு செய்யும் வகையில் ரூ.6 லட்சமாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.22.50 லட்சமாக உயர்த்திவிட்டன. ஒரே ஆண்டில் கல்விக் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்தியது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசோ, இந்திய மருத்துவக் குழுவோ கேட்கவில்லை. மாறாக, எந்த அடிப்படையும் இல்லாமல் மருத்துவக்கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தன.

    நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவும், இந்திய மருத்துவக் குழுவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். இந்திய மருத்துவக் குழு அனுமதித்தக் கட்டணங்களை பல்கலைக்கழக மானியக் குழு குறைக்காது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணம் எந்த வகையிலும் குறையாது. அதனால், தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும்.

    இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழுவால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்ற ஓரளவுக்காவது நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்; இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படுவது போன்ற இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற ஆணையிட வேண் டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #ramadoss
    தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கிடைக்கும். வருகிற 11-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்கள் 18-ந் தேதி வரை வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19-ந் தேதி (மாலை 5 மணிக்குள்) ஆகும்.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10’, என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

    தரவரிசை பட்டியல் 28-ந் தேதி வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும்.

    2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ந் தேதி முதல் ஜூலை 24-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. கல்லூரிகளில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். 18-ந் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் சேர்ந்துவிட வேண்டும்.

    மற்ற விவரங்கள் அனைத்தையும் www.tnh-e-a-lth.org, www.tnm-e-d-i-c-a-ls-e-l-e-ct-i-on.org ஆகிய இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    ×