search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magistrate Investigation"

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் ரவுடி ஆனந்தன் பலியான சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் இன்று விசாரணை நடத்தினார்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம். தர்கா சாலையில் மதுபோதையில் சாலையில் அமர்ந்து சிலர் ரகளை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ்காரர் ராஜவேல் சம்பவ இடத்துக்கு சென்றார். அவரை அந்த ரவுடி கும்பல் வெட்டியதுடன் அவரது வாக்கி டாக்கியையும் பறித்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு ரவுடிகளின் தாக்குதல் சம்பவம் நடந்தது. இதையடுத்து நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரவுடி கும்பலை பிடிக்க வேட்டையில் ஈடுபட்டனர்.

    விடிய விடிய நடத்திய அதிரடி வேட்டையில் போலீசாரை கத்தியால் குத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை 8 மணியளவில் அவர்களை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ஆனந்தன் (23), அருண், ஸ்ரீதர், சுந்தர் ஆகியோரை தனிப்படை போலீசார் வியூகம் வகுத்தனர்.

    அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சோழிங்கநல்லூர் பகுதியில் 4 ரவுடிகளும் இருப்பதாக மாலை 4 மணிக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ரவுடிகளை சுற்றி வளைத்து மாலை 6 மணிக்கு கைது செய்தனர்.

    போலீசார் ரவுடி ஆனந்தனிடம் விசாரணை நடத்தியதில் வாக்கிடாக்கியை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பதுக்கி வைத்திருப்பதாக மாலை 7 மணிக்கு தகவல் தெரிவித்தான்.

    இதையடுத்து மற்ற ரவுடிகளை ராயப்பேட்டை போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி விட்டு ஆனந்தனை மட்டும் வாக்கி டாக்கியை மீட்க இரவு 8 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கு ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த வாக்கிடாக்கியை எடுத்து கொடுத்த ஆனந்தன் திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை வெட்டினார்.

    இதைப்பார்த்த உதவி கமி‌ஷனர் சுதர்சன் மற்றும் இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு ஆகியோர் ரவுடி ஆனந்தனை எச்சரித்தனர். ஆனால் ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து வெட்டியதால் உதவி கமி‌ஷனர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஆனந்தனை நோக்கி சுட்டுள்ளார்.

    இரவு 8 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஆனந்தனின் இடதுபக்க மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் ஆனந்தன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். பலத்த காயம் அடைந்த ஆனந்தனையும், இளையராஜாவையும் மீட்டு இரவு 8.20 மணிக்கு தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆனந்தனை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரவு 9.30 மணியளவில் அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி ஆனந்தன் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    போலீசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே நடந்த தாக்குதல் சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது. இந்த தாக்குதலில் போலீசாரும் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொது இடத்தில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு செய்த ரவுடி கும்பலை சென்னை போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.



    இதற்கிடையே போலீஸ் துப்பாக்கி சூட்டில் ரவுடி ஆனந்தன் பலியான சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் இன்று விசாரணை நடத்தினார்.

    ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.
    சென்னை ரவுடி மரணம் அடைந்தது தொடர்பாக ஜெயில் அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

    பொன்னேரி:

    திருவொற்றியூர், பூங்கா புரத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், பிரபல ரவுடி. கடந்த 30-ந் தேதி பொன்னேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட பதுங்கி இருந்ததாக போலீசார் அவரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

    நேற்று காலை சிறையில் இருந்த அடைக்கலராஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலராஜ் இறந்தார்.

    அடைக்கலராஜின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி ருக்மணி சந்தேகம் எழுப்பி இருந்தார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அடைக்கல ராஜின் மரணம் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி மணி உத்தரவின் பேரில் பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். ஜெயில் அதிகாரிகள் மற்றும் அடைக்கலராஜின் உறவினர்கள், டாக்டரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் இன்று அடைக்கலராஜின் உடல் வீடியோ பதிவுடன் பிரேத விசாரணை செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    கோபி ஜெயிலில் அடைக்கப்பட்ட தொழிலாளி இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உள்ளார்.
    கோபி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நாகம்மா.

    இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 14-1-2017 அன்று இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் நாகம்மா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவண்ணாவை கைது செய்தார்கள்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு பசுவண்ணாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    அதன்பேரில் போலீசார் பசுவண்ணாவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு, பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஜெயிலில் இருந்த போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுவண்ணா பரிதாபமாக இறந்தார்.

    கைதியான பசுவண்ணா இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் இன்று கோபிக்கு வருகிறார்.

    பசுவண்ணாவுக்கு எப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது? எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்? எப்போது இறந்தார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் யார்? என்பது தொடர்பாக அவர் விசாரணை நடத்த இருக்கிறார். #tamilnews
    ×