search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayampatti"

    காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டியபுரம் கிராமத்தில் ஆசாரிபட்டறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தான் குடிநீர் வழங்க முடியவில்லை. பணிகள் சரி செய்து முடித்ததும் உடனடியாக குடி தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    ஆனால், அதிகாரிகள் கூறியபடி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து காலி குடங்களை எடுத்துக் கொண்டு வந்து இன்று காலை ஓமலூர்- தின்னப்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, நீங்கள் மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே நீங்கள் மறியலை கைவிடுங்கள். உங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.

    காடையாம்பட்டி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வீசாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 32). தச்சு தொழிலாளியான இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் மாயமானதால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை சின்ன திருப்பதி அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயில் மோதி இறந்திருக்கலாம் என்று கூறினர்.

    மேலும் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காடையாம்பட்டி பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே  ராக்கிபட்டி காலனி உள்ளது. இந்த பகுதியில்  300-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் மத்தியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியாண்டிச்சியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு பூசாரி ராஜா தினமும் பூஜை செய்து வருகிறார். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு காடையாம்பட்டி பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவில் மீது இடி தாக்கி சிலை சேதம் அடைந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. 

    இதே போல் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. இதனால் சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக செல்வதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டடம் அலை மோதுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை பாதையில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சி தோன்றியுள்ளது. 

    இந்த நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
    காடையாம்பட்டி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த பண்ணபட்டி ஊராட்சி காங்கியானூரில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வழங்காமல் குடிநீர் தட்டுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் வசதி அமைத்து தரும்படியும், நாள் ஒன்றுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக கூறபட்ட நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் அன்று முதல் இன்று வரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தின்னபட்டி-பண்ணபட்டி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் அறிந்த தீவட்டிபட்டி போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×