search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festival of Deepam"

    • கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை அமர வைத்து நேர்த்திக்கடன்.
    • மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க சாமி வீதிஉலா நடந்தது.

    அப்போது மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சின்ன அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 10 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னர் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் வலம் வந்தனர். இதைபோல் 7-ம் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

    தொடர்ந்து இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×