என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daren Sammy"

    • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவிக்கிறது.
    • அது கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் மனஉறுதியையும் பாதிக்கிறது.

    புதுடெல்லி:

    அகமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது நாளிலேயே இமாலய வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு கைகொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் இரு நாளில் பேட்டிங்குக்கும், 3-வது நாளில் இருந்து சுழலுக்கும் ஒத்துழைக்கும் என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடும் விதத்தை பார்க்கும்போது இந்த டெஸ்டிலும் தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். அந்த நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் பணம் கொழிக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதால், டெஸ்ட் கிரிக்கெட் நலிந்து போய் விட்டது.

    இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சேமி கூறுகையில், 'நாங்கள் இந்திய மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரை 1983-ம் ஆண்டில் கைப்பற்றினோம். அப்போது நான் பிறந்தேன். இப்போது அணியின் பயிற்சியாளராக இருப்பதால் என்னை தான் அனைவரும் விமர்சிப்பார்கள் என்பது தெரியும். ஆனால் இந்த நிலைமை 2 ஆண்டுக்கு முன்பு வந்ததில்லை.

    வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட மறுக்கும் கலாசாரம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. இன்னும் சொல்லப்போனால் இது புற்றுநோய் போன்றது. அடிப்படை கட்டமைப்பில் ஆழமாக ஊடுருவிவிட்டது. எனவே பிரச்சினை ஆடுகளத்தில் இல்லை. அணியின் கட்டமைப்பில் உள்ளது. இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட யார் ஆர்வமாக இருக்கிறார்களோ அத்தகைய வீரர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுகிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவிக்கிறது. அது கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் மனஉறுதியையும் பாதிக்கிறது. போதிய ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் அணியின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருக்கும்' என்றார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெற்று 31 ஆண்டுகள் ஆகிறது.
    • தற்போதைய எங்கள் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் உலகின் எந்த இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    கிங்ஸ்டன்:

    ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெற்று 31 ஆண்டுகள் ஆகிறது. தொடரை கைப்பற்றி 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படை இந்தியாவுக்கு வருகிறது. இதையொட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தற்போதைய எங்கள் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் உலகின் எந்த இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆடுகளத்தில் 6 முதல் 8 மீட்டர் அளவில் பந்தை பிட்ச் செய்து தொடுக்கும் ஷாட்பிட்ச் யுக்தி உலகில் எந்த இடத்திலும் கைகொடுக்கும். எங்களிடம் வேகப்பந்து வீச்சில் 4 பேர் உள்ளனர். அவர்கள் 4 பேரும் வெவ்வேறு விதமாக வீசக்கூடியவர்கள். அதில் ஷமார் ஜோசப்பை எடுத்துக் கொண்டால் பந்தை அதிக உயரத்துக்கு எழுப்பாமல் வலுக்கி செல்வது போல் வீசுவதில் கில்லாடி. ஜெய்டன் சீல்ஸ் இரு விதமாக ஸ்விங் செய்வார். அல்ஜாரி ஜோசப் தனது உயரத்தை சாதகமாக பயன்படுத்தி, பவுன்சரில் மிரட்டுவார். அதனால் அவர்கள் மீது குறிப்பாக கடந்த ஓராண்டாக அவர்கள் செயல்பட்டு வரும் விதத்தால் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் (இரு இன்னிங்சையும் சேர்த்து) வீழ்த்தக்கூடிய திறமை இருக்கிறது. அது தான் இந்திய மண்ணில் தேவை. இந்தியாவில் டெஸ்டில் ஆடும் போது 20 விக்கெட்டுகளை எடுக்க முடியாவிட்டால் உங்களுக்கு தான் பின்னடைவு ஏற்படும். ஆனால் எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் 20 விக்கெட்டுகள் எடுக்க முடியும். அது தான் எங்களது முதல் இலக்கு.

    கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அதை எங்களது வீரர்கள் உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய சூழலில் அவர்கள் என்ன செய்தார்களோ? அதையே நாங்களும் பின்பற்றி சாதிக்க முயற்சிப்போம்.

    தேஜ்நரின் சந்தர்பால், அலிக் அதானேஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் நன்றாக ஆடுவார்கள் என்பதால் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு டேரன் சமி கூறினார்.

    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
    • இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்பட மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

    மெல்போர்ன்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்கின்றன.

    அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வெல்லும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டேரன் ஷமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    கடந்த ஆண்டு முதல் நாங்கள் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறோம். அது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. சொந்த மண்ணில் இம்முறை டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்தக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் முதல் அணியாக நாங்கள் இருப்போம் என்று நம்புகிறேன்.

    எங்களது அணியில் உள்ள வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அளவில் விளையாடவில்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களது அணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இம்முறை டி20 உலக கோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம் என தெரிவித்தார்.

    ×