என் மலர்
விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர்களால் இந்திய அணியை மிரட்டுவோம்- வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சமி
- வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெற்று 31 ஆண்டுகள் ஆகிறது.
- தற்போதைய எங்கள் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் உலகின் எந்த இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
கிங்ஸ்டன்:
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெற்று 31 ஆண்டுகள் ஆகிறது. தொடரை கைப்பற்றி 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படை இந்தியாவுக்கு வருகிறது. இதையொட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போதைய எங்கள் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் உலகின் எந்த இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆடுகளத்தில் 6 முதல் 8 மீட்டர் அளவில் பந்தை பிட்ச் செய்து தொடுக்கும் ஷாட்பிட்ச் யுக்தி உலகில் எந்த இடத்திலும் கைகொடுக்கும். எங்களிடம் வேகப்பந்து வீச்சில் 4 பேர் உள்ளனர். அவர்கள் 4 பேரும் வெவ்வேறு விதமாக வீசக்கூடியவர்கள். அதில் ஷமார் ஜோசப்பை எடுத்துக் கொண்டால் பந்தை அதிக உயரத்துக்கு எழுப்பாமல் வலுக்கி செல்வது போல் வீசுவதில் கில்லாடி. ஜெய்டன் சீல்ஸ் இரு விதமாக ஸ்விங் செய்வார். அல்ஜாரி ஜோசப் தனது உயரத்தை சாதகமாக பயன்படுத்தி, பவுன்சரில் மிரட்டுவார். அதனால் அவர்கள் மீது குறிப்பாக கடந்த ஓராண்டாக அவர்கள் செயல்பட்டு வரும் விதத்தால் மிகுந்த நம்பிக்கை உள்ளது.
எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் (இரு இன்னிங்சையும் சேர்த்து) வீழ்த்தக்கூடிய திறமை இருக்கிறது. அது தான் இந்திய மண்ணில் தேவை. இந்தியாவில் டெஸ்டில் ஆடும் போது 20 விக்கெட்டுகளை எடுக்க முடியாவிட்டால் உங்களுக்கு தான் பின்னடைவு ஏற்படும். ஆனால் எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் 20 விக்கெட்டுகள் எடுக்க முடியும். அது தான் எங்களது முதல் இலக்கு.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அதை எங்களது வீரர்கள் உத்வேகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய சூழலில் அவர்கள் என்ன செய்தார்களோ? அதையே நாங்களும் பின்பற்றி சாதிக்க முயற்சிப்போம்.
தேஜ்நரின் சந்தர்பால், அலிக் அதானேஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் நன்றாக ஆடுவார்கள் என்பதால் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு டேரன் சமி கூறினார்.






