search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrasekhar Road Walk"

    • இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
    • தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

    விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.

    தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.

    இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×