search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru jail"

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார். #TTVDhinakaran #Sasikala
    பெங்களூரு:

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார்.

    தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்து பேசினர்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்தபிறகு நடைபெறும் சந்திப்பு இதுவாகும்.

    மேலும் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாள் விசாரணை நடத்திய பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யமாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்தார். ஆனால் ஒரு சிலர் அப்பீல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சசிகலாவிடம் தினகரனும், மற்றவர்களும் ஆலோசனை நடத்தி வருவதாக  தெரியவருகிறது.

    மேலும் சசிகலா மற்றும் தினகரனை தவிர மற்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கூறி இருந்தனர். ஆனால் இவர்கள் 2 பேரை சேர்த்தால்தான் நாங்களும் அ.தி.மு.க.வில் இணைவோம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.  #TTVDhinakaran #Sasikala
    பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி வகுப்பில் சேர்ந்துள்ளனர். #SasikalalearnKannada #SasikalaenrolBU
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயில விண்ணப்பித்துள்ளனர். இளவரசி சமீபத்தில் 15 நாள் பரோலில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    அவர் பரோலில் செல்வதற்கு முன்னர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விண்ணப்ப நடைமுறைகள் முடிவடைந்து, இருவரும்  தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி சான்றிதழ் வகுப்பில் இணைந்து விட்டதாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா தெரிவித்துள்ளார்.

    இவர்களை தவிர பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள 257 கைதிகளும் பல்வேறு வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    தொலைதூர கல்வி வழியாக பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு பாடங்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #SasikalalearnKannada #SasikalaenrolBU  
    ×