என் மலர்
நீங்கள் தேடியது "beity cyclone"
பொன்னேரி:
வங்கக்கடலில் உருவான ‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது. சென்னை அருகே புயல் நெருங்கி வந்த போது பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.
சென்னையில் கடந்த 2 நாட்களாக கடுங்குளிர் மற்றும் வானம் மேக மூட்டத்துடன் ரம்யமான சூழல் நிலவியது. பலத்த காற்றும் வீசியது. பழவேற்காடு, எண்ணூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று புயல் ஆந்திராவை நெருங்கிய பின்னரும் சென்னையில் கடலின் சீற்றம் நீடித்தது. ஆனால் காற்றின் வேகமும், குளிரும் குறைந்து இருந்தது. வெயில் வழக்கம் போல் சுட்டெரித்தது. இதனால் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்த 230 பேர் திருப்பாலைவனம் அருகே உள்ள பேரிடர் மீட்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் தங்களது கிராமத்துக்கு சென்றனர்.
கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு மற்றும் மீனவ கிராமங்களில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்றுமோதி சேதம் அடைந்தன.
தொடர்ந்து கடல் சீற்றம் நீடிப்பதால் இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வில்லை.
கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம் உள்பட கடற்கரையோர பகுதிகளில் காற்று பலமாக வீசுகிறது.
தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் அரிப்பு ஏற்படுவதை தடுக்க வைக்கப்பட்டிருந்த கற்களை அலைகள் இழுத்து சென்றன. 5 மீட்டர் உயரத்துக்கு அதிக சத்தத்துடன் அலைகள் வந்த வண்ணம் இருந்தது.
நேற்று இரவு வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிக அளவு காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் கடல்நீர் கடற்கரையோரம் உள்ள போலீஸ் பூத் வரையில் வந்தது. தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் சூறாவளி காற்று வீசி வருவதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மரக்காணம் கடற் பகுதியிலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படுகிறது. 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்து வந்து கரையில் மேடாக இருந்த மணல் பகுதியை அரித்து சென்றது.
காரைக்காலில் நேற்று மாலை வழக்கத்தைவிட பலத்த காற்றுடன் கடல் சீற்றம் அதிக அளவு காணப்பட்டது.
கடலோர மீனவ கிராமங்களில் 20 அடி முதல் 40 அடிவரையிலும் காரைக்கால் அரசலாற்றங்கரை யோரம் உள்ள கடற்கரை பகுதியில் 100 மீட்டர்தூரம் வரை கடல் நீர் உட்புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படுவதால் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
சென்னை:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகிறார்கள்.
பெய்ட்டி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் குறைந்த தூரத்தில் இருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.
ஆனால் ஆழ்கடலில் மீன்பிடித்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த 300 மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை அருகில் உள்ள ஆந்திரா பகுதிக்கு செல்லுமாறு வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே பத்திரமாக கரை சேர்ந்தனர்.
300 மீனவர்கள் அங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். காசிமேடு மீனவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுதா தெரிவித்தார். #KasimeduFishermen
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ‘பெய்ட்டி’ புயல் சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வரும் இந்தப் புயல் இன்று தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (17-ந்தேதி) மாலை ஆந்திரா கடற்கரையில் மசூலிப்பட்டினத்திற்கும், காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால், சென்னை மற்றும் வடதமிழகத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், அதிக பட்சம் 75 கி.மீ. வேகத்திலும் பலமான சூறைக்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். காற்றில் புழுதி பறந்ததால் நடந்து சென்ற மக்கள் அவதிப்பட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காலையில் லேசாக தூறியது.
இந்த நிலையில் வட தமிழகத்தின் கடலோர பகுதியில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யும் என்றும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்வதால் கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும், கடற்கரை பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் நாளை (17-ந்தேதி) கரையை கடந்த பின்பு வலு இழந்த புயலாகவும், 18-ந்தேதி காற்றழுத்த மண்டலமமாகவும் நிலைபெறும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.






