search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempted murder case"

    அ.தி.மு.க. மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இது குறித்த தகவல் கிடைத்ததும் வடவள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்பதால் வேறு பகுதியில் கூட்டம் நடத்தப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தங்கள் கார்களில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வடவள்ளியில் வந்த போது அங்கு திரண்டு இருந்த அ.தி.மு.கவினர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களின் வாகனங்களை மறித்து கற்களை வீசினார்கள்.

    மேலும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனை தொடர்ந்து உடைக்கப்பட்ட வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி மற்றும் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 58 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி ஆகியோரும் ஆவார்கள்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், வாகனங்களை சேதப்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைதான 58 பேரையும் போலீசார் கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 31-ந் தேதி வரை காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்.

    அப்போது டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், 58 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கான மனுவை தாக்கல் செய்யுங்கள் என மாஜிஸ்திரேட்டு கூறினார்.

    உடனே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு மாஜிஸ் திரேட்டு தள்ளி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கைதான 58 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த வடவள்ளி லிங்கனூர் மணி, தாமோதரன், ஜெரால்டு, மகேஷ் குமார் ஆகியோர் தாங்கள் வடவள்ளி குருசாமி நகரில் நின்று கொண்டு இருந்த போது டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தங்களை கழுத்தை பிடித்து நெரித்து கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக வடவள்ளி போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, பிரபு குமார், கருப்பசாமி, கணேஷ் குமார், குணசேகரன் ஆகிய 5 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    காயம் அடைந்த அ.தி.மு.க. வினர் 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.#tamilnews
    ×