என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சென்னை, மேற்கு முகப்பேர் அடுத்து பெரிய நொளம்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைகுந்தப் பெருமாள் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்து வந்தவர்கள் சம்புவராய வம்சத்தினர். குறுநில மன்னர்களான இவ்வம்சத்தினர் காஞ்சீபுரம் மட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர் உள்பட தாம் ஆட்சி செய்துவந்த பகுதிகள் அனைத்திலும் ஈஸ்வரம், விண்ணகரம் நிர்மாணிப்பதிலும், சமயப்பணி புரிவதிலும் தலைசிறந்து விளங்கினர்.

    இவர்களின் வம்சத்தில் வந்த சம்புவராயன் என்ற மன்னன், ஷீர நதிக்கரையில் மார்க்கண்டேய முனிவர் தவம்புரிந்த தலத்தில், மகப்பேறு அருளுவதும் எம பயம் போக்குவதுமான முகப்பேர் மார்க்கண்டேஸ்வரர் கோவில், சத் சந்தான பாக்கியம் அருளுவதும், குருவருள் தருவதுமான சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் போன்ற ஆலயங்கள் அமைத்து பெரும்பேறு பெற்றான். இவ்வரசனின் மகன் மல்லிநாத சம்புவராயன் தம் தந்தையைப் பின்பற்றி, ரிஷிகள் தவம்புரிந்த தலங்களில் ஆலயம் அமைத்தான். அவற்றுள் ஒன்று சென்னை, மேற்கு முகப்பேர் அடுத்து பெரிய நொளம்பூர் பகுதியிலுள்ள ஸ்ரீதேவி- பூதேவி சமேத வைகுந்தப் பெருமாள் ஆலயம்.

    ஒருசமயம் அத்ரி மகரிஷியும், மார்க்கண்டேய முனிவரும், வைகுண்டவாசன் திருக்கோலத்தை தேவியருடன் பூலோகத்தில் தரிசிக்க விரும்பினர். அவர்களின் விருப்பத்திற்கு இசைந்த பெருமாள், மின்மினிப் பூச்சிகள் வாழும் இடத்தில் தம்மைக் குறித்து தவம்புரியும்படி கூறினார். வைகுண்டபதியின் அனுக்கிரகத்தைத் தொடர்ந்து, மின்மினிப் பூச்சிகள் சுற்றித்திரியும் இடத்தைத் தேடிவந்தனர் இரண்டு ரிஷிகளும்.

    உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளின் பிறப்புக்குப் பின்னும் தெய்வீகக் காரணம் உண்டு. விளக்கு என்றிருந்தால் அதில் ஒளியும் வெப்பமும் சேர்ந்தே இருக்கும். ஆனால் ஒரு சிறிது வெப்பமும் இன்றி, ஒளியை மின்மினிப் பூச்சிகள் அளிக்கின்றன என்றால், அதன் தெய்வீகத் தன்மை எத்தகைய சிறப்பு வாய்ந்தது.

    மின்மினிப் பூச்சிகள் பூமிக்கு உரிய சிவப்பு (மண்) வண்ணத்தையும், புவர் லோகத்துக்கு உரிய பச்சை வண்ணத்தையும், சுவர் லோகத்துக்கு உரிய மஞ்சள் வண்ணத்தையும் தங்கள் ஒளிப்பிரகாசத்தால் அளிக்கின்றன. எனவே மின்மினிப் பூச்சிகளை ‘திரிலோக சஞ்சாரிகள்’ என முனிவர்கள் அழைக்கின்றனர். சித்தர்கள் ‘சுடர்மணிகள்’ என அழைக்கின்றனர்.

    மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் மகான்களின் சஞ்சாரமும் அதிகம் இருக்கும். பொதுவாக, ஒருவர் எந்த அளவு இறைவனை நோக்கித் தவம் இயற்றுகிறாரோ, அந்த அளவு அவருடைய உடல் உறுப்புகள் மென்மையாக இருக்கும். மகான்களின் தூல உடம்பைத் தொட்டுப் பார்த்தால் இதனை உணரலாம். உடல் எந்தளவு மென்மையாக உள்ளதோ, அந்த அளவு அது வலிமையானதாக இருக்கும். பெண்கள், ஆண்களைவிட ஏழு மடங்கு சக்தியுடையவர்கள். எனவே மென்மையான உடல்வாகு அவர்களுக்கு அமைந்துள்ளது.

    மென்மையான உடல் அமைப்பைக் கொண்ட அத்ரி, மார்க்கண்டேய மகரிஷிகள், மின்மினிப் பூச்சிகள் சுற்றித்திரிந்த நுளம்பி ஆற்றங்கரையில் தவம் இயற்றத் தொடங்கினர். ‘நுளம்பி’ என்பதற்கு மின் மினிப் பூச்சி என்று பொருள். மின்மினிப்பூச்சிகள் நிறைய காணப்பட்ட காரணத்தால் தான், அந்த ஆற்றிற்கு ‘நுளம்பி ஆறு’ என்ற பெயர் வந்தது. நுளம்பி ஆறு என்பது இன்றைய கூவம் நதியே என்பது குறிப்பிடத்தக்கது. நுளம்பி ஆற்றின் கரையில் அமைந்த பகுதியே ‘நொளம்பூர்’ என்றானது.

    நுளம்பி நதிக்கரையில் அத்ரி மகரிஷியும் மார்க்கண்டேய முனிவரும், எவ்வித இடையூறுமின்றி தவத்தில் ஆழ்ந்தனர். விரைவிலேயே அவர்களின் நோக்கம் நிறைவேறத் தொடங்கியது. தவத்திற்கு மகிழ்ந்து காட்சியளித்த நாராயணனிடம், ‘வையகத்தைக் காத்தருளும் வைகுண்டவாசா! இந்த இடத்திலேயே பக்தர்களைக் காத்தருளும் பரந்தாமனாய் நின்றருள வேண்டும்’ என்று வேண்டினர்.

    அதனை ஏற்றுக்கொண்ட வைகுண்டபதி, ஸ்ரீதேவி- பூதேவியருடன் வைகுண்டவாசனாக எழுந்தருளினார்.

    ரிஷிகளின் தவபூமியாக விளங்கிய இந்த இடத்தில்தான் பெருமாளுக்கு ஆலயம் அமைத்தான் மல்லிநாத சம்புவ ராயன். அவன், தம் நாட்டு மீது படையெடுத்து வந்த மன்னர்களை வெல்வதற்காக, இத்தலம் வந்து வைகுந்தப் பெருமாளிடம் வேண்டினான். பெருமாள் அருளால் எதிரிகளை சுலபமாக வென்று மக்களைக் காத்தான். அதன்பிறகே இங்கு ஆலயம் அமைத்ததாக வரலாறு சொல்கிறது.

    தல புராண ரீதியாக பல யுகங்களைக் கடந்தது இந்த திருத்தலம். பூலோக வைகுண்டமாக விளங்கும் இத்திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுந்தப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்மழை பொழிகின்றார். ஆறு அடி உயர மரகதக்கல் திருமேனியில் வரதஹஸ்த நாயகனாகப் பெருமாளும், ஐந்தடி உயரத்தில் தாயார் இருவரும் கருணையே வடிவமாகவும் தரிசனம் தருகின்றனர்.

    கருவறையின் இருபுறமும் அத்ரி மகரிஷியும், மார்க்கண்டேய முனிவரும் பெருமாளை கை கூப்பி வணங்கிய நிலையில் இருப்பது சிறப்புக்குரியது.

    இந்த ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், ஹயக்ரீவர் கிருஷ்ணர் சன்னிதிகளும் உள்ளன. பிறப்பால் ஊமையான ஒரு குழந்தை, இங்குள்ள ஹயக்ரீவரை வழிபட்டுப் பேசும் திறன் பெற்றதாக செவிவழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. வெள்ளி, சனிக்கிழமைகளிலும், திருவோண நட்சத்திரத்திலும், பவுர்ணமி திதியன்றும் இங்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. நோய் தீரவும், எதிரி தொல்லை நீங்கவும், மன அமைதி பெறவும் இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    வழிபாட்டு பலன்

    இத்தலத்தில் திருவோண நட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. அப்போது அஷ்டகர உத்தரணியில் தரப்படும் தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய் தீரும். நீண்டகால நோய்கள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம். தொடர்ந்து ஐந்து திருவோணத்தன்று பூஜையில் கலந்துகொண்டு, தீர்த்தம் அருந்துவது சிறப்பான பலன்களைத் தரும். ஒன்பது திருவோண நட்சத்திர தினங்களில் பரிகாரத்தீபம் ஏற்றி வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமணம் கைகூடும்.

    இங்குள்ள ஆஞ்சநேயருக்குப் பரிகாரத் தேங்காய் கட்டி வழிபட்டால், வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகின்றனவாம்.

    அமைவிடம்

    சென்னை மேற்கு முகப்பேர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெரிய நொளம்பூர் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து முகப்பேருக்கு அடிக்கடி பேருந்து வசதியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி, வாவின் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தும் மேற்கு முகப்பேர் பேருந்து நிலையம் வரலாம். இங்கிருந்து கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. 
    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது திருக்காட்கரையப்பன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர்.

    தல வரலாறு :

    மலையாள தேசத்து அரசன் மகாபலி அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும், நல்லாட்சி செய்து தன் நாட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற்றிருந்தான். அவனுக்கு மூவுலகையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் திடீரென்று ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.

    மகாபலி நடத்தும் வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். முதலில், பிரம்மாவுடன் ஆலோசனை செய்த அவன், பிரம்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டான். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாகச் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.

    மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெற்றுச் செல்வதற்காக நின்றிருந்தவர்களின் வரிசையில் போய் நின்று கொண்டார். அவரது முறை வருவதற்கு முன்பாகவே தானம் முடிவடைந்து விட்டது.

    அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.

    வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

    ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைப் பெற்றுத் தானமளிப்பதாகச் சொன்னான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்து வெளியேறினார்.

    மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.

    அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.

    அப்போது மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.

    மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம் என்று சிலர் இத்தலத்தின் வரலாறைத் தெரிவிக்கின்றனர்.

    இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்று வதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப் படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.

    இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன.

    வழிபாடுகள்:

    இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள் :

    இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.

    108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேத்திரம் பழங்களையே படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது.

    முப்பெருங்கடவுள் மரம் :

    திருக்காட்கரையப்பன் கோவில் பிரகாரச் சுற்றில், பெரிய அளவிலான அரச மரம் ஒன்று உள்ளது. இதனை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கின்றனர். இம்மரத்தின் வேர்ப்பகுதி பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சிப்பகுதி சிவபெருமான் என்று நினைத்து, முப்பெருங்கடவுளாக வணங்கி வருகின்றனர். இம்மரத்தடியில் மேடை கட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளிலும், இந்த மரத்தடியில் பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாகர் இனத்துப் பழங்குடியினர் இங்கு ‘புல்லுவன்’ பாட்டைப் பாடிச் சிறப்பிக்கின்றனர்.

    பிரம்மராட்சசன் சன்னிதி :

    ஒரு விவசாயி நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழைப் பழங்களில் சில தங்கமாக இருந்தன. அந்தத் தங்க வாழைப்பழங்களைக் காட்கரையப்பன் கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். ஒரு நாள், கோவில் அர்ச்சகர், தங்க வாழைப்பழங்களைச் சன்னிதியில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தங்க வாழைப் பழங்களைக் காணவில்லை.

    இந்தச் செய்தி அந்நாட்டு அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன், சில அரண்மனைக் காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள், கோவிலில் தங்கியிருந்த அப்பாவி யோகி ஒருவரைச் சந்தேகப்பட்டுக் கைது செய்தனர். அரசன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் யோகியை துன் புறுத்தினர்.

    இதற்கிடையில் தங்க வாழைப்பழங்கள் மூலவரின் கருவறையில் பத்திரமாக இருப்பதை அறிந்து, யோகியை மன்னன் விடுதலை செய்தான். ஆனால் செய்யாத தவறுக்காக தண்டனை வழங்கியதை எண்ணி துடித்த யோகி, தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர், பிரம்மராட்சசனாக மாறி, அரசனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுத்தார்.

    மன்னன் தன் தவறை நினைத்து வருந்தியதுடன் திருக்காட்கரையப்பனை வணங்கி, யோகிக்கு கோவில் வளாகத்தில் ஒரு சன்னிதியை எழுப்பினான். அங்கு அவருக்கு தினசரி பூஜை செய்து பிரம்மராட்சசனாக இருந்த யோகியின் கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதி ‘யோகி சன்னிதி’ என்றும், ‘பிரம்மராட்சசன் சன்னிதி’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன.

    இறைவனால் தோன்றிய வாழை :

    விவசாயி ஒருவர் தன் நிலத்தில் வாழை சரியாக விளையாததால், திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வந்து, மகாவிஷ்ணுவின் கடைக்கண் தன் நிலத்தில் பட வேண்டுமென்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் தன் பக்தன் நிலத்தைத் தன் நேத்திரத்தினால் (விழியினால்) பார்க்க, புதியதொரு வாழை அங்கு தோன்றியதுடன் விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு ‘நேந்திரம் வாழை மரம்’ என்ற பெயரும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.
    திருச்சியில் காவிரிக் கரையோரம் பரிசல் துறையில் அமைந்துள்ளது, அய்யாளம்மன் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சியில் காவிரிக் கரையோரம் பரிசல் துறையில் அமைந்துள்ளது, அய்யாளம்மன் ஆலயம். கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவில் முன்பு இரண்டு குதிரை சிலைகள் கம்பீரமாக உள்ளன. ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் கருப்பண்ணசாமி அருள்பாலிக்கிறார். சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமர பொந்தில் சூல உருவில் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாளும், தெற்கில் சப்த கன்னியர் திருமேனிகளும் உள்ளன.

    கருவறையில் இறைவி அய்யாளம்மன் கருணை ததும்பும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

    அய்யாளம்மன் இங்கு வந்த கதை என்ன ?

    கேரள மாநிலம் ஒரு ஆலயத்தில் ஏழு அம்மன்களை பக்தியோடு முறையாக ஆராதனை செய்து வந்தார் ஒரு பூசாரி. அவருக்கு தேவையான ஆலய பராமரிப்பு பணிகளை அவரது மனைவி கவனித்து வந்தார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் வருத்தம் அடைந்த அவர்கள், ஒருநாள் அம்மன் முன் அமர்ந்து தங்களது குறையைக் கூறி வேண்டினர்.

    அவர்களின் வேண்டுதலுக்கு மனம் இரங்கிய அம்பாள், அந்த தம்பதியரின் முன் தோன்றி, ஒரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்து, இருவரையும் உண்ணும்படி கூறி மறைந்தாள். இரண்டு பேரும் அந்தப் பழத்தின் சாற்றை, அம்மன் சொன்னபடியே பருகினர். அம்மன் அருள்படி வெகு விரைவிலேயே அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டானது.

    அவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை நெடுநாள் நிலைக்கவில்லை.

    குழந்தை வளர்ந்து சிறுவன் ஆனான். பல நேரங்களில் தந்தையுடன் அவனும் ஆலயம் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த சிறுவன் தந்தையுடன் ஆலயம் சென்றான். இரவு அர்த்த சாம பூஜையை முடித்த பூசாரி, கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார். சிறுவன் கோவிலின் ஒருபுறம் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. வீட்டிற்குச் சென்றதும், மனைவி பிள்ளையைக் காணாது பதறினாள்.

    அப்போது தான் ஆலயத்திலேயே மகனை விட்டு வந்ததை பூசாரி உணர்ந்தார். அர்த்தசாம பூஜைக்குப் பின் ஆலயக் கதவை திறக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டு. அதனால் கதவைத் திறந்து மகனை அழைத்துவர பூசாரி அஞ்சினார். அவரது மனைவியோ, ‘இப்போதே மகனை அழைத்து வாருங்கள்’ என்று கூச்சலிட்டாள்.

    இதனால் செய்வதறியாது திகைத்த பூசாரி, ஆலயத்திற்குச் சென்று, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அங்கே உறங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

    ‘அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு எதற்காக நடையைத் திறந்தாய்’ என்றது அந்தக் குரல்.

    பூசாரியோ, ‘தாயே.. மகனை இங்கேயே வைத்து பூட்டிச் சென்று விட்டேன். அவனை அழைத்துச் செல்லவே மீண்டும் நடையை திறக்க வேண்டியதாயிற்று’ என்றார்.

    ‘பிள்ளை பாசத்தால், இதுவரை கடைப்பிடித்து வந்த நடைமுறையை மாற்றிவிட்டாய். அதற்கு உன்னுடைய பிள்ளை பாசம் தான் காரணம். எனவே அந்தப் பிள்ளை உனக்கு இனி கிடையாது’ என்று கூறியது அந்த அசரீரி.

    மறுநொடியே சிறுவன் அங்கிருந்து மறைந்து போனான்.

    மகனை இழந்த பூசாரிக்கு, அம்மனின் மீது கோபம் உண்டானது. பத்து நாட்கள் கோவிலில் பூஜை எதுவும் நடத்தவில்லை. அதற்கிடையில் ஏழு மரப்பெட்டிகளை தயார் செய்து, 11-ம் நாள் கோவில் நடையைத் திறந்து, கருவறையில் இருந்த ஏழு அம்மன் சிலையையும் ஒவ்வொரு பெட்டியில் வைத்து எடுத்து வந்தார். பின் அவற்றை ஒவ்வொன்றாக காவிரி ஆற்றின் மணலில் குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

    சில நிமிடங்களிலேயே அங்கே கன மழை பெய்யத் தொடங்கியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நீரோட்டத்தின் அசுரப் பாய்ச்சலில் மண் அரிப்பு ஏற்பட்டு, புதைக்கப்பட்டிருந்த பெட்டிகள் வெளிவந்தன. அவை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டன. மிதந்து வந்த பெட்டிகள் ஸ்ரீரங்கம் அருகே கரை ஒதுங்கின. ஒரு பெட்டி மட்டும் காவிரியின் தென்புறம் உள்ள மேலச் சிந்தாமணி என்ற இடத்தில் ஒதுங்கியது.

    அன்று இரவு அந்த ஊரில் இருந்த ஒருவருக்கு அம்மனின் அருள் வந்தது. அவர் ‘நான் காவிரிக் கரையில் ஒதுங்கியிருக்கிறேன். நான் வைஷ்ணவியின் அம்சம். பக்தர்களின் ஐயங்களை நான் தீர்த்து வைப்பேன். எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். என்னை ‘அய்யாளம்மன்’ என்று அழையுங்கள்’ என்று கூறினார்.

    அருள்வாக்குப்படி ஊர் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, பெட்டியை எடுத்து வந்து கரையோரம் பரிசல் துறையில் அம்மனின் சிலையை பிரதிஷ்டை செய்து, அங்கேயே ஒரு ஆலயத்தை எழுப்பினர். அந்த ஆலயமே அய்யாளம்மன் ஆலயம் ஆகும்.

    ஸ்ரீரங்கத்தின் கரையிலும், அருகாமையிலும் ஒதுங்கிய மற்ற ஆறு பெட்டிகளும், அந்தந்த ஊர் மக்களால் கரையேற்றப்பட்டு தனித்தனி ஆலயங்களாக கட்டப்பட்டன. இந்த ஆலயங்கள் திருவரங்கத்து அம்மன், செல்லாயி அம்மன், காஞ்சாயி அம்மன், மாணிக்க நாச்சியார், மண்ணாயி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

    மேலச் சிந்தாமணியில் உள்ள அய்யாளம்மன் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஆடி 18-ல் அன்னைக்கு வளையல் அலங்காரம், சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி திருவிழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை விழாவின் முதல் 8 நாட்கள் பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மறுநாள் அம்மன் ஊர்வலம் புறப்படும். 10-ம் நாள் தேர் திருவிழா தொடங்கி மூன்று நாட்கள் கோலாகலமாக விழா அரங்கேறும். இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும்.

    இது தவிர 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். 9 நாட்களும் இத்தல அன்னையை, விதவிதமாக அலங்கரிப்பார்கள். இதை காணவே ஏராளமான மக்கள் ஆலயம் வருவார்கள். இந்த 9 நாட்களும் அன்னைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மேலும் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    குழந்தை பேறு வேண்டுவோர் அன்னைக்கு எலுமிச்சை பழ மாலையும், திருமண வரம் வேண்டுவோர் அன்னைக்கு புடவை சாத்தியும் வழிபாடு செய்தால், வேண்டுதல் விரைவில் நிைறவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தன்னை ஆராதிக்கும் பக்தர்கள் மனதில் எழும் பயத்தையும், குழப்பத்தையும் நீக்கி அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாக அமைய அய்யாளம்மன் அருள்புரிவது நிஜமே.

    அமைவிடம் :

    திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் காவிரி கரையோரம் உள்ளது இந்த ஆலயம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. ஆட்டோ வசதி உண்டு. 
    நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோவில், ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயம் என்ற பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது ஊட்டி மாரியம்மன் திருக்கோவில்.
    நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோவில், ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயம், உதக மண்டலத்தின் பழம்பெரும் திருக்கோவில், தேர்த் திருவிழாவில் வெள்ளை நிறப் புடவை அணியும் அம்மன், 36 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும் அபூர்வ ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி மாரியம்மன் திருக்கோவில்.

    தலவரலாறு :

    இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளின் வடிவங்களாக மாரியம்மன், காளியம்மன், காட்டேரி ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்த நீலகிரிக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூர் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கவும், பழங்குடியின மக்களிடம் கிடைக்கும் அரிய வகைப் பொருட்களை வாங்கவும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக வாணிபம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து சந்தைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவருமே ஒளிவீசும் கண்களுடன், தெய்வீக மனம் கமழ, சாந்த சொரூபிகளாகக் காட்சி தந்தனர்.

    அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்த மக்களிடம், ‘நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்குமா?’ என்று வினவினர்.

    அவர்களைக் கண்டதும் அனைவரின் உள்ளத்திலும் இனம்புரியாத பரவசம் ஏற்பட்டது. வந்திருப்பவர்கள் சாதாரணப் பெண்களல்ல, தெய்வப்பிறவி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றியது.

    உடனே அவர்கள், அருகில் இருந்த மரத்தைக் காட்டி, அதனடியில் தங்கிக்கொள்ள அனுமதித்தனர். அங்கு சென்ற இரு பெண்களும் ஒரு மின்னல் கீற்றாகத் தோன்றி, மரத்தின் அடியில் மறைந்தனர். அந்த இடத்தை மையமாகக் கொண்டு மாரியம்மன், காளியம்மன் திருவுருவங்களுடன் திருக்கோவிலை எழுப்பி வழிபடத் தொடங்கினர். இதன்பின், காலங்காலமாக செவ்வாய்க்கிழமைகளில் சந்தைகள் நடைபெறுகிறது. வந்து செல்லும் மக்களும் அம்மன்களை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    திருக்கோவிலின் நடுநாயகமாக விளங்குவது மாரியம்மன், காளியம்மன் எனும் சகோதரிகள். ஒரே கருவறையில் இரண்டு அம்மன்கள் குடிகொண்டுள்ளது, அரிதான நிகழ்வாகும். எதிரில் நந்தியம்பெருமான் அம்மன்களைத் தரிசித்தவாறு அமர்ந்துள்ளார். கருவறை முன்புறம் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர்.

    கருவறையில் வீற்றிக்கும், மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களின் உருவங்களும், ஒரே வடிவிலான உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பிற்காலத்தில் இங்கு குடியேறியவர்கள் ஆகியோருக்கு இந்த இரண்டு அம்மன்களுமே காவல்தெய்வங்களாக விளங்குகின்றனர்.

    காட்டேரி அம்மன் :


    ஆலயத்தின் மூன்றாவது சக்தியாக, காட்டேரி அம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆலயத்தின் வலதுபுறம் மூலையில் காட்டேரி சன்னிதி தனியே அமைந்துள்ளது. இந்த அன்னை தீவினைகளை அகற்றும் அம்மனாக இருந்து பக்தர்களுக்கு அருள்கிறார். அன்னையின் பெயர் ‘காட்டேரி’ என்றாலும், அழகு ததும்பும் எழிலான கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரியதாகும். இந்த அம்மனிடம் குழந்தைப்பேறு வேண்டுவோர், அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன், ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். மேலும் அம்மனுக்கு கோழிக்குஞ்சும், கருப்பு நிறப் புடவையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த அன்னையிடம் வேண்டினால், தீராத நோய்கள் கூட தீர்ந்து போவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.



    ஆலய அமைப்பு :

    இந்த ஆலம் நீண்டு உயர்ந்த ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், விநாயகர், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், தியாகராஜர், வடிவாம்பிகை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சப்த கன்னியர், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள் ஆகிய திருமேனிகள் ஒருங்கே அமைந்திருப்பதை கண்டு தரிசிக்கலாம்.

    இந்த தெய்வங்களுக்கெல்லாம் பிரதானமாக, வேண்டிய வரங்களைத் தரும் அன்னையர்களாக கருவறையில் மாரியம்மன், காளியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் நவராத்திரியின் பத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இது தவிர, ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவானது, சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது தொடர்ச்சியாக 36 நாட்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. விழாவின் போது துர்க்கையாக, காமாட்சியாக, பார்வதியாக, மீனாட்சியாக, ராஜராஜேஸ்வரியாக, புவனேஸ்வரியாக என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் அம்மன் வீதி உலா வருவதைக் காண கண்கோடி வேண்டும்.

    அன்னையர்கள் இந்தப் பகுதியில் அடைக்கலமானதைக் குறிக்கும் விதமாக, சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையின் ேதரோட்டம் நடைபெறுகிறது. அப்போது அன்னை வெள்ளை நிறப் புடவை அணிந்து, அலங்காரம் செய்யப்பட்டு உலா வருகிறார். வீதியில் உலா வரும்போது, தேரின் மீது பக்தர்கள் உப்பை வீசி வழிபாடு செய்கின்றனர். உப்பைப் போல தங்களின் குறைகளும், துன்பங்களும் கரைந்து போக வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள்.

    ஒற்றைக் கல்லில் உருவான பகுதி :

    நீலகிரியின் பழைய பெயர் ‘ஒற்றைக்கல் மந்து’ என்பதாகும். ‘மந்து’ என்பது ‘மலை’யைக் குறிக்கும் சொல்லாகும். ஒற்றைக் கல்லில் உருவானது உதகமண்டலமாகும். தமிழ்நாட்டின் அங்கமாகத் திகழும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகள் பழங்காலத்தில் ‘சீத வளநாடு’ என வழங்கப்பட்டது. ‘குளிர் பிரதேசம்’ என்பது இதன் பொருளாகும். இந்த சீத வளநாட்டிற்கு இரண்டு மலைகள் பிரதானமாக அமைந்துள்ளன. ஒன்று கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி எனும் சிவன் மலை, மற்றொன்று நீலகிரி எனும் சக்தி மலை ஆகும். கந்தபுராணத்திலும் இக்குறிப்பு காணப்படுகிறது.

    சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களுடன் போரிட நீலகிரி வழியே சென்றதை, சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் எடுத்துரைக்கிறது.

    சக்தி மலை சித்தர்களின் மலையாக விளங்கியதையும் அறிய முடிகிறது. காந்தள் பகுதியில் வசித்த ஓம்பிரகாஷ் சுவாமிகள், கம்பளிச்சித்தர் உள்ளிட்டோர் இம்மலையில் தவம் செய்திருக்கிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான, ஊட்டி எனப்படும் உதகமண்டலத்தின் மையப் பகுதியான லோயர் பஜார், அப்பர் பஜார் பகுதியில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சந்தைக் கடைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால், ‘சந்தைக்கடை மாரியம்மன் கோவில்’ என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
    இலங்கை நாட்டின் பழம்பெரும் பஞ்சேஸ்வர ஆலயங்களில் முதன்மையானது, ராமபிரான், வியாசர் வழிபட்ட திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, இலங்கை நாட்டில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் திருக்கோவில்.
    இலங்கை நாட்டின் பழம்பெரும் பஞ்சேஸ்வர ஆலயங்களில் முதன்மையானது, ராமபிரான், வியாசர் வழிபட்ட திருக்கோவில், ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய புண்ணியபூமி, மனுநீதி சோழன் வழிவந்த குளக்கோட்டு மன்னன் புனரமைத்த ஆலயம், தீமிதி விழா நடைபெறும் சிவாலயம், 64 சக்திப் பீடங்களில் ஒன்றாகத் திகழும் திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, இலங்கை நாட்டில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் திருக்கோவில்.

    இந்தக் கோவிலைச் சுற்றி ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளன. தென்கிழக்கில் வேட்டைத் திருமடம் எனும் விநாயகர் ஆலயம், வடமேற்கில் ஐயனார் கோவில், வடக்கே காளி கோவில், தெற்கே களத்துப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளன.

    முன்னேஸ்வரர் ஆலயமானது 5 நிலை ராஜகோபுரத்துடன் விண்ணை நோக்கி கம்பீரமாய் நிற்கிறது. ஆலயத்தின் எதிரே தல விருட்சத்தின் அடியில் நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என ஒருங்கே அமைந்துள்ளன. கருங்கற்களால் ஆன இவை, விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

    கருவறை விமானம் 46 அடி உயரம் கொண்டது. மூன்று தளங்களைக் கொண்டு கண்டி மன்னனால் எழுப்பப்பட்டுள்ளது. புறக்கோட்டங்களில் நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மன், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இது தவிர, விநாயகர், சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, நவக்கிரகம், பைரவர், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி, நரசிம்மர், சரபேஸ்வரர், அனந்த சயனர் திருமேனிகளும் காணப்படுகின்றன.

    ஆலயத்தின் நடுநாயகமாக முன்னேஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரில் பெரிய வடிவில் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் இடதுபுறம் அன்னை வடிவாம்பிகையின் எழில் கொஞ்சும் உலாத் திருமேனி அமைந்துள்ளது. கருவறை வெளியே தென்திசை நோக்கி, அன்னை வடிவாம்பிகை எளிய வடிவில் பெயருக்கு ஏற்றாற்போல் வடிவழகியாய் அருள் வழங்குகின்றாள்.

    வடிவாம்பிகையின் உலோகத் திருமேனி பழமையானதாகவும், கலைநயம் கொண்டதாகவும் விளங்குகிறது. இதன் எதிரே ஸ்ரீசக்கர எந்திரம் அமைந்துள்ளது. இது சிவலிங்கத்திற்கு இடதுபுறம் அமைந்துள்ளது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.



    மீனவர் ஒருவர் மீன் பிடிக்க சென்றபோது, அங்கே சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மீனவனைக் கண்டதும் அவர்கள் மாயமாக மறைந்தனர். மறுநாள் மீனவர் கையில் சிறுமி சிக்கினாள். ஆனால் மறுநொடியே அவர் தங்கச் சிலையாகிப் போனாள். மீனவன் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தான்.

    இதையறிந்த மன்னன், அந்த சிலையைக் கைப்பற்றி, அதேபோல பல சிலைகளைச் செய்து, மீனவனை அழைத்து ‘இதில் உன்னுடைய சிலை எது?’ என்று கேட்டான்.

    ஒரு நாள் அவகாசம் கேட்டான் மீனவன். அன்று அவனது கனவில் அன்னை வடிவாம்பாள் தோன்றி, ‘கால் அசையும் சிலையே நான்’ எனக் கூறி மறைந்தாள். மறுநாள் சரியாக அடையாளம் காட்டினான், மீனவன். அந்தச் சிலையே இத்தலத்தின் கருவறையில் இருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது.

    இந்தக் கோவிலில் உற்சவத் திருமேனிகளாக விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகசுவாமி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், மகாமாரி, பிரதோஷ மூர்த்தி, பிரமாண்ட பிட்சாடனர், சண்டேஸ்வர நாயனார், அறுபத்துமூவர் போன்றவை உள்ளன. இவ்வாலயத்தின் தலமரம் அரச மரம் ஆகும். கோவிலின் வடக்கே ஓடும் மாயவனாறு தலத் தீர்த்தமாக அமைந்துள்ளது.

    ஆவணி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, 27 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். விஷ்ணு திருவிழா, தீமிதி விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பவுர்ணமியை முன்னிட்டு பர்வயந்திர பூஜையும் நடக்கிறது. இது தவிர, ஏனைய சிவாலய வழிபாடுகள் சிறப்புடன் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த ஆலயம் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    இலங்கை நாட்டில் உள்ள வட மேல் மாகாணத்தில், புத்தளம் மாவட்டத்தில், முன்னேஸ்வரம் திருத்தலம் அமைந்துள்ளது. கொழும்பு நகரில் இருந்து வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும், சிலாபம் நகரில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தக் கோவில் இருக்கிறது.
    முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப்பெருமான். இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    அர்த்தஜாம பூஜை :

    மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படும். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இத்தல இறைவனை, தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது இறைவனுக்கு ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

    பாம்பாட்டி சித்தர் :

    மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னிதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடியும் வைத்து இவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் சிவலிங்கம், நாகர் திருமேனி கள் உள்ளன. முருகப்ெபருமானுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னிதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

    பாம்பு முருகன்:

    பாம்பாட்டி சித்தர் சன்னிதியில் உள்ள பாறையில் நாக வடிவம் ஒன்று காணப்படுகிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இந்த நாகத்தை முருகப்பெருமானாகவே பாவித்து பக்தர்கள் அனைவரும் வழிபாடு செய்கிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளன. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன் தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும்.

    பஞ்ச விருட்ச விநாயகர் :

    பொதுவாக அரச மரத்தின் அடியில் தான் விநாயகப்பெருமான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்கும் மரத்தின் அடியில் விநாயகப் பெருமான் இருந்து அருள் பாலிக்கிறார். ஐந்து மரங்கள் இணைந்த ஒரே மரத்தின் அடியில் இருப்பதால் இவரை, ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். இவருக்கு அருகில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்தபடி, கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

    மருதாச்சல மூர்த்தி :

    மருத மரங்கள் நிறைந்ததும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருள்பவர் என்பதால், இத்தல முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு. மருத மரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருத மரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமியின் அபிஷே கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

    சோமாஸ்கந்த தலம் :

    சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, ‘சோமாஸ்கந்த அமைப்பு’ என்பார்கள். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில் தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் (சிவன்) சன்னிதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை (அம்பாள்) சன்னிதியும் உள்ளன.

    தம்பிக்கு உகந்த விநாயகர் :

    மருதமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி இருக்கிறது. இங்கு விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு, உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னிதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது சிறப்பம்சம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

    குதிரையில் வந்த முருகன் :

    முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோவில்களில் அவரை விழாக் காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோவிலில் திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோவிலில் சேர்க்கச் செய்தார். அதோடு திருடர்களை பாறையாகவும் மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை ‘குதிரைக்குளம்பு கல்’ என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

    ஆதி முருகன் :

    புராதனமான சிவன் கோவில்களில் சிவன், சுயம்பு லிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்பு வடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் ஒரு பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதி மூர்த்தி ஆவார். இவரது சன்னிதி ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் பக்தர்கள் இவருக்கு அதிகளவில் பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 
    ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள்.
    சோழ பெருவள நாட்டின் காவிரியின் வடகரை திருத்தலங்களில் 12-வது தலம் கீழை திருக்காட்டுப்பள்ளி. இத்தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இறைவனின் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். இறைவியின் இன்னொரு பெயர் அகிலாண்டநாயகி.

    ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவ லிங்கங்களை அடுத்து முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார்.

    வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரம். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் இருக்கின்றன. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்தகணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.

    ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத்தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார்.

    இது ஆரண்ய முனிவர் வழிபட்ட அருள்பெற்ற தலம். இவர் மகா காளம்மையை தம் பூஜை முடியும் வரை காவலாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு இறைவனை வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.

    ஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்டநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.



    சிவபெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும், ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்று சேருவார்கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும், இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவமாகும்.

    இந்திரனுக்கு மீண்டும் பதவி :

    இந்திரன் ஒரு முறை, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனை, தேவர்களின் குருவாகக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்ளி செய்தான். இதையறிந்து அவனை இந்திரன் கொன்றான்.

    விசுவரூபனின் தந்தையான துவாட்டா என்பவர், தனது மகனின் இறப்பை அறிந்து வேதனை கொண்டார். இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதில் இருந்து விருத்திராசூரன் என்பவர் தோன்றி தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவைப்பட்டது. எனவே ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திராசூரனை அழித்தான் இந்திரன்.

    வேள்வியில் தோன்றிய விருத்திராசூரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று, மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.

    இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த தலம்.

    புதன் தலமான திருவெண்காடு செல்பவர்கள் அருகே உள்ள இந்தத் தலத்தையும் தரிசிக்கலாம். 
    திவ்ய தேசங்களில் பதினோராவது தலம், தம்பதியரின் மனக்கசப்பு நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்.
    ஆதிசேஷனுக்கு பெருமாளே ஆச்சாரியராக அருளிய தலம், பிருகு முனிவரின் மகளாகத் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணந்த இடம், இந்திரனின் சாபம் நீக்கிய பூமி, வைணவ ஆலயங்களில் அக்னி தலமாகவும், குரு தலமாகவும் விளங்கும் கோவில், திவ்ய தேசங்களில் பதினோராவது தலம், தம்பதியரின் மனக்கசப்பு நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்.

    புராண வரலாறு :

    பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பெருமாளை வந்து தரிசித்தார் பிருகு முனிவர். அவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றை வழங்கினாள். அந்த மாலையை, பெருமாளை வழிபட்டு திரும்பிச் செல்லும் வழியில் வந்த இந்திரனுக்கு பிருகு முனிவர் பரிசளித்தார். மாலையைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை ஐராவத யானையின் மீது வைத்தான். ஆனால் யானையோ, அதனை கீழே தள்ளி காலால் மிதித்தது. இதற்கு காரணமான இந்திரன் மீது கோபம் கொண்ட பிருகு முனிவர், அவனை மானிடனாகப் பூமியில் பிறக்க சாபமிட்டார்.

    முனிவரின் சாபத்தால் கலங்கிய இந்திரன், மகாலட்சுமியிடம் சென்று வேண்டினான். அதற்கு மகாலட்சுமி, ‘நான் பிருகு முனிவரின் மகளாகப் பிறந்து, பெருமாளை மணம் புரியும் போது, உனது சாபம் நீங்கும்’ என்று அருளினாள். அதன்படியே, அனைத்தும் நடக்க, பெருமாள், மகாலட்சுமியின் திருமணக்கோலம் கண்டு, சாபவிமோசனம் பெற்றான் என புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணம் புரிந்த தலம் இதுவாகும்.

    தல வரலாறு :

    ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கனுக்கு திருமதில் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார் திருமங்கையாழ்வார். அப்போது அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தன் குறை நீங்கி பணி நிறைவு பெற உதவிடுமாறு, ஸ்ரீரங்கநாதனிடம் முறையிட்டார். அன்று அவரின் கனவில்தோன்றிய பெருமாள், ‘கொள்ளிடக்கரையில் வந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்.

    அதன்படி, கொள்ளிடக்கரை வந்த திருமங்கையாழ்வார், ஒரு வணிகரைச் சந்தித்தார். அந்த வணிகர், ‘உங்களுக்கு உதவி செய்ய எனக்கு கட்டளை வந்துள்ளது. நான் உங்களோடு வருகிறேன். வேலையாட்களுக்கு என்னிடம் உள்ள மரக்காலால் மண்ணை அளந்து தருவேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மண்ணாகவும் இருக்கும்’ என்று கூறினார்.

    அந்த வணிகரிடம் ஒரு மரக்கால், ஏடு, எழுத்தாணி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தன.

    ஸ்ரீரங்கத்தில் திருப்பணி செய்த வேலையாட்களுக்கு மரக்காலால் வணிகர் மணலை அளந்து தர, அது ஒருசிலருக்குப் பொன்னாகவும், சிலருக்கு மணலாகவும் இருந்தது. மணலை கூலியாகப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க முற்பட்டனர். வணிகர் ஓட, அவர் பின்னால் ஆழ்வாரும் ஓட, இருவரும் கொள்ளிடம் கரையில் உள்ள ஆதனூர் வந்து சேர்ந்தனர். அங்கே வணிகர், பெருமாளாக காட்சியளித்து மறைந்தார். இத்தலமே, இன்றைய ஆதனூர் என தலவரலாறு குறிப்பிடுகிறது.

    ஆதனூர் :

    ஆ+தன்+ஊர்= ஆதனூர். ‘ஆ’ எனும் காமதேனு தவமிருந்து தன் ஊராக ஏற்றதால், இத்தலம் ‘ஆதனூர்’ என வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக, கருவறையில் பெருமாளின் திருப்பாதத்தை வணங்கியபடி காமதேனுவும், அதன் கன்று நந்தினியும் காட்சி தருகின்றன.



    ஆண்டளக்கும் ஐயன்

    தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘ஆண்டளக்கும் ஐயன்’ என்பதே திருநாமமாக விளங்குகிறது.

    ஆதிசேஷன் பாம்பணையில் சயனித்த கோலத்தில் அருள்கிறார். பெருமாள் தன்னுடைய தலைக்கு மரக்காலை தலையணையாகவும், இடது கரத்தில் எழுத்தாணியையும், ஏட்டையும் தாங்கி காட்சி தருகிறார். ஆதிசேஷன் சங்கு, சக்கரத்தை தாங்கியிருப்பது சிறப்புக்குரியதாகும்.

    இறைவனின் நாபிக் கமலத்தில் பிரம்மா, பாதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்க, பாதத்தை வணங்கியபடி காமதேனு, அதன் கன்று நந்தினி, பிருகு மகரிஷி, அக்னி பகவான், திருமங்கையாழ்வார் உள்ளிட்டோர் காட்சி தருகின்றனர்.

    சுவாமி சன்னிதியின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் கமலவாசினித் தாயார் காட்சியளிக்கிறார். தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார். தல மரம் பாடலி மரம், தலத் தீர்த்தமாக சூரிய புஷ்கரணி எனும் சூரியத் தீர்த்தம் அமைந்துள்ளது.

    இத்தலத்தைக் காமதேனு தன் கன்றுடன் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளது. அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார். இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னியாகவும், நவக்கிரக தலத்தில் குரு தலமாகவும் விளங்குகின்றது. மன முறிவு ஏற்பட்ட தம்பதியினர் இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், மன ஒற்றுமை ஏற்பட்டு மன மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலயத்தில் வைணவ விழாக்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. வைகாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம், விசாகத்தன்று தேர்த் திருவிழா போன்றவையும் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அருகே நரசிங்கபுரம் தலத்தில் அகோபில மடத்தின் சார்பான நரசிம்மர் சன்னிதியும், அதன் வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து ஜீயர்களின் பிருந்தாவனத்தையும் அனுமதி பெற்று தரிசிக்கலாம்.

    அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    திருமனத் தூண்கள் :

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள திருமனத் தூண்கள் ஆகும். புனிதமான மனதின் எண்ணங்களை நிறைவேற்றும் தூண் என்பதால் இந்தப் பெயர். கருவறையின் முன்புற மண்டபத்தில் இடது, வலது புறங்களில் உள்ள தூண்களே மனத் தூண்கள். இவை ‘மோட்சத் தூண்’கள் எனவும் அழைக்கப்படுகின்றன. நம் விருப்பத்தை இறைவனிடம் வைக்கும் போது, ஒரு தூணில் இருந்து பார்த்தால் இறைவனின் திருமுகம் தெரியும். மறு தூணில் இருந்து பார்த்தால், இறைவனின் திருவடிகள் தெரியும். இவ்வாறு தரிசித்தால் மனதில் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இதன்காரணமாகவே இந்த தூண்களை ‘திருமனத் தூண்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்தத் தூண்களைச் சிறப்பிப்பதற்காக இவற்றிற்குக் கவசம் பூட்டி மரியாதை செய்துள்ளனர்.

    அமைவிடம் :

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில், ஆதனூர் திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம்- திருவைகாவூர் வழித்தடத்தில், கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து வடக்கே 4 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து பஸ் வசதி இருக்கிறது. 
    ஷேத்திரம், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தரும் மகத்தான ஆற்றல் கொண்டவை. அவற்றுள் ஒன்று சென்னை மாதவரத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.
    நம் நாட்டில் உள்ள பல ஆலயங்கள், வேதங்களோடும், புராணங்களோடும் தொடர்பு கொண்டு, புண்ணிய தலங்களாக திகழ்ந்து வருகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டுள்ள தலமே ‘ஷேத்திரம்’ என அழைக்கப்படும். அந்த ஷேத்திரம், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தரும் மகத்தான ஆற்றல் கொண்டவை. அவற்றுள் ஒன்று சென்னையில் உள்ள மாதவரம். இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.

    நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம்செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.

    ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ என வைணவ மரபில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு அவதரித்த வைணவ ஆச்சார்யர்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஷேத்திரங்கள், அபிமானத் தலங்களாக விளங்குகின்றன. அத்தகைய அபிமானத் தலங்களுள் ஒன்று தான் மாதவரம்.

    இங்குள்ள உற்சவர்கள் கரிவரதராஜ பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்ற திருப்பெயருடனும் சேவை சாதிக்கின்றனர். உற்சவரின் பெயரிலேயே ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல உற்சவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கிணறு தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டவர். புராணப் பெருமை வாய்ந்த இந்த ஷேத்திரம், கல் திருப்பணி ரீதியாக 1400 ஆண்டுகள் தொன்மையானது. காஞ்சீபுரம் சென்று வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்காக, இரண்டாம் நந்திவர்மப் பல்லவ அரசனால், இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போருக்குச் சென்றபோது இத்தலத்தில் தங்கியிருந்து, பெருமாளை வழிபாடு செய்த இவ்வரசன், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த ஆலயம் எழுப்பியுள்ளான்.

    மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார்.

    ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக்கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.

    பெருமாளின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என பெரியோர் சொல்வர். ஆனால் கனகவல்லிக்கு இரண்டு திருக்கண்களுமே சந்திரன். கனகவல்லி தாயார், கருணையே பார்வையாகக் கொண்டவள். தன் பதியான கரிவரதராஜன் பக்தர்களிடம் காட்டும் கருணையை செயலாக்குபவள் இவள் தான். வரப்பிரசாதியான இந்தத் தாயாரை பத்து நிமிடம் தரிசித்தால், பெற்ற தாயிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    துன்பத்தில் இருப்பவர்களை அரவணைத்து அருள்பாலிக்கும் இந்தப் பிராட்டி, திருமணத்தடையை நீக்குவதோடு, புத்திர பாக்கியமும் அருள்கிறாள். தொடர்ச்சியாக 12 வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நீராஞ்சன தீபமேற்றி, மஞ்சள் மாலை சாற்றி வேண்டுவோருக்குத் திருமணம், குழந்தைப்பேறு வாய்க்கிறது. பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் ஏற்படுத்தியும், காணாமல் போன குழந்தை திரும்ப கிடைக்கச்செய்தும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். மனமுருகி வழிபடுவோருக்கு 21 நாளில் வேண்டுதல் நிறைவேறுகிறது.

    இங்கு சுதர்சனாழ்வார், நரசிம்மர், தன்வந்திரி பகவான், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் முன்பு 21 அடி உயரத்தில் சுதைச் சிற்ப ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமை குங்குமார்ச்சனை, தை, ஆடி வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம், தமிழ் வருடப் பிறப்பு, திருமலைபோல் ஒரு நாள் போன்றவை இவ்வாலய முக்கிய விழாக்கள் ஆகும்.

    இங்கு பெருமாளை தரிசிப்பதற்கு முன்பு, சுதைச்சிற்ப ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களான சேனை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரை வணங்கி, ஆண்டாள், கனகவல்லித் தாயாரை வழிபட்ட பின்பே கரிவரதராஜப் பெருமாளை வழிபடுவது முறையாகும்.

    நம் வாழ்க்கையை சொர்க்கமாக அமைத்துக் கொள்ள கனகவல்லித் தாயார் சமேத கரிவரதராஜப் பெருமாள் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்வோம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 10 கி.மீ., பெரம்பூர் பஸ், ரெரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் மாதவரம் உள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 
    நோய் தீர்க்கும் அற்புதமான தீர்த்தமலையானது, தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
    மனித பிறவி எடுத்தவர்கள் அனைவருமே, நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது நடக்கிறதா? என்றால், ‘இல்லை’ என்பதுதான் கசப்பான உண்மை. உலகில் நோய் வாய்ப்படாத மனிதர்களே இல்லை எனலாம். இறைவனிடம் நாம் செய்யும் முக்கிய பிரார்த்தனையே, ‘இறைவா! ஆரோக்கியமான வாழ்க்கையை கொடு’ என்பதுதான்.

    அவரவர் கர்ம வினைப்படியே, நோய்கள் மனிதர்களை தாக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. என்றாலும் இறைவனிடம் நாம் செய்யும் பிரார்த்தனையின் பலனாக, நோய்கள் தீரக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பையும் ஆலயங்கள் மூலமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கிறான் என்றால் அது மிகையில்லை.

    அப்படி ஒரு நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

    அது மட்டுமல்ல... தலைமை சித்தரும், உலகின் முதன் தலை அறுவை சிகிச்சை செய்த சிறந்த மருத்துவருமான அகத்தியருக்கு ஒரு முறை தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அகத்தியரின் வயிற்றுவலியைப் போக்கிய தலம் என்ற பெருமையையும் தீர்த்தமலை திருத்தலம் பெற்றுள்ளது. இந்த தீர்த்தமலையானது, தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    தல வரலாறு :

    வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை, மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது, சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார்.

    ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர், தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம், பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர், சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ‘ராம தீர்த்தம்’ என்று பெயர்.

    இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான், தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால், கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது ‘அனுமந்த தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு, இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.



    ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் ‘தீர்த்தகிரீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். ராம தீர்த்தத்தில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல்ரீதியான எந்த வித வியாதியாக இருப்பினும் அவை தீரும் என்கிறார்கள். இது தவிர குழந்தை வரம் மற்றும் குடும்ப ஒற்றுமை, சகல ஐஸ்வரியம் கிடைக்கவும், கடன் தொல்லை தீர்வதற்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பலரும் வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள். மொத்தத்தில் இத்தல இறைவனை வழிபாடு செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது உண்மையே.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திரு நாமம் ‘வடிவாம்பிகை’ என்பதாகும். இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தல விருட்சத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைப்பவர்கள், மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர், இங்குள்ள பெரிய புற்றை வழி படுவதோ, தொட்டில் கட்டி வேண்டுதல் வைக்கின்றனர். மேலும் நாகப்புற்றை வணங்கினால் நாகதோஷம் நீங்குவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் இத்தல ஆலயத்திற்கு வந்து, முடி எடுத்தல், காது குத்துதல் ஆகிய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தவிர சுவாமிக்கு தேன், நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழ வகைகள் போன்றவற்றால் அபிஷேகமும் செய்கிறார்கள். ஒரு சிலர் தங்களின் வசதிக்கேற்ப சொர்ணாபிஷேகம் செய்வதும் உண்டு. இறைவனுக்கு வஸ்திரமும், அம்பாளுக்கு புடவையும் சாத்தி வழிபடும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஒரு சில பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை அன்னதானமாக வழங்குகிறார்கள்.

    மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே முருகப்பெருமான், வேலை தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ளது பெருநா என்ற ஊர். இங்கு தாரகாசுரனை அழித்த முருகப்பெருமான், வேலை தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.

    தல வரலாறு :

    உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். இதில் பெருநா எனுமிடத்தில் வசித்த அந்தணர்கள் நற்செயல்கள் செய்யும் சாத்விக குணம் கொண்டவர்களாக இருந்தனர். உம்பிளியில் இருந்தவர்கள் மாய, தந்திர வேலைகளைச் செய்பவர்களாகவும், தீய எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

    பெருநாவில் இருந்த அனைவரும் சிவ பக்தர்கள் என்பதால், அவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கீழக்குளக்கரை என்ற இடத்தில் இருந்த சிவாலயத்தில் வழிபாடு செய்தனர். பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டிருந்த உம்பிளி பகுதி மக்கள், சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். இதையறிந்த பெருநா ஊர் மக்கள், உடனடியாகச் சென்று சிவபெருமான் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர்.

    இந்நிலையில், இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகளைச் செய்து வழிபட்டு வந்தார். சில வாரங்களுக்குப் பின்பு, அவருக்குக் காட்சியளித்த பழனி முருகப்பெருமான், ‘பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்’ என்றார்.

    இடமனா நம்பூதிரி, முருகப்பெருமான் சொன்னபடியே கொடுந்துறா ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துக் கொண்டு போய், பெருநா கிராமத்தில் நிறுவினார். இதனையறிந்த உம்பிளி கிராமத்தினர், சில ரகசியத் தந்திரச் சடங்குகளைச் செய்து, பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். இதனைக் கேள்விப்பட்ட இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவரை அழைத்துக் கொண்டு உம்பிளியை நோக்கிச் சென்றார்.

    வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்க, முருகப்பெருமான் அருளுடன் சில சடங்குகளைச் செய்யத் தொடங்கினார். இந்த பூைஜயில் காரணவர் பலியானார். நண்பன் இறந்தாலும், தன் பணியைத் தொடர்ந்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்.

    பின்னர் உம்பிளியிலிருந்து எந்தத் தீயசக்திகளும், பெருநா கிராமத்திற்கு வந்துவிடாமல் இருக்க சில சிறப்புச் சடங்குகளைச் செய்து முடித்தார். அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலுமாக அழிந்து போனதுடன், அடர்ந்த காடாகவும் மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.

    பெருநா கிராமத்தில் முருகப்பெருமான் கோவில் அமைந்த தல வரலாறு இதுதான். இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது.

    பிரம்மாவின் மகனான காசிப முனிவருக்கும், சுக்ரனின் மகளான மாயாவுக்கும் பிறந்தவர்கள் சூரபதுமன், சிங்கமுகன் மற்றும் தாரகாசுரன். இவர்கள் மூவரும் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவமியற்றினர். தங்களுக்கு எந்த வழியிலும் அழிவு வரக்கூடாது என்று நினைத்த அவர்கள், சிவபெருமானுக்குச் சமமானவராக இருக்கும் ஒருவரால் மட்டுமே தங்களுக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தை பெற்றனர்.



    தாங்கள் பெற்ற வரங்களால் அகந்தை கொண்ட மூவரும், தேவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் அனைவரும் அசுரர்களின் தொல்லைகளில் இருந்து விடுபட என்ன வழி என்பது குறித்து ஆலோசித்தனர்.

    பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் துன்பங்களைத் தீர்க்க விரும்பிய சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார். அவை ஆறையும் ஒன்றாக்கியதில் முருகப்பெருமான் தோன்றினார்.

    தேவர்களின் அரசனான தேவேந்திரன், தேவர்களுடன் சென்று முருகப்பெருமானைச் சந்தித்து, அவரது பிறப்பிற்கான காரணம் குறித்து தெரிவித்து, அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றும்படி வேண்டினான். முருகப்பெருமானும் அதற்குச் சம்மதித்துத் தேவர்களின் படைத்தலைவனாக (தேவசேனாதிபதி), மூன்று அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார். போருக்குச் செல்லும் முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான் அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார்.

    முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை அழிக்கும் நோக்குடன் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். முருகப்பெருமான் படையுடன் தன்னை அழிக்க வந்திருப்பதை அறிந்த தாரகாசுரன், தனது படையுடன் அங்கு வந்தான். இரு படையினருக்கும் இடையில் கடுமையான போர் நடந்தது. முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் பின் வாங்கினான்.

    அப்போது அகத்திய முனிவரின் சாபத்தால், பறவையாக இருந்து மலையாக மாறிய கிரவுஞ்சன், முருகனின் படைகளை வழிமறித்துப் பெரிய மலையாக வளர ஆரம்பித்தான். அதனால், முருகப்பெருமானின் படைகள் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தாரகாசுரனும் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான்.

    அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுந்த மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது.

    தாரகாசுரனை அழித்த ரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த ரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலை, தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார். முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.

    சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. கோவில் வளாகத்தில் மகாகணபதி, சிவபெருமான், மகாவிஷ்ணு, நாகர்கள் உள்ளிட்ட பல துணைத் தெய்வங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ‘பள்ளிவேட்டை விழா’ சிறப்பானதாகும். இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து உள்ளிட்ட கேரள மரபு வழி கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

    ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சங்கனாச்சேரி. இங்குள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பெருநா திருத்தலம் அமைந்துள்ளது.
    திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மயிலம் தலம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது. திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது. இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை. இதனால் இந்த மலைக்கு மயிலம் என்று பெயர். மயிலம் தலத்தின் சுருக்கமான தல வரலாறு:-

    கந்தபுராணத்தில் இது பற்றிய தகவல் ஒன்று உள்ளது. முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான். அப்படித் தோற்றவன் நல் அறிவு பெற முருகனுக்கு வாகனமாக இருக்க விரும்பினான். அவன் தனது விருப்பத்தை முரு கனிடம் தெரிவித்தான்.

    உடனே முருகன், “நீ மயில் போன்ற மலையாகி வராக நதியின் வட கரையில் நின்று தவம் செய். உன் ஆசையைப் பூர்த்தி செய் கிறேன்” என்றார். அவனும் அதன்படியே நின்று தவம் செய்தான். அவன் மீது இரக்கப்பட்ட முருகன் இங்கே கோவில் கொள்ளக் காரணமாயிற்று என்கிறது தல புராணம்.
    மயிலம் மலையில் கோவிலை நிர்மாணித் தவர்கள் பொம்மையபுரம் மடாதிபதி ஆவார். சூரபதுமன் வரலாறு தவிர மற்றொரு செய்தியும் இத் தலத் திற்கு உண்டு.

    சிவகணத் தலைவர்களில் சங்கு கன்னர் என்பவரும் ஒருவர். இவர் செய்த ஒரு குற்றத்திற்காக சாபம் பெற்றார்.அதன்படி அவர் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார். இவர் மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள கடற்கரையில் பால சித்தராக அவதாரம் எடுத்தார். பால யோகியான இவர் தன் சாப விமோசனம் வேண்டி மயிலம் மலையில் தவம் இருந்தார். முருகனோ, இவரை சிவ அபராதி என்று கூறி காட்சி தர மறுத்து விட்டார்.

    இதையடுத்து வள்ளி, தெய்வ யானையின் உதவியை நாடிய பால யோகி தனக்கு வழிகாட்டுமாறு மன்றாடி வேண்டுகோள் விடுத்தார். பாலயோகி மீது இரக்கப்பட்ட தேவியர் இருவரும் அவருக்கு கருணை காட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்கள் பாலசித்த ருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்கள். முருகனிடம் முதலில் தேவியர் பால சித்தருக்கு பரிந்துரை செய்து பார்த்தனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்க முருகன் மறுத்தார்.

    இதன் காரணமாக வள்ளி, தெய் வானை இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கி விட்ட னர். எத்தனை நாள்தான் முருகர் தன் தேவியரைப் பிரிந்து இருப்பார்?

    எனவே, முருகன் வேட ரூபத்தில் சித்தர் ஆசிரமத்திற்கு வந்தார். அப்போது முருகனுக்கும், சித்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் வாதம் மல்யுத்தமாக மாறியது.

    இந்த நிலையில் சூரபதுமனுக்குக் காட்டிய தன் திருகோலக் காட்சியை சித்தருக்கும் முருகன் காட்டினார். பின்பால சித்தருடைய விருப்பப்படி கல்யாண கோலத்தில் மலைமீது தம்பதி சமேதராய் கோவில் கொண்டார். மயிலம் மலையில் முருகன் கோவில் கொண்டதற்கு இந்த நிகழ்வே காரணம் என்று கூறப்படுகிறது.

    மயிலம் ஆலய சிறப்புகள் :

    மயிலம் கோவிலில் மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும் சிரமமில்லாமல் ஏறும் விதமாக அமைந்திருக்கிறது. இது சிறப்பானது ஆகும். இந்தத் திருக்கோயிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த் தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது. இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்துக் சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம்.

    தைப்பூச விழாவின்போது பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பார்கள். அப்போது பக்திப் பெருக்கோடு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என தோளில் விதவிதமான காவடிகளைச் சுமந்தபடி நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி மலையேறுவது கண்கொள்ளாக் காட்சி!மலை உச்சியை அடைந்தால் ஒருபுறம் ராஜ கோபுரம், இன்னொரு பக்கம் பெரிய மண்டபம் என கோயிலுக்குள் செல்ல 2 வழிகள் உள்ளன.

    முருகனுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது. இதை ஒரு வேண்டுதலாகவே செய்கிறார்கள். இதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

    பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

    பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

    நொச்சி இலை :


    முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

    மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

    இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!

    3 உற்சவர்கள் :

    மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.

    மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வரு வார் இந்த மூலவர்.

    இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.

    மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.

    பாலசித்தர் வழங்கும் வேலாயுதம்:

    பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

    பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

    தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் :

    மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதீனங்கள், பக்தி நெறி தழைக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும்.

    ஆதீனத் தோற்றம் :

    மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார். இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார்.

    ஆதீனகர்த்தர் சங்குகன்னர் :

    அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவருக்கருகில் சிவயோக சமாதியுற்று சிவலிங்க வடிவமெய்தி அடியார்களால் வணங்கப்பெறும் நிலை பெறுக!’ என்று வாழ்த்தியருளினார்.

    சங்குகன்னர் அவதாரம் :

    அவ்வழியே சங்குகன்னர் உலகில் கருவழித் தோன்றாமல் திருநீறு, உருத்திராக்கம், கல்லாடை, இட்டலிங்கம் அணிந்த மார்பு, செஞ்சடை, குண்டலமணிந்த திருச்செவிகள், சின்முத்திரையுடன் கூடிய வலக்கை, திருநீற்றுப்பை, மாத்திரக்கோல் இடக்கை, வீரசைவ ஆகமங்கூறும் திருவாய், ஐந்தெழுத்தை ஒலிக்கும் திருநாக்கு ஆகியவற்றுடன் கூடிய திருக்கோலத்துடன் பத்து வயது நிறைந்த பாலகனாகத் தோன்றினார்.

    ஆதீனத் தோற்றம் :

    இதனை அடுத்துள்ள, பெருமுக்கல் முதலிய மலைகளுக்கும் வனங்களுக்கும், தம் யோக வல்லமையால் உலாவிச் சென்று ஆங்காங்குள்ள சித்தர்களுக்கும், அடியார்களுக்கும் வீரசைவ ஆகம நெறிகளை உணர்த்தினார். சித்துக்களையும் செய்தருளினார். பாலவயதினராய்ச் சித்துக்கள் பல செய்தமையால் பாலசித்தர் எனப்பெயர் கொண்டார். பிரம்மநிலையை உணர்ந்து தங்கியிருந்தமையால் இவ்வூர் பிரமபுரம் என வழங்கலாயிற்று. பாலசித்தரின் தவஆற்றல் உலகில் பரவியதால் சீடர்கள் பலர் உருவாயினர். அச்சீடர்களின் பக்குவநிலையறிந்து ஞானஉபதேசம் செய்தருளித் தாம் தங்கிச் சிவயோகம் புரிவதற்கு அமைத்துக் கொண்ட திருமடம் பொம்மயபாளையத் திருமடம் என்ற பெயரில் அழைக்கப் பெறலாயிற்று.

    மயிலை வரலாறு :

    இங்ஙனம் பாலசித்தர் திருமடத்தில் வீற்றிருக்கும் நாளில், சிவபெருமானது ஆணையின்வண்ணம் நாரதர், பாலசித்தர் முன் தோன்றி, ‘பொம்மபுரத்திற்கு மேற்கே மயூராசலம் (மயிலம்) என்ற ஓர் ஊர் உள்ளது. ஆங்கே முன்னாளில் சூரபதுமன் மயில் வடிவ மலையாக இருந்து முருகனை நோக்கி, கடுந்தவம் புரிந்தனன். அதற்கு முருகப் பெருமான் சூரபதுமன் விருப்பப்படியே அவனை மயில்வாகனமாக ஏற்றருளினார். அவனும் “ஐயனே, மலைவடிவாக இருந்து யான் தவம் செய்தமையால் இம்மலை மயிலமலை என்ற பெயரால் வழங்க வேண்டும்” என்றும் “தேவரீர் எந்நாளும் இங்கிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டான்.

    அவ்வாறே முருகனும் “சிலகாலத்திற்குப் பின்னர் இம்மலையில் பாலசித்தர் என்பால் எம்மை நோக்கி வந்து தவம் புரிந்து எம்முடன் போரிட்டு எம்மால் ஆட்கொள்ளப் பெறும் காலத்து எம்தேவியருடன் எழுந்தருளி நின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்” என்றுரைத்து மறைந்தருளினார். எனவே, தாங்களும் மயிலமலையை அடைந்து தவம் செய்தால் எண்ணிய யாவும் கைகூடும்’ என்று நாரதர் பாலசித்தருக்கு உணர்த்தி விடைபெற்றார்.

    மயிலைத் தவம் :

    இந்நிலையில், பாலசித்தர் மயிலம் அடைந்து அங்குள்ள சுனைகளில் நீராடி முருகனை வழிபட்டார். மேலும் முருகனை நோக்கி, பதுமாசனமாக முப்பத்தைந்து ஆண்டு காலம் தவநிலையில் இருந்தார். முருகன் அருள்புரியாததால் பஞ்சாக்கினி நடுவிலிருந்து கடுந்தவமும் புரியலானார். இந்நிலையிலும் முருகப்பெருமான் அருளாததால் அவர்தம் தேவியராகிய வள்ளி தெய்வயானையரை நோக்கி, பலநாள் தவம் செய்தார் பாலசித்தர்.

    தேவியர் இருவரும் சித்தரின் தவத்திற்கு இரங்கி, அவருக்கு அருள்புரியுமாறு முருகப் பெருமானிடம் வேண்டினர். முருகனும் “அருள்புரியும் காலம் வருந்துணையும் யாம் அமைதியாக இருப்பதனை அறியாமல் அவருக்கு அருள்புரிய வேண்டுமென்று வற்புறுத்தும் நீவிர் இருவரும் எம்மை விட்டு அகல்வீராக” என ஆணையிட்டார்.

    அன்னையர் அருள் :

    உடனே, பாலசித்தருக்கு அருள்புரியாத முருகன்பால் ஊடல் கொண்ட தேவியர் இருவரும் சித்தக் கன்னியர்களாக வடிவம் கொண்டு சித்தருக்கு முன் தோன்றி நின்றனர். அதனைக் கண்ட சித்தர் முருகப் பெருமானுடைய தேவியர்களே தம்மை ஆட்கொள்ள இவ்வுருக் கொண்டு எழுந்தருளினர் என யோக ஞான வல்லமையால் உணர்ந்து, அவர்களை உபசரித்து, “நீங்கள் யார்? வந்த காரணம் யாது?” என வினவினார். அவர்களும் “இவ்விடத்தில் சித்தர் இருப்பதை அறிந்து இங்கு உறைய விரும்பி வந்தோம். நீங்கள் உங்கள் புதல்வியர்களாக எங்களைப் போற்றிக் காத்தல் வேண்டும்” என வேண்டினர். அதற்குச் சித்தரும் உடன்பட்டுத் தேவியரை, தேவதச்சனைக் கொண்டு ஒரு மாளிகை உருவாக்கச் செய்து அதில் வீற்றிருக்கச் செய்தார்.

    முருகனொடு பொருதுதல் :

    முருகப்பெருமான் பாலசித்தருக்கு அருள்புரியும் காலம் கனிந்தமையால் பிரிந்த தேவியரைத் தேடிவருவார்போல, மயில மலையை அடைந்து தேவியர் இருக்கும் இடம் இதுவெனத் துணிந்து போர்க்கோலம் கொண்ட அரசர் வடிவத்தில் அம்மாளிகையில் நுழையச் சென்றார். அங்கிருந்த பாலசித்தர், “கன்னியர் இருக்குமிடத்து ஆடவர் புகுதல் தகாது” எனத் தடுத்தும் முருகன் நுழைய முற்பட்டபோது இருவருக்கும் போர் ஏற்பட்டது.

    பாலசித்தர் முருகன் எய்திய படைகள் அனைத்தையும் தடுத்ததோடு, இறுதியாக முருகன் ஏவிய வேலினையும் கன்னியர் அருளால் தம்வசப்படுத்திக் கொண்டார். முடிவில், முருகப்பெருமான் படைக்கருவிகள் அற்றநிலையில் சித்தருடன் நேருக்கு நேராக மற்போர் புரியத் தொடங்கினார். பாலசித்தரது மார்பில் அறைந்து அவரைக் கீழே தள்ளியும் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டும் காலால் உதைத்தும் போர் புரிந்து அருளினார்.

    மணக்கோலம் :

    தம்மோடு போர்புரிந்தவர் முருகனே என உணர்ந்த பாலசித்தர் போர் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுமாறு திருவடி பணிந்து வேண்டி நின்றார்.
    முருகனும் அவ்வாறே பாலசித்தருக்கு ஞான உபதேசம் வழங்கி மாளிகையினுள் இருந்த அரியணையில் அமர்ந்தார். அந்நிலையில் சித்தரும், தேவியர் இருவரையும் அழைத்து வந்து, அவர்களோடு முருகப் பெருமானை வணங்கி நின்று, “அடியேன் என் புதல்வியர்களாகப் பாவித்த இக்கன்னியர்களை தேவரீர் மணமுடித்து மணக்கோலத்துடன் இத்தலத்தில் எந்நாளும் எழுந்தருள வேண்டும்” என வேண்டினார்.

    அவ்வாறே, முருகனும் உமாதேவியாரோடு சிவபெருமான் தேவகணங்கள் சூழ எழுந்தருளும்படி தியானித்தார். அக்கணத்தே, தேவகணங்கள் சூழ இறைவனும் இறைவியும் எழுந்தருளி மயன் வகுத்த மணிமண்டபத்தில் வீற்றிருந்தனர். சிவனது அருளாணையின் வண்ணம் நான்முகன் திருமணச் சடங்கு நிகழ்த்த, பாலசித்தர் தத்தநீர் வார்க்கவும், முருகன் கன்னியர் இருவரையும் மணந்தருளினார்.

    அருள் கனிந்தது :

    அவ்வமயத்தில், சிவன் பாலசித்தரை நோக்கி, “இத்திருத்தலத்தில் நம் குமரனாகிய முருகன் என்றென்றும் திருவருளையும் குருவருளையும் வழங்கிக் கொண்டிருக்க இன்னும் ஐந்நூறு ஆண்டு காலம் அனைவருக்குக்கும் புலப்படுமாறு வெளிப்பட இருந்து வீரசைவ நெறியை ஓங்கச் செய்து, பின் முருகனின் வலப்பாகத்தில் ஜீவசமாதி நிலையடைந்து பின் அருளுருப் பெற்று அனைவருக்கும் அருள் வழங்குக!” என அருள்புரிந்தார்.

    சீடர் பரம்பரை :

    இவ்வாறு அருள்பெற்ற பாலசித்தர், பொம்மபுரத்தை அடுத்த பெருமுக்கல் மலையில் தங்கியிருந்து வீரசைவ நெறிபரப்பிவந்த காலத்தில், சிதம்பரம் பச்சைக்கந்த மரபைச் சார்ந்த அம்மவை என்பார் மகப்பேறு இன்றி வருந்தினார். இனிச் சிவத்தொண்டே மேற்கொள்வது என்னும் திண்ணிய எண்ணத்தோடு பாலசித்தரை அணுகி, அவருக்குத் தம் கணவரும் தாமும் தொண்டு புரியலாயினர். அம்மவை அம்மையார் சித்தருக்குத் தாமே சதுரக்கள்ளிப் பாலைக் கறந்து வந்து கொடுக்கும் திருத்தொண்டினைச் செய்து வந்தார்.

    அங்ஙனம் கள்ளிப்பாலைத் தந்த அளவில் சித்தர் உண்டு எஞ்சிய கள்ளிப்பால் பிரசாத சேடத்தை அம்மவை அம்மையார் அருந்தியதால் குருவருள் வழி ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார். பாலசித்தருடைய அறிவுரைப்படி அவருடைய திருவருட் பார்வையால் அக்குழந்தை வளர்ந்து, அவருக்குத் தொண்டு செய்து வந்தது. அக்குழந்தையின் பக்குவநிலையுணர்ந்து சீடராக அமைத்துக் கொண்டார் பாலசித்தர்.

    சிவஞானபாலய தேசிகர் :


    முருகன் அருள்பெற்ற பாலசித்தர் பொம்மபுர மடத்தில் அச்சீடருக்குச் சந்நியாசாசிரமம் தந்து, ஞானஉபதேசம் புரிந்து, பின்னர் ஆசாரிய அபிஷேகமும் செய்து, தமது அமிசத்திலே ஓர் அமிசம் அவரிடத்தில் பதியும்படி திருவருள் புரிந்து, அவர்தம்மை நோக்கி “நீ பாலை உணவாகக் கொண்டு, சீடபரம்பரையோடு சிவஞானபாலய தேசிகன் என வாழ்வாயாக!” என்று அருள்புரிந்தார். மேலும், “இத்திருமடம் பாலயசுவாமிகள் திருமடம் என்றும் வழங்குவதாகுக!” என அருள்புரிந்த நிலையில் பாலசித்தரின் சீடர் பரம்பரை மயிலம் திருமடத்தில் வீரசைவ நெறிபோற்றிச் சிவத்தொண்டை வாழையடி வாழையாக வளர்த்து வருகிறது.
    ×