என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    Navratri Special: நவராத்திரி 7-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்... காலராத்திரி தேவி
    X

    Navratri Special: நவராத்திரி 7-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்... காலராத்திரி தேவி

    • காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
    • காலராத்திரி தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 7-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காலராத்திரி தேவி'. காலராத்திரி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.

    காலராத்திரி தேவி

    காலராத்திரி என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகவும், துர்கைகளில் ஏழாவது உருவமாகவும் கருதப்படுகிறார். துர்கையில் 9 வடிவங்களிலும் மிகவும் உக்கிரமான வடிவமாக தேவி காலராத்திரி விளங்குகிறார். நவராத்திரி ஏழாம் நாளில் காலராத்திரி தேவியை வழிபட வேண்டும்.

    காலராத்திரி தேவியின் சிறப்பு அம்சங்கள்:

    காலராத்திரி என்பது "கால" என்றால் காலம் அல்லது இருள், "ராத்திரி" என்றால் இரவு என்று பொருள். எனவே காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.

    ஷும்பன் – நிஷும்பன் வதம்

    மார்கண்டேய புராணத்தின் தேவி மாஹாத்மியம் படி, அசுரர்களின் அரசனான ஷும்பன் - நிஷும்பன் இருவரும் உலகையும் தேவர்களையும் துன்புறுத்தினர்.

    அவர்களை அழிக்க அம்பிகை தேவியின் உடலிலிருந்து பல உக்கிர வடிவங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காலராத்திரி.

    காலராத்திரி தோன்றியதும், மஹாசுரர்களின் படைகள் அனைத்தும் இருளில் மூழ்கின. தேவியின் மூச்சில் இருந்து தீக்கதிர்கள் பீறிட்டன. யுத்தத்தில் காலராத்திரி தேவி பல அசுரர்களை அழித்து, ஷும்பன்–நிஷும்பன் படைகளை முறியடித்தார்.

    ரக்தபீஜன் வதம்

    மார்கண்டேய புராணத்தில் ஷும்பனுக்கு உதவியாக ரக்தபீஜன் என்ற அசுரன் இருந்தான். அவன் ரத்தத்தின் ஒரு துளி பூமியில் விழுந்தால், அதிலிருந்து மற்றொரு ரக்தபீஜன் உருவாகும் என்று வரத்தை பெற்று இருந்தான். இதனால் அவன் அசுரர்களின் பெரும் பலம் வாய்ந்தவனாக இருந்தான். அந்த அசுரனை யாராலும் அழிக்க முடியவில்லை.

    அப்போது காலராத்திரி தோன்றி, போர்க்களத்தில் அவன் ரத்தத்தை குடித்தார். அதன் மூலம் அவன் ரத்தம் தரையில் சிந்தாமல் தடுத்துவிட்டு, அவனை முழுமையாக அழித்தார்.

    இந்த தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும். தன் பக்தர்களுக்கு எல்லா விதமான மகிழ்ச்சியையும், செல்வத்தையும், இருளை நீக்கும் சக்தியையும் தருபவர்.

    ஸ்லோகம்:

    'ஓம் தேவி காலராத்ரியாயை நம' என்று ஜபிக்க வேண்டும்.

    Next Story
    ×