வேடமணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்- குலசேகரன்பட்டினம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
வேடமணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்- குலசேகரன்பட்டினம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம். 3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7.30 இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர். அவர்கள் 6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

எனவே வேடம் அணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேடம் அணிபவர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.

அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.

காளிவேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் வேண்டும்.

வருகிற 2-ந் தேதி நள்ளிரவில் மகிஷா சுரசம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.

காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com