என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்

பிரம்மச்சாரிணி தேவியின் கதை
- பார்வதி தேவி தன் முன் பிறவி நினைவுடன், சிவபெருமானையே தனது கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை எடுத்தார்.
- பார்வதியின் தவத்தை சோதிக்க சிவபெருமான் ஒரு முதிய முனிவனின் வேடத்தில் வந்தார்.
பார்வதி தேவிக்கு முந்தைய பிறவி பெயர் சதி. அவர் தக்ஷன் மகளாகப் பிறந்தார். சதி சிவனைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், தக்ஷன் தனது மகள் சிவனை மணந்ததை விரும்பவில்லை. பின்னர் தக்ஷன் பெரும் யாகம் செய்தார். எல்லா தேவர்களையும் அழைத்தார், ஆனால் சிவனை அழைக்கவில்லை. சதி தனது கணவனின் அவமதிப்பை தாங்காமல் அக்னிக்குள் தன்னை அர்ப்பணித்தார்.
இந்தப் பிறவியை முடித்துவிட்டு, மீண்டும் ஹிமவானின் மகளாக பிறந்து, பார்வதி என்ற பெயரைப் பெற்றார்.
பிரம்மச்சாரிணி (தவ வாழ்க்கை)
பார்வதி தேவி தன் முன் பிறவி நினைவுடன், சிவபெருமானையே தனது கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை எடுத்தார். அதற்காக, கடுமையான தவத்தைத் தொடங்கினார்.
இவரது தவத்தைப் பார்த்து தேவதைகள் மிகவும் பிரமித்தனர். அப்போது அசுரர்களும் பலவித சோதனைகளால் அவரின் தவத்தை கலைக்க முயன்றனர். ஆனால் பார்வதியின் அசைக்க முடியாத மன உறுதி காரணமாக அவர்கள் எல்லாம் தோல்வியடைந்தனர்.
இறுதியில், அவரது தவத்தை சோதிக்க சிவபெருமான் ஒரு முதிய முனிவனின் வேடத்தில் வந்து, "சிவனை மணப்பது உன் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல, அவர் யோகி, அவர் வீடறியாதவர், அவரிடம் எதுவும் இல்லை" என்று கூறினார்.
ஆனால் பார்வதி மனம் அசையாமல், "சிவனே எனது கணவன்; வேறு யாரும் இல்லை" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
அப்போது சிவன் மகிழ்ந்து தனது உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தி, பார்வதியின் தவத்தை ஏற்றுக்கொண்டார்.
'பிரம்மச்சாரிணி' என்ற பெயரின் அர்த்தம்
இந்தக் கடுமையான தவம், ஒழுக்கம், மன உறுதியின் காரணமாகவே பார்வதிக்கு பிரம்மச்சாரிணி என்று பெயர் கிடைத்தது.
"பிரம்ம" - தவம், அறிவு, பரமத்துவம்
"சாரிணி" - கடைபிடிப்பவள்
அதாவது தவமும், ஒழுக்கமும் நிறைந்தவள் என்பதே பொருள்.
பிரம்மச்சாரிணி தேவியின் வெள்ளை நிற ஆடை அணிந்திப்பார். இவரது முகம் அமைதி, சாந்தம், பக்தி நிறைந்ததாக உள்ளது.
பிரம்மச்சாரிணியை வழிபடுவதால் மன உறுதி, பொறுமை, தைரியம் கிடைக்கும். கல்வி, ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். சிரமங்களைத் தாங்கி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும்.
பிரம்மச்சாரிணி தேவியின் வரலாறு நமக்கு சொல்லும் பாடம், பொறுமை, ஒழுக்கம், உறுதி இருந்தால் எதையும் அடையலாம். உண்மையான நம்பிக்கையால் இறைவன் கூட கிடைக்க முடியும் என்பது ஆகும்.






