என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்கப் பத்திரிகையாளரை கைது செய்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
    • அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை ரஷியா முன்வைத்துள்ளது.

    இதற்கிடையே, போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

    ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்துள்ளார் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

    உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ரஷிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய ஹவாசன்-31எஸ் என்று அழைக்கப்படும் சிறிய ரக அணு குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    • அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்காலம் என்று அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    பியாங்யாங்:

    அமெரிக்க-தென்கொரிய படைகளின் கூட்டுப்போர் பயிற்சி மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் வடகொரியா புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் புதிய அணு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்தபோது, ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய ஹவாசன்-31எஸ் என்று அழைக்கப்படும் சிறிய ரக அணு குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அணு குண்டுகள் அளவில் சிறியதாக இருந்தாலும் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்காலம் என்று அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் ரிபாகினா வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
    • இதில் ரூப்லேவை வீழ்த்தி சின்னர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    • ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறையின் துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறும்போது, 'சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அடிப்படையாகும். இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். கருத்து சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்து உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் பகிர்கிறோம்' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இது நமது சமூகங்களைத் துண்டாக்குகிறது. இந்த தேசத்தின் ஆன்மாவை அழிக்கிறது.

    அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைதொடர்ந்து சிறு வணிக நிர்வாக மகளிர் வணிக உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சரியானவை அல்ல. சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து வருகிறோம். பென் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க இன்னும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது நமது சமூகங்களைத் துண்டாக்குகிறது. இந்த தேசத்தின் ஆன்மாவை அழிக்கிறது. பள்ளிகளை சிறைகளாக மாறாமல் பாதுகாக்க இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் இருந்து இரண்டு தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு ஏகே-47 இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஆயுதத் தாக்குதல் தடையை நிறைவேற்ற மீண்டும் அழைப்புவிடுகிறேன். அரசு இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
    • இதில் ரிபாகினா வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் ரிபாகினா மோதுகிறார்.

    • அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.

    தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அமெரிக்காவில் உள்ள குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
    • தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்து இருக்கலாம் எனவும் செல்ரோ மெண்டரோ போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அடிக்கடடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 44 ஆயிரம் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள்.

    அவர்கள் அங்குள்ள சீக்கிய கோவிலான குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சீக்கியர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    அப்போது 3 மர்ம மனிதர்கள் குருத்துவாராவுக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தனர். திடீரென அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டனர். இதில் குண்டு பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்க வில்லை. இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்து இருக்கலாம் எனவும் செல்ரோ மெண்டரோ போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும்.
    • கொஞ்சம் தாமதித்தாலும், ‘ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம்’ தவறிவிடும்.

    நியூயார்க் :

    இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள்.

    அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?

    செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன.

    இந்த வாரத்தில், அதிலும் குறிப்பாக நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) இந்த கிரக வரிசையைக் காண முடியும். அவ்வாறு காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்கிறார், நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக்.

    இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும்.

    ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், 'ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம்' தவறிவிடும். ஆம், சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    வானம் தௌிவாக இருக்கும் நிலையில், மேற்குப்புறத்தை நன்றாக காணமுடியும் சூழலில் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாமாம்.

    எல்லாம் சரி, வெறுங்கண்ணால் இந்த கிரகங்களை காண முடியுமா என்பது உங்கள் கேள்வியா?

    உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால், முடியும். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றைக் காண்பது ஓரளவு எளிது என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

    அதிலும் வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும், செவ்வாய் கிரகம், நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். ஆனால் புதனும், யுரேனசும் கொஞ்சம் 'டல்' அடிக்கக்கூடியவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் சிரமம். பைனாகுலர்ஸ் இருந்தால் வசதியாக இருக்கும்.

    அதிலும், காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பாக இது இருக்கும். வெள்ளிக்கு மேலே அது, பச்சையாக மிளிரும் என்கிறார் நாசா விஞ்ஞானி குக்.

    இது போல பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் வரிசையாக தோன்றுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகும். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஜூனில் நடந்தது.

    • ‘பிளாடிரான்’ கட்டிடம் 22 மாடிகளை கொண்டது.
    • இந்த கட்டிடம் கடந்த 1902-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

    நியூயார்க் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22 மாடிகளை கொண்ட 'பிளாடிரான்' என்ற வானளாவிய கட்டிடம் உள்ளது. கடந்த 1902-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தன் மெல்லிய, முக்கோண வடிவத்திற்கு மிகவும் பிரபலமானது.

    நியூயார்க்கின் அடையாளமாக திகழும் இந்த கட்டிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் பல்வேறு கைகளுக்கு மாறி இறுதியாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் கைக்கு வந்தது.

    அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 'பிளாடிரான்' கட்டிடத்தை ஏலம் விட முடிவு செய்தது. இதை தொடர்ந்து நியூயார்க்கை சேர்ந்த தனியார் ஏல நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏலத்தை நடத்தியது.

    இதில் ஆபிரகாம் டிரஸ்ட் என்ற முதலீட்டு நிதியத்தின் சார்பில் ஏலத்தில் பங்கேற்ற அதன் நிர்வாக பங்குதாரர் ஜேக்கப் கார்லிக், 190 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.1,564 கோடி) 'பிளாடிரான்' கட்டிடத்தை ஏலத்தில் எடுத்தார்.

    • வெள்ளத்தில் சிக்கி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
    • மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.

    இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும், மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    அதன்படி நேற்று முன்தினம் மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே பல நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    இதனையடுத்து தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த பயங்கர புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    ×